கடாரம் கொண்டான் – விமர்சனம்

விக்ரமின் ஸ்டைலிஷான ஆட்டம்!

விமர்சனம் 19-Jul-2019 6:53 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Rajesh Selva
Production: Raaj Kamal Films International
Cast: Vikram, Akshara Haasan, Abi Hassan & Lena
Music: Ghibran
Cinematography: Srinivas R. Gutha
Editor: Praveen K L

‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி ஹாசன் ஆகியோர் நடிக்க, கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ எப்படி?

கதைக்களம்

டாக்டரான அபி ஹாசன் கர்பிணியான தனது மனைவி அக்‌ஷரா ஹாசனுடன் மலேசியாவில் வசித்து வருகிறார். அபிஹாசன் பணிபுரியும் மருத்துவமனையில் விபத்துக்குள்ளாகி அடிபட்ட நிலையில் விக்ரம் அனுமதிக்கப்படுகிறார். அக்‌ஷரா ஹாசனை கடத்திச் சென்று விக்ரமை தங்களிடம் ஒப்படைக்குமாறு அபிஹாசனை மிரட்டுகிறார்கள் சில மர்ம நபர்கள்! அதே நேரம் விக்ரமை பிடிக்க, மலேசியா போலீஸும் வலை விரிக்கிறது! விக்ரம் யார்? விக்ரமை மர்ம நபர்களிடம் ஒப்படைத்து அக்‌ஷரா ஹாசனை அபிஹாசன் மீட்கிறாரா? இல்லை போலீஸாரால் விக்ரம் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்விகளுக்கான பரபரப்பான விடைகளே ‘கடார கொண்டான்’.


படம் பற்றிய அலசல்

2010-ல் வெளியான ‘POINT BLANK’ என்ற ஃப்ரெஞ்சு மொழி படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது ‘கடாரம் கொண்டான்’ என்பதை டைட்டிலிலேயே காட்டியிருப்பதால கதை சம்பந்தப்பட்ட விஷயங்களை அதிகம் ஆராய வேண்டிய அவசியமில்லை.

படு ஸ்டைலிஷான தோற்றத்தில் விக்ரம் அறிமுகமாகும் முதல் காட்சியே பரபர ரகம்! ஆனால் அதற்கு பிறகு இடைவேளை வரையிலான காட்சிகளில் விக்ரமுக்கு அதிக வேலையில்லாமல் நகர, முதல் பாதி கொஞ்சம் சோர்வை தருவது மாதிரியே அமைந்துள்ளது. ஆனால் இடை வேளைக்கு பிறகு விக்ரமையும், அபி ஹாசனையும் துரத்தும் போலீஸ், விக்ரமை தேடும் இரண்டு அணி போலீஸாருக்கு இடையிலான ஈகோ பிரச்சனைகள் என்று பயணிக்கும் இரண்டாம் பாதி அதிரடி ஆக்‌ஷன் என்று படு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்கிறது! விக்ரம் யார்? அவரை போலீஸ் துரத்துவதற்கான காரணம் என்ன? என்பதற்கான விளக்கங்களை இன்னும் கொஞ்சம் விரிவிவாக சொல்லி, லாஜிக் விஷயங்களிலும் கவனம் செலுத்தி இயக்கியிருந்தால் ‘கடாரம் கொண்டான்’ ஒரு அதிரடி ஆகஷன் படமாக அமைந்து இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா மற்றும் நடிகர் விக்ரமுக்கு மேலும் புகழை சேர்த்திருக்கும்! மேலே குறிப்பிட்ட சில குறைகளை தவிர்த்து, ஜிப்ரானின் பின்னணி இசை, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதாவின் ஒளிப்பதிவு, கே.எல். பிரவீனின் படத்தொகுப்பு, கில்ஸ் கான்செல், நரே, ரோனி ஆகியோர் அமைத்துள்ள ஆக்‌ஷன் காட்சிகள் என்று ‘கடாரம் கொண்டான்’ டெக்னிக்கலாக பேசப்படும் படமாக அமைந்துள்ளது!


நடிகர்களின் பங்களிப்பு

விக்ரமை பொறுத்தவரை தான் ஏற்கும் கேரக்டருக்கு மிகவும் மெனக்கெடுவார். இந்த படத்திலும் அப்படியே! அதிகம் வசனங்கள் பேசாமல் பார்வையாலேயே மாறுபட்ட மிரட்டலான நடிப்புடன் படம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியுள்ளார் விக்ரம். அபி ஹாசனுக்கு இது முதல் படம்! கர்பிணியான மனைவியை பறி கொடுத்து தவிக்கும் இளைஞன் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதைப்போல அபி ஹாசனின் மனைவியாக வரும் அக்‌ஷரா ஹாசனுக்கு பரிதாபத்தை அள்ளும் கேரக்டர்! கடத்தப்பட்டவர்களிடம் மாட்டிக்கொண்டு அவர் அவதிப்படும் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிறார்! போலீஸ் அதிகாரிகளாக வரும் லெனா குமார், விகாஸ் ஸ்ரீவத்சவ் மற்றும் புரவலன், சித்தார்த்தா, ஜவஹர், ரவீந்திரா என்று படத்தில் நடித்திருக்கும் அத்தனை பெருடைய கேரக்டர்களையும் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா


பலம்

1. விக்ரம்

2. பின்னணி இசை, ஒளிப்பதிவு

3. ஆக்‌ஷன் காட்சிகள்


பலவீனம்

1. முதல் பாதி

2. விரிவாக சொல்லப்படாத விக்ரம் கேரக்டர்

3. லாஜிக் விஷயங்கள்


மொத்தத்தில்…

விக்ரமை வைத்து ஒரு அதிரடி ஆக்‌ஷன் படத்தை தர முயன்ற இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா, படத்தின் திரைக்கதையிலும், லாஜிக் விஷயங்களிலும் மேலும் கவனம் செலுத்தி, ‘கடாரம் கொண்டான்’ கேரக்டரின் பின்னணியை இன்னும் படம் பார்ப்பவர்களுக்கு எளிதாக புரியும்படி சொல்லியிருந்தால் ‘கடாரம் கொண்டானி’ன் அதிரடி ஆட்டத்தை மேலும் ரசித்திருக்கலாம்!


ஒருவரி பஞ்ச் : விக்ரமின் ஸ்டைலிஷான ஆட்டம்!


ரேட்டிங் : 4.5/10

#RKFI #RaajKamalFilmsInternational #KamalHaasan #AksharaHaasan #AbiHaasan #Vikram #ChiyaanVikram #Ghibran #KadaramKondan #SrinivasRGutha #PraveenKL

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சேரனின் C2H பற்றி கமல் - வீடியோ


;