கூர்கா – விமர்சனம்

சமயோஜித புத்தியால் பல உயிர்களை காப்பாற்றும் ‘கூர்கா’

விமர்சனம் 15-Jul-2019 2:38 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Sam Anton
Production: 4 Monkeys Studios
Cast: Yogi Babu, Anand Raj, Livingston, Raj Bharath, Charle & Elyssa Erhardt
Music: Raj Aryan
Cinematography: Krishnan Vasant
Editor: Ruben

சமீபத்தில் வெளியாகி பரவலாக வரவேற்பு பெற்ற ‘100’ படத்தை தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘கூர்கா’. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள ‘கூர்கா’ எப்படி?

கதைக்களம்

வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்த கூர்கா ஒருவர் தமிழ் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அவர்களது வாரிசு ர் ‘யோகி’ பாபு. இவருக்கு போலீஸாக வேண்டும் என்பது ஆசை! ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போக, சென்னையிலுள்ள ஒரு பெரிய வணிக வளாகத்தில் காவலாளிகளில் ஒருவராக வேலை செய்து வருகிறார் ‘யோகி’ பாபு! இந்நிலையில் பணத்திற்காக அந்த வணிகவளாகத்தை தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அந்த வணிக வளாகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் உட்பட பலர் சிக்கிக்கொள்கிறார்கள். இந்நிலையில் அங்கு காவளாளியாக இருக்கும் ‘யோகி’ பாபு தன்னுடன் இருக்கும் ஒரு நாய் உதவியுடன் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே ‘கூர்கா’வின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

ஏற்கெனவே வெளியான ஒரு ஆங்கில படத்தின் கதையை நினைவுப்படுத்துவது மாதிரி அமைந்துள்ளது இந்த ‘கூர்கா’வின் கதைக்களம்! அந்த கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது மாதிரி வரும் இந்த படத்தை ஒரு முழுநீள காமெடி படமாக தர மூயற்சித்துள்ளார் இயக்குனர் சாம் ஆண்டன்! போலீஸாக வேண்டும் என்று காவல்துறை பயிற்சியில் பங்கு கொண்டு சொதப்புவதில் ஆரம்பித்து, இறுதியில் வணிகவளாகத்தை சிறை பிடித்த தீவிரவாதிகளை விரட்டுவதான காட்சிகள் வரை படம் முழுக்க யோகி பாபு தான் நிறைந்து நிற்கிறார். காமெடி என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகள் நம்மை சோதிக்க வைத்தாலும், பெரும்பாலான காட்சிகளில் யோகி பாபு சிரிக்க வைப்பதால் ‘கூர்கா’ ஓரளவுக்கு சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது. இதுபோன்ற காமெடி படங்களில் லாஜிக்கை எதிர்பார்க்க கூடாது என்றாலும், அதற்காக இப்படியா? என்ற கேள்வி எழும் விதமாக திரைக்கதையில் நிறைய லாஜிக் மீறல்கள், கதைக்கு தொடர்பில்லாத பல காட்சிகள் என்று ‘கூர்கா’ பயணிப்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். ‘சர்கார்’ படத்தில் நடித்த எலீசா இதில் கதாநாயகி போன்ற கேரக்டரில் நடிக்க, அவருக்கும் யோகி பாபுவிற்கும் இடையிலான காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கிய இயக்குனர் சாம் ஆண்டன், சார்லி கேரக்டர் மூலம் சில தமிழக அரசியல் பிரமுகர்களை மற்றும் சில அரசியல் நிகழ்வுகளை நய்யாண்டி செய்யவும் செய்துள்ளார். சாம் ஆண்டன் அமைத்த திரைக்கதை மற்றும் காட்சிகளை ரசிக்க வைப்பதில் ராஜ் ஆர்யனின் பின்னணி இசை மற்றும் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு ஆகிய விஷயங்கள் முக்கிய பங்காற்றியுள்ளது. படத்தின் முதல் பாதி நீளத்தை குறைத்து திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருந்தால் ‘கூர்கா’ இன்னும் கவனம் பெறும் படமாக அமைந்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘யோகி’ பாபு தனது வழக்கமான பாணியில் தான் எற்று நடித்த கேரக்டரை கலகலப்பாக்கியிருக்கிறார். கதையின் நாயகியை போன்ற கேரக்டரில் நடித்திருக்கும் எலீசா, போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஆடுகளம்’ நரேன், ‘யோகி’ பாபுவுடன் சக காவலாளியாக வரும் சார்லி, தீவிரவாதிகளின் தலைவராக வரும் ராஜ்பரத், மற்றும் பாம் அப்புறப்படுத்தும் பணியை செய்ய வருபவராக நடித்திருக்கும் ஆனந்தராஜ் என்று படத்தில் நடித்திருக்கும் எல்லோரும் அவரவரது பாத்திரங்களின் தன்மையை உணர்ந்து சிறந்த நடிப்பை வழஙிகியுள்ளனர்.

பலம்

1.‘யோகி’ பாபு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள்

2. ஒளிப்பதிவு, பின்னணி இசை

பலவீனம்

1.தொடர்பில்லாத காட்சிகளுடன் பயணிக்கும் முதல்பாதி!

2. அதிகபடியான லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்…

நேர்த்தியான திரைக்கதை, லாஜிக் விஷயங்கள் போன்றவற்றை மறந்து, சும்மா பொழுதுபோக்கிற்காக கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு வரலாம் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது இந்த ‘கூர்கா’.

ஒருவரி பஞ்ச் : சமயோஜித புத்தியால் பல உயிர்களை காப்பாற்றும் ‘கூர்கா’

ரேட்டிங் : 4.5/10


#Gurkha #YogiBabu #SamAnton #EditorRuben #KrishnanVasant #4MonkeysStudios #ElyssaErhardt

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;