தோழர் வெங்கடேசன் – விமர்சனம்

வரவேற்கப்பட வேண்டியவர் இந்த ‘தோழர் வெங்கடேசன்’

விமர்சனம் 13-Jul-2019 6:12 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Maha Sivan
Production: Kaala FilimS
Cast: Hari Sankar, Monika, Director Amutheshwar
Music: Sakishna
Cinematography: Vedha Selvamசுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த மகாசிவன் இயக்கத்தில், அறிமுகங்கள் அரிசங்கர், மோனிகா சின்னகொட்லா கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வெளியாகியுள்ள ‘தோழர் வெங்கடேசன்’ எப்படி?

கதைக்களம்

சொந்த பந்தங்களை இழந்த அரிசங்கர் காஞ்சிபுரத்தில் சொந்தமாக சோடா கம்பெனி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் சோடா சப்ளை செய்ய போகும்போது அரிசங்கர் மீது அரசு பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு கைகளையும் இழக்கிறார்! நீதிமன்றத்துக்கு போகும் அரிசங்கருக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிடுகிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் அந்த தொகையை தராமல் அரிசங்கரை இழுத்தடிக்க, ஒரு அரசு பேருதை ஜப்தி செய்து அரிசங்கரிடம் ஒப்படைக்கிற்து நீதிமன்றம்! அந்த பேருந்தை வைத்து அரிசங்கர் என்னென்ன பாடு படுகிறார் என்பதுதான் ‘தோழர் வெங்கடேச’னின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

இந்த படத்தின் கதை, தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் யோசிக்காத ஒரு கதை என்று சொல்லலாம்! ஒரு ஏழை இளைஞர், அவருடைய வாழ்க்கையில் ஒரு விபத்து, அதனை தொடர்ந்து நடக்கும் நீதிக்கான போராட்டம், நீதி கிடைத்தும் அதனால் வரும் சிக்கல்கள், வேதனகள் என்று பயணிக்கிறது தோழர் வெங்கடேசனின் கதை! இந்த கதையில் முதல்பாதி அரிசங்கர் நண்பர்களுடன் அடிக்கும் அரட்டை, பிசினஸ், காதல், காமெடி என்று கலகலப்பாக நகர்த்தியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் மகாசிவன். இரண்டாம் பாதி கையை இழந்த அரிசங்கர் படும் கஷ்டங்கள், கைகள் இழந்த காரணத்தால், தன் காதலி மோனிகா தன்னை பிரிந்துவிட்டு சென்று விடுவாரோ என்ற ஏக்கம், ஜப்தி செய்யப்பட்டு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பேருந்தால் வரும் சோதனைகள் என்று ஒரு சமான்ய இளைஞருக்கு போக்குவரத்து துறையால் ஏற்படும் அவலங்களை, வலிகளை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர் மகாசிவன். ஒருவரது வாழ்க்கையில் நடக்க கூடிய ஒரு சீரியஸான விஷயத்தை காதல், காமெடி, எமோஷன் கலந்து ரசிக்கும்படி சினிமாத்தனம் இல்லாமல் இயக்கியுள்ள விதம் பாராட்டுக்குரியது! அதே நேரம் படத்தில் சில குறைகள், லாஜிக் மிஸ்டேக்குகள் இல்லாமலும் இல்லை! அதை விட்டுவிடலாம். இந்த படத்தின் படத்தொகுப்பை ராஜா கிருஷ்ணா என்பவருடன் இணைந்து படத்தின் இயக்குனரே கவனிக்க, தேவா செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுகம் சகிஷ்ணா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் ‘தோழர் வெங்கடேச’னுக்கு கைகொடுத்துள்ளதைப்போல சிறப்பாக அமையவில்லை சகிஷ்ணாவின் இசை! இருந்தாலும் புதியவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது நிச்சயம்!

நடிகர்களின் பங்களிப்பு

ஹீரோவாக நடித்திருக்கும் அரிசங்கர் அசல் ஒரு கிராமத்து இளைஞராக தோன்றி சிறப்பாக நடித்துள்ளார். அவரது பாடிலாங்வேஜ், அப்பாவித்தன தொனியில் அவர் பேசும் வசனங்கள், இரண்டு கைகளை இழந்தவராக வரும் காட்சிகளில் அவரது நடை, உடை, பாவனை, தனக்கு கிடைத்த பேருந்தை ஓட்ட ஏற்பாடு செய்த ஓட்டுனரால் வரும் பிரச்சனைகளை கண்டு வேதனைப்படுவது என்று அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் அரிசங்கர். நடிப்பை பொறுத்தவரையில் இது அவருக்கு முதல் படம் மாதிரி தெரியவில்லை. திடீரென்று அம்மாவை இழந்து அனாதையாகும் கதாநாயகி மோனிகாவுக்கு அரிராஜ் உதவியாக இருக்க, நாளடைவில் இருவரும் காதலர்களாகின்றர். இரண்டு கைகளை இழந்த நிலையிலும் அரிராஜுக்கு உறுதுணையாக இருந்து பணிவிடை செய்யும் ஒரு நிஜ காதலியின் கேரக்டரில் நடித்திருக்கும் மோனிகாவும் நடிப்பில் அறிமுகம் மாதிரி தெரியவில்லை. அரிசங்கருக்கு உதவி செய்யும் வழக்கறிஞராக நடித்துள்ள இயக்குனர் அமுதேஷ்வர் மற்றும் திமிர் குணம் கொண்ட கவுன்சிலராக வருபவர், போலீஸ்காரராக வருபவர், பேருந்து ஓட்டுனராக வருபவர் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றி சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.கதை

2.அரிசங்கர், மோனிகாவின் பங்களிப்பு

3.சினிமாத்தனம் இல்லாத காட்சி அமைப்புகள்

பலவீனம்

1.ஒரு சில லாஜிக் மீறல்கள்

2.இசை

மொத்தத்தில்…

நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைத்தும், அந்த நீதி அரசாங்கத்தின் குறைபாடுகளாலும், அலட்சியத்தாலும் கிடைக்காமல் அவஸ்தைப்படும் ஒரு சாமான்ய இளைஞரின் வாழ்க்கையை, வலிகளை யதார்த்தமாக படம் பிடித்து காட்டியிருக்கும் இப்படம் யதார்த்த வாழ்வியல் கதைகளை கொண்ட படங்களை விரும்புவோருக்கு ஏற்ற படமாகும்!

ஒருவரி பஞ்ச் : வரவேற்கப்பட வேண்டியவர் இந்த ‘தோழர் வெங்கடேசன்’

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;