வெண்ணிலா கபடிக்குழு-2 - விமர்சனம்

தந்தையின் கனவை நிறைவேற்றும் மகனின் கதை!

விமர்சனம் 13-Jul-2019 4:22 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Selva Sekaranc
Production: Saai Arputham Cinemas
Cast: Vikranth, Arthana Binu, Pasupathy, Kishore, Anupama Kumar & Soori
Music: V Selvaganesh
Cinematography: E Krishnasamy
Editor: Ajay

சுசீந்திரன் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘வெண்ணிலா கபடிக்குழு’. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள இப்படத்தை சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த செல்வசேகரன் இயக்கியுள்ளார். விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், ரவிமரியா, சூரி ஆகியோரை ஆட வைத்து உருவாக்கியுள்ள இரண்டாம் பாகம் முதல்பாக ‘வெண்ணிலா கபடிக்குழு’வின் வெற்றியை தக்க வைக்கும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

தென்காசியில் வசித்து வரும் பசுபதி ஒரு காலத்தில் கபடி விளையாட்டில் சிறந்த வீரராக விளங்கியவர்! இவரது மகன் விதார்த். கேஸட் கடை நடத்தி வரும் விதார்த்துக்கு ஒரு காலத்தில் தனக்காக கபடி விளையாட்டை தூக்கி போட்டவர் தனது தந்தை பசுபதி என்று தெரிய வருகிறது! எதற்காக தனது தந்தை கபடி விளையாட்டை தூக்கி போட்டார் என்ற விஷயம் விதார்த்துக்கு தெரிய வருகிறது! இதனை தொடர்ந்து தனது தந்தை அவரது சொந்த ஊரானா கணக்கன்ப்பட்டியில் விட்ட கபடி விளையாட்டை விதார்த் எப்படி அதே ஊருக்குச் சென்று விளையாடி தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி அவரது கௌரவத்தை மீட்கிறார் என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

விதார்த், அர்த்தனா பினு இடையிலான காதல், அப்பா பசுபதி, மகன் விதார்த் ஆகியோருக்கு இடையிலான செல்லக் கோபங்கள்… அதனால் வரும் பிரச்சனைகள் என்று பயணிக்கும் முதல் பாதியில் பெரிய சுவாரஸ்யம் இல்லை! அதனை தொடர்ந்து கதை பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு செல்ல, அந்த ஊரில் கபடி விளையாட்டு நின்றுவிட காரணம், முதல் பாக ‘கபடிக்குழு’ படத்தில் இறந்து போகும் விஷ்ணு விஷாலின் ஆவிதான் என்று பூஜாரி கூற, அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், நின்றுபோன கபடி விளையாட்டு மீண்டும் நடக்க மேற்கொள்ளும் முயற்சிகள், அதில் விக்ராந்த் இணைவது என்று கதை கொஞ்சம் சூடு பிடித்து விறுவிறுப்பாகிறது. ஆனால் கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை படம் பார்ப்பவர்களால் எளிதில் யூகிக்க கூடிய வகையிலேயே திரைக்கதையும், காட்சிகளும் அமைந்திருப்பதால் இரண்டாம் பாதியில் வரும் சூரி சம்பந்தப்பட்ட சில காமெடி காட்சிகள் தவிர இரண்டாம் பாதியும் பெரிய சுவாரஸ்யத்தை தரவில்லை. கதை 1989 காலகட்டத்தில் நடப்பது மாதிரி காண்பித்திருப்பதால் அந்த காலத்து விஷயங்களை சரியாக திரையில் கொண்டு வருவதில் கலை இயக்குனரும், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி, இசை அமைப்பாளர் செல்வகணேஷ் ஆகியோர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஆனால் படத்தொகுப்பாளர் அஜய் படத்தை விறுவிறுப்பாக்குவதில் போதுமான கவனம் செலுத்தவில்லை! இதுபோன்ற சில குறைகளால் முதல்பாக ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்திலிருந்த மேஜிக்கை இரண்டாம் பாகத்தில் ரசிக்க முடியவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக வரும் விக்ராந்த் அடி தடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் காட்சிகளில் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால் எமோஷன் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஊரில் மதிக்கப்படும் பெரியவராக வரும் ரவிமரியாவின் மகளாக வரும் அர்த்தனா பினு காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார். விக்ராந்தின் பாசக்கார அப்பாவாக வரும் பசுபதி, அம்மாவாக வரும் அனுபமா குமார், அரத்தனா பினுவின் அப்பாவாக வரும் ரவி மரியா, அம்மாவாக வரும் சோனியா, கபடி கோச்சாக வரும் கிஷோர் மற்றும் சூரி, அப்புக்குட்டி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. 1989 காலகட்டத்தை படம் பிடித்து காட்டியிருக்கும் விதம்!

2. ஒளிப்பதிவு, இசை

3. சூரியின் சில காமெடி காட்சிகள்

பலவீனம்

1.மெதுவாக பயணிக்கும் முதல்பாதி

2. யூகிக்க கூடிய காட்சிகள்

3. படத்தொகுப்பு

மொத்தத்தில்…

ஏற்கெனவே வெற்றிபெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது முதல்பாக கதையிலிருந்த சுவாரஸ்யமான விஷயங்களைவிட இரண்டாம் பாகத்தில் அழுத்தமான திரைக்கதை அமைப்பும், புதிய விஷயங்களும் இருக்க வேண்டும்! அந்த வகையில் முதல்பாக ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் தந்த சுவாரஸ்யம் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் இப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு சுவாரஸ்யப்படுத்தும் என்பதை சொல்ல முடியவில்லை!

ஒருவரி பஞ்ச் : தந்தையின் கனவை நிறைவேற்றும் மகனின் கதை!

ரேட்டிங் : 4/10

#VennilaKabaddiKuzhu2 #VennilaKabaddiKuzhu #Susienthiran #VKK2 #SelvaSekaran #SaaiArputhamCinemas #Vikranth #Pasupathy #ArthanaBinu #Soori #Kishore

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;