தர்மபிரபு – விமர்சனம்

அரசியல் சமுதாய விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டும் தர்மபிரபு!

விமர்சனம் 29-Jun-2019 2:45 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Muthukumaran
Production: Rockline Productions
Cast : Yogi Babu, Karunakaran, Ramesh Thilak, Radha Ravi
Cinematography: Mahesh Muthuswami
Music : Justin Prabhakaran
Editor : San lokesh


முத்துக்குமரன் இயக்கத்தில் ‘யோகி’ பாபு முதன் முதலாக ஹீரோ அவதாரம் எடுத்து நடித்துள்ள படம் ‘தர்மபிரபு’. இவருடன் ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா ஜனனி ஐயர் உட்பட பலர் நடித்துள்ள ‘தர்மபிரபு’ யோகி பாபுவின் கதாநாயக அவதாரத்துக்கு கை கொடுக்கும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

எமலோக ராஜாவான ராதாரவிக்கு வயதாகி விட்டதால் அவரது மகன் ‘யோகி’ பாபுவை எம தர்மராஜா பதவியில் அமர்த்துகிறார். ஆனால் அந்த பதவிக்கு ஆசைப்படும் சித்ரகுப்தனான ரமேஷ் திலக், சதி செய்து ‘யோகி’ பாபுவை எம லோகத்திலிருந்து பூலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு விதி முடிந்த ஒரு குழந்தையின் உயிரை ‘யோகி’ பாபு காப்பாற்றுவதோடு, பல மனிதர்களை கொன்று புதைத்த ஜாதிவெறி பிடித்த அரசியல்வாதியான அழகம் பெருமாளின் உயிரை சிவபெருமான் (மொட்டை ராஜேந்திரன்) எடுக்க இருந்த நேரத்தில் அவரது உயிரையும் காப்பாற்றுகிறார் ‘யோகி’ பாபு! இதனால் கோபமுறும் சிவபெருமான், அழகம் பெருமாளின் உயிரை ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும், இல்லையென்றால் எமலோகத்தை அழித்து விட்டு புதிய எமலோகத்தை உருவாக்கி அதில் வேறு ஒருவரை தர்மராஜாவாக பதவியில் அமர வைப்பேன் என்று ‘யோகி’ பாபுவை எச்சரிக்கிறார் மொட்டை ராஜேந்திரன். இதனை தொடர்ந்து ‘யோகி’ பாபு தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார் என்பதே ‘தர்மபிரபு’வின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

‘தர்மராஜா’ மூலம் தமிழக இந்திய அரசியல் மற்றும் தமிழகத்தின் ஒரு பிரபல அரசியல் கட்சியின் ஜாதி அரசியலையும், பிரபலமான ஒருவரின் அரசியல் சாணக்கியத்தனத்தையும், கள்ளக்காதல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களையும் நைய்யாண்டி செய்து முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பெரியார், அம்பேத்கர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர்கள் இப்போது இருந்திருந்தால் அவர்கள் எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்பதையும் கற்பனை கலந்து காட்சிகளாக்கி சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் படம் முழுக்க வரும் யோகி பாபு, ரமேஷ் திலக் சம்பந்தப்பட்ட ஒரு சில காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கிறது. அதிலும் ‘யோகி’ பாபு படம் முழுக்க தூய தமிழ், வட சென்னை ஸ்லாங் கலந்து பேசி கொண்டே இருப்பதும், படம் பூராவும் நாடகத்தன்மையுடனே பயணிப்பதாலும் ‘தர்மபிரபு’ எதிர்பார்த்த சுவாரஸ்யத்தை தரவில்லை.

இது போன்ற அரசியல் நையாண்டி படங்களில் வசனங்களும், கேரக்டர்களும் சிறப்பாக இருக்க வேண்டும்! அந்த விஷயங்களில் இயக்குனர் போதிய கவனத்தை செலுத்தவில்லை. ‘யோகி’ பாபுவை மட்டுமே நம்பி களம் இறங்கிய இயக்குனர் முத்துக்குமரன், திரைக்கதை அமைப்பிலும், வசனங்களிலும் மேலும் கவனம் செலுத்தி இயக்கி இருந்தால் ‘தர்மபிரபு’ வரவேற்கப்பட வேண்டிய படமாக அமைந்திருக்கும் என்பதோடு ‘யோகி’ பாபுவின் ஹீரோ அவதாரமும் பேசப்பட்டிருக்கும். எம லோகம் பூலோகம் என்று மாறி மாறி வரும் காட்சிகளில் எம லோகத்துக்காக அமைத்துக்கொண்ட ‘செட்’கள் கவனம் பெறுகின்றன. அதைப் போல கதையோட்டத்திற்கு தகுந்தபடி ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ள பின்னணி இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், சான் லோகேஷின் படத்தொகுப்பும் கவனம் பெறும்விதமாக அமைந்துள்ளது. ஆக, இப்படம் பெரிய சுவாரஸ்யத்தை தரவில்லை என்றாலும் இயக்குனருக்கு அரசியல் மற்றும் சமுதா விஷயங்களிலுள்ள ஆர்வத்தை வெளிச்சம் போட்டு காட்டும்படி அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

‘தர்மபிரபு’ கேரக்டருக்கு ‘யோகி’ பாபு சரியாக பொருந்தியுள்ளார். அவரது நடை, உடை, தனக்கே உரித்தான ஸ்டைலிலான வசனங்கள் ரசிக்க வைக்கிறது! சித்ரகுப்தனாக வரும் ரமேஷ் திலகும் கவனம் பெறுகிறார். யோகி பாபுவின் பதவியை அடைய நினைத்து அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் முடிவடைவதும் அதனால் வரும் சிக்கல்களும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. சிவபெருமானாக வரும் மொட்டை ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிய சுவாஸ்யத்தை தரவில்லை என்றாலும் அவரது கெட்-அப்பும், நடிப்பும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. யோகி பாபுவின் தந்தையாக வரும் ராதாரவி, தாயாக வரும் ரேகா, பூலோகத்தில் படு பயங்கர ஜாதிவெறி பிடித்த அரசியல் தலைவராக வரும் அழகம் பெருமாள், அவரது மகளாக வரும் ஜனனி ஐயர், ஒரு சிறிய காட்சியில் மட்டுமே வரும் மேக்னா நாயுடு ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.யோகி பாபு, ரமேஷ் திலக்

2. அரசியல் நையாண்டி காட்சிகள்

பலவீனம்

1.திரைக்கதை

2.வசனம்

மொத்தத்தில்…

‘யோகி’ பாபு என்ற ஒரு பெரிய காமெடி நடிகரை தனது படத்தின் ஹீரோவாக்கிய இயக்குனர் முத்துக்குமரன் அதற்கேற்ற விதமாக சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையையும் காட்சிகளையும் அமைத்து படமாக்கி இருந்தால் ‘தர்மபிரபு’ நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கும்!

ஒருவரி பஞ்ச் : அரசியல் சமுதாய விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டும் தர்மபிரபு!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;