சிந்துபாத் - விமர்சனம்

சுவாரஸ்யமில்லாத சாகஸம்!

விமர்சனம் 28-Jun-2019 11:55 AM IST Top 10 கருத்துக்கள்

Direction: S. U. Arun Kumar
Production: Vansan Movies & K Productions
Cast: Vijay Sethupathi, Anjali & Surya
Music: Yuvan Shankar Raja
Cinematography: Vijay Karthik Kannan
Editor: Ruben

‘சேதுபதி’ படம் மூலம் விஜய்சேதுபதியின் மார்க்கெட்டை கமர்ஷியல் ஃபார்முலாவிற்குத் திருப்பிவிட்ட அருண்குமார் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி நடிக்க உருவாகியிருக்கிறது ‘சிந்துபாத்’. கடல் தாண்டி, மலை தாண்டிச் சென்று சாகஸங்கள் புரிந்து ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறாரா இந்த ‘சிந்துபாத்’?

கதைக்களம்

எதையுமே கத்திக் கத்திப் பேசும் அஞ்சலி, எதுவாயிருந்தாலும் கத்திச் சொன்னால் மட்டுமே கேட்கும் திறன்கொண்ட விஜய்சேதுபதி... இவர்களுக்கிடையே காதல் மலர்கிறது. விட்ட குறை, தொட்ட குறையாக தன் மாமா வாங்கிய கடனுக்காக தாய்லாந்து சென்று வேலை செய்யும் நிர்பந்தம் அஞ்சலிக்கு ஏற்பட, அவரை வழியனுப்ப ஏர்போர்ட் செல்லும் விஜய்சேதுபதி ‘திடீர் திருமணம்’ செய்து அதிர்ச்சி தருகிறார். கட்டிய மஞ்சள் தாலியுடன் தாய்லாந்து செல்லும் அஞ்சலி, தான் ஒரு பெரிய சிக்கலில் மாட்டியிருப்பதாகவும், தன்னை மீட்கும்படியும் அடுத்த நாளே ‘கால்’ செய்ய... அங்கிருந்து துவங்குகிறது ‘சிந்துபாத்’தின் சாகஸ பயணம். அப்படி என்ன பெரிய சிக்கல்? அதிலிருந்து அஞ்சலியை மீட்க விஜய்சேதுபதி என்னென்ன செய்கிறார்? மீட்டாரா இல்லையா? இதுவே சிந்துபாத்.

படம் பற்றிய அலசல்

படத்தின் மையக்கதைக்கு கொஞ்சம்கூட சம்பந்தமேயில்லாமல் படத்தின் முதல்பாதி நகர்ந்தாலும், விஜய்சேதுபதி & அஞ்சலியின் ரொமான்ஸ் காட்சிகள், விஜய்சேதுபதி மகன் சூர்யா, ஜார்ஜ் மரியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் என படம் சுவாரஸ்யமாகவே நகர்கிறது. இடையிடையே பாடல்கள் வந்தாலும் கூட, அதையும் ‘மான்டேஜ்’ ஆக பயன்படுத்தியிருப்பது ஆறுதல். படத்தின் இரண்டாம்பாதியில் அஞ்சலி தாய்லாந்திற்குச் சென்ற பிறகுதான் மையக்கதையே துவங்குகிறது. அதன்பிறகு காட்சிகளை பரபரப்பாக உருவாக்க நினைத்து இங்கேயும் இங்கேயும் விஜய்சேதுபதியை அலைக்கழித்தது மட்டுமல்லாமல், ரசிகர்களையும் அலைக்கழிக்கிறார்கள். ஒரு மிகப்பெரிய ‘டான்’ஐ எதிர்கொள்ள வேண்டிய சவாலை சந்திக்கும் விஜய்சேதுபதி, அதனை சாதாரணமாக முடித்துக்காட்டுதென்பது கொஞ்சம்கூட நம்பும்படியாகவே இல்லை. கொஞ்சம் யதார்த்தமாகவும், லாஜிக்கலாகவும் இரண்டாம்பாதி காட்சிகளை உருவாக்கியிருந்தால் ‘தொய்வு’ இல்லாமல் படத்தைப் பார்த்த திருப்தி ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும். பலரும் அறிந்திராத ஒரு ‘திடுக்கிடும் சம்பவத்தை’ கொஞ்சம் முன்கூட்டியே அரங்கேற்றியிருந்தால் முழுப்படமும் சுவாரஸ்யமாக நகர்ந்திருக்கும். யுவனின் பின்னணி இசை காட்சிகளுக்கேற்ற பங்களிப்பைச் செய்திருக்கிறது. முதல்பாதி முழுக்க தென் தமிழகம், இரண்டாம்பாதி முழுக்க தாய்லாந்து என இருவேறு நிலப்பரப்பிற்கேற்ற லைட்டிங்கிலும், ஆங்கிள்களிலும் கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

நடிகர்களின் பங்களிப்பு

‘ரொமான்டிக் லுக்’ என விஜய்சேதுபதி செய்யும் ஒரு சிறு முகபாவனைத் தவிர்த்து விஜய்சேதுபதி இந்தப்படத்தில் புதிதாக தன் நடிப்பால் எந்தவிதத்திலும் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. அவருக்குத் தீனிபோடும் வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென்பதே ரசிகர்களின் ஆசை. வருடங்கள் கடந்தும், அதே அழகோடும் அதே துள்ளலுடனும் தன் நடிப்பால் வெகுவாகக் கவர்கிறார் அஞ்சலி. ஆனாலும் அவருக்குமே இரண்டாம்பாதி திரைக்கதையில் பெரிய வேலை எதுவும் இல்லை. விஜய்சேதுபதியின் மகன் சூர்யா தன் இயல்பான நடிப்பால் வெகுவாகக் கவர்கிறான். நல்ல எதிர்காலம் இருக்கிறது. கொடூர வில்லன் போல் அறிமுகமாகும் லிங்கா, அதன்பிறகு செய்வதெல்லாம் ‘கெக்கபிக்கே’ ரகம். ஒரு சின்ன கேரக்டரில் யதார்த்தமாக வந்துபோகிறார் விவேக் பிரசன்னா.

பலம்

1. முதல் பாதி
2. ஒளிப்பதிவு

பலவீனம்

1. முழுமை பெறாத கதைக்களம்
2. இரண்டாம்பாதி திரைக்கதை

மொத்தத்தில்...

உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இப்படிப்பட்ட ஓர் குற்றச்செயல் நமக்கே தெரியாமல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்ற பகீர் உண்மையே போகிற போக்கில் சொல்லியிருக்காமல், பொட்டிலடித்தாற்போல் யதார்த்தமான காட்சியமைப்புகளுடன் காட்ட முனைந்திருந்தால் ‘சிந்துபாத்’தின் சாகஸம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கலாம்!

ஒரு வரி பஞ்ச்: சுவாரஸ்யமில்லாத சாகஸம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;