நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்

நிறைகள் குறைந்த, குறைகள் நிறைந்த நல்ல கருத்தை சொல்ல வந்துள்ள படைப்பு!

விமர்சனம் 15-Jun-2019 5:36 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Karthik Venugopalan

Production: Sivakarthikeyan Productions

Cast: Rio Raj, Radha Ravi, Shirin Kanchwala, RJ Vigneshkanth & Nanjil Sampath

Music: Shabir

Cinematography: U. K. Senthil Kumar

Editor: Fenny Oliver & Tamil Arasan
கனா’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்க, டிவி புகழ் ரியோ ராஜ், யூ-டியூப் சேனல் புகழ் விக்னேஷ் காந்த் மற்றும் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ‘கனா’வை போன்று ரசிகர்களின் கவனத்தை பெறும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

நண்பர்களான ரியோ ராஜ், விக்னேஷ்காந்த் இருவரும் யூ-ட்யூப் சேனலுக்காக ‘பிராங்க் ஷோ’ நடத்தி வருபவர்கள். ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி நிருபரான ஷிரின் கஞ்ச்வாலா கழுத்தில் கத்தி வைத்து பிராங்க் ஷோ நடத்தும்போது, அவர்களது தைரியத்தை பார்க்கும் பிரபல தொழிலதிபரான ராதாரவி இருவரையும் அழைத்து உங்கள் லட்சியம் என்ன என்று கேட்கிறார். எங்களுக்கு கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்பதே லட்சியம் என்று கூறுகின்றனர். இந்நிலையில் நான் சொல்லும் மூன்று ‘டாஸ்க்’குகளை செய்து முடித்தால் நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறேன் என்கிறார் ராதாரவி! அதற்கு சம்மதிக்கும் இருவரிடமும் ராதாரவி சில கண்டிஷன்கள் போடுகிறார். அதில் முதல் டாஸ்க் தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகும் 22 தொலைக்காசி சேனல்களிலும் இருவரும் ஒரே நேரத்தில் பிரேக்கிங் நீயூஸில் வரவேண்டும் என்பது. இரண்டாவது டாஸ்க் பைத்தியக்காரர் ஒருவரை தேர்தலில் நிற்க வைத்து அவரை எம்.எல்.வாக்க வேண்டும் என்பது. மூன்றாவது டாஸ்க் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண்ணை கொலை செய்ய வரும் ஒருவரை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது! ராதாரவி இந்த மூன்று டாஸ்குகளை கொடுக்க என்ன காரணம்? ரியோ ராஜ், விக்னேஷ்காந்த் இருவரும் ராதாரவி கொடுத்த டாஸ்குகளை வெற்றிகரமாக செய்து முடித்தர்களா? என்பதற்கான விடைகளை தரும் படமே ‘நெஞ்சமுண்டு நேர்மையுணடு ஓடு ராஜா’.

படம் பற்றிய அலசல்

‘சமூகத்தில் அநீதிகள் நடக்கும்போது அதை செல்ஃபோனில் படம் பிடிப்பதை தவிர்த்து விட்டு அந்த அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும்! அப்படி தட்டிக் கேட்டால் அது போன்ற அநீதிகள் நடக்காது, பல உயிர்கள் பிழைக்கும்’ என்ற கருத்தை காமெடி, சீரியஸ் என்று இப்படத்தின் மூலம் சொல்ல வந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்! ஆனால் படத்தின் முதல் ஒரு மணிநேர காட்சிகள், ரியோ ராஜ், விக்னேஷ் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் எதுவும் சுவாரஸ்யம் தரவில்லை! இதனை தொடர்ந்து லாஜிக் இல்லாத விஷயங்காள் என்றாலும் பைத்தியகாரனை எம்.ஏல்.வாக்க வேண்டும் என்ற டாஸ்கை முடிக்க, ரியோ ராஜும், விக்னேஷ் காந்தும் அரசியல் நிபுணரான நாஞ்சில் சம்பத்தை சந்திக்க, அதிலிருந்து படம் கலகலப்பாகி, கோடம்பாக்க கொலை முயற்சி சம்பவத்தில் வந்து விறுவிறுப்பாகி ஓரளவுக்கு ரசிக்க வைப்பதாலும் நல்ல ஒரு கருத்தை சொல்ல முன் வந்திருப்பதாலும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ரசிகர்களை ஓரளவுக்கு கவர வாய்ப்பிருக்கிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் யூ.கே.செந்தில் குமாரின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. ஆனால் இசை அமைத்துள்ள் ஷபீர், படத்தொகுப்பு செய்துள்ள ஃபென்னி ஆலிவர் ஆகியோர் தங்களது பணிகளில் பெரிதாக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை!நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ரியோ ராஜ் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளார் என்றாலும் எமோஷன் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். விக்னேஷ் காந்தின் நடிப்பு ஓகே! ஆனால் காமெடி காட்சிகள் பெரிதாக கவனம் பெறவில்லை! ரியோ ராஜை காதலிப்பவராகவும், தொலைக்காட்சி நிருபராகவும் வரும் ஷிரின் கஞ்ச்வாலா ஸ்மார்ட்டாக தோன்றி, தனது கேரக்டருக்கு தகுந்த நடிப்பை வழங்கி பாஸ் மார்க் பெறுகிறார். தனது பிடி வாதத்தால் மகனை இழந்து தவிக்கும் பணக்காரர் கேரக்டரில் நடித்துள்ள ராதாரவி தனது அனுபவ நடிப்பாற்றலை இப்படத்திலும் வெளிப்படுத்தி உள்ளார். அரசியல் நிபுணராக வரும் நாஞ்சில் சம்பத் தனக்கேயுரிய பேச்சின் மூலம், நம் நாட்டில் நடக்கும் வாரிசு அரசியல், டெல்லியில் விவசாயிகள் போராட்டம், ஓட்டளிக்க பணம் கொடுப்பது, காட்டை அழித்து கோயில் கட்டுவது, பாத புஜை செய்வது போன்ற பல நிகழ்வுகளை நய்யாண்டி செய்து நடித்திருக்கும் காட்சிகள்தான் இப்படத்தின் ஹைலைட்ஸ் என்று சொல்லலாம். மற்றும் படத்தில் சிறிய கேரக்டர்களில் மயில்சாமி, பிஜிலி ரமேஷ், விவேக் ஆனந்த், சுட்டி அரவிந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பலம்!

1.சொல்ல வந்த கருத்து

2. நாஞ்சில் சம்பத் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள்

3.ஒளிப்பதிவு

பலவீனம்

1. வலுவும், நேர்த்தியும் இல்லாத திரைக்கதை அமைப்பு

2. இசை, படத்தொகுப்பு

3. லாஜிக் விஷயங்கள்

மொத்தத்தில்…

‘அநீதிகள் நடக்கும்போது அதை எல்லோரும் தட்டி கேட்க வேண்டும்’ என்ற கருத்தை காமெடியாக சொல்ல வந்த இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் அதை நேர்த்தியான ஒரு திரைக்கதையாக்கி, விறுவிறுப்பான காட்சிகள் அமைத்து இயக்கி இருந்தால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ கவனம் பெறும் ஒரு படமாக அமைந்திருக்கும்!

ஒரு வரி பஞ்ச் : நிறைகள் குறைந்த, குறைகள் நிறைந்த நல்ல கருத்தை சொல்ல வந்துள்ள படைப்பு!

ரேட்டிங் : 4/10
#SK #SivaKarthikeyan #KarthikVenugopal #NenjamunduNermaiyunduOduRaja #RJVignesh #NNOR
#Rio

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;