சுட்டுப் பிடிக்க உத்தரவு - விமர்சனம்

லாஜிக், சுவாரஸ்யம் இல்லாத துரத்தல் நாடகம்!

விமர்சனம் 14-Jun-2019 4:18 PM IST Top 10 கருத்துக்கள்

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’, ‘போக்கிரிராஜா’ ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி, மகிமா, ரித்திஷ், பேபி மானஸ்வி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ எப்படி அமைந்துள்ளது?

கதைக்களம்

கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கிறார்கள் சுசீந்திரன், விக்ராந்த் தலைமையிலான நால்வர் கூட்டணி! இவர்களை மிஷ்கின் தலைமையிலான போலீஸ் படையினர் துரத்துகினனர்! இந்த துரத்தலில் பொதுமக்கள் சிலர் இறக்கின்றனர். இந்நிலையில் சுசீந்திரன், விக்ராந்த் உட்பட்ட நால்வரும் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கொள்கின்றனர். இவர்களை பிடிக்க மிஷ்கின் தலைமையிலான போலீஸ் குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக மத்திய உயர் போலீஸ் ஆதிகாரிகளும் அந்த குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றனர். குற்றவாளிகளை போலீஸ்காரர்கள் நெருங்க நெருங்க, கதையில் பெரும் திருப்பம் ஒன்று ஏற்படுகிறது! அது என்ன என்பதற்கான விடையே ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் சயன்டிஃபிக் விஷயங்களை மையப்படுத்தி இயக்கி ரசிக்க வைத்த ராம்பிரகாஷ் ராயப்பா, இப்படத்தில் போலீஸ் – கிரிமினல்கள் சம்பந்தப்பட்ட ஒரு கதையை வித்தியாசமாக தர முயற்சித்துள்ளார். ராம்பிரகாஷ் ராயப்பா எடுத்துக்கொண்ட கதையில் புதுமை இருக்கிறது. ஆனால் அதை காட்சிகளாக படமாக்கிய விதத்தில் போதுமான கவனம் செலுத்தவில்லை. ஒரு குழந்தையின் ஆபரேஷன் செலவுக்காக வங்கியில் கொள்ளை அடிப்பதாக துவங்கும் படம் ஒரு கட்டத்தில் ஒரு முக்கியமான ஒரு விஷயத்தில் சென்று முடிகிறது. துரத்தல், துப்பாக்கிச் சூடு என்று இறுதிவரையிலும் படம் பரபரப்பாக போகிறது. ஆனால் பெரும்பாலான காட்சிகளும் நாடகத்தன்மையுடன் அமைந்திருப்பதாலும், மீடியாகாரர்கள் என்ற பெயரில் அங்கு நடக்கும் சம்பவங்களை லைவாக ரிபோர்ட் செய்யும் கேலிகூத்தான காட்சிகள் எல்லாம் நம்மை போரடிக்கதான் வைக்கிற்து! சீரியஸாக சொல்ல வேண்டிய இந்த கதையில் இதுபோன்ற கேலிக் கூத்துக்களை இயக்குனர் தவிர்த்திருந்தால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’க்கு நல்ல பலன் கிடைத்திருக்கும். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரையிலும் துரத்தல், சேசிங், துப்பாகிச் சூடு என்று பயணிக்கும் இந்த கதையில் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி ஆகியோரின் பங்களிப்பு பாராட்டும்படி அமைந்துள்ளது. பாடல்கள் இல்லாத இந்த கதைக்கு ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

போலீஸ் அதிகாரியாக வரும் மிஷ்கின் நடிப்பை பற்றி நாம் குறிப்பிட வேண்டியதில்லை! கொள்ளை அடித்த்வர்களை துரத்தி பிடிக்க மேற்கொள்ளும் முயற்சியில் அவர் புத்திசாலித்தனமாக எடுக்கும் சில முடிவுகள், அதனை தனது டீமை வைத்து செயல்படுத்துவது என்று விறுவிறுப்பான ஒரு பொலீஸ் ஆதிகாரியாக மிஷ்கின் சிறப்பாக நடித்துள்ளார். கொள்ளைகாரர்களாக வரும் சுசீந்திரன், விக்ராந்த் உட்பட்ட நான்கு பேரும் துரத்தல், அடிதடி, ஜம்பிங் என்று மிகவும் கஷடப்பட்டு நடித்திருக்கிறார்கள். குடியிருப்புவாசியாக வரும் அதுல்யா ரவியின் கேரக்டர் வலுவாக அமையாததால் அவருடைய நடிப்பு கவனம் பெறவில்லை! ஆபரேஷனுக்காக காத்திருக்கும் வாய் பேசமுடியாத சிறுமியாக வரும் மானஸ்வி சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

பலம்

1. ஸ்டோரி லைன்

2. எமோஷன் கலந்த ஆக்‌ஷன் காட்சிகள்

3. கிளைமேக்ஸில் வரும் திருப்பம்

பலவீனம்

1. காட்சிகளை படமாக்கிய விதத்தில் கோட்டை விட்டிருப்பது

2. லாஜிக் விஷயங்களில் கவனம் செலுத்தாதது

3. காமெடிக்காக திணிக்கப்பட்டது மாதிரியாக வரும் சில கேரக்டர்கள்

மொத்தத்தில்…

மாறுபட்ட ஒரு கதையை யோசித்த இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா, அதில் கொஞ்சம் புதுமையான விஷயங்களை இணைத்து, காட்சிகளை ஓரளவுக்காவது நம்பும்படியாகவும், நேர்த்தியாகவும் அமைத்து படமாக்கியிருந்தால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’க்கு ரசிகரகள் அடி பணிந்திருப்பார்கள்!

ஒருவரி பஞ்ச் : லாஜிக், சுவாரஸ்யம் இல்லாத துரத்தல் நாடகம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;