கேம் ஓவர் – விமர்சனம்

விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த ‘கேம்’

விமர்சனம் 13-Jun-2019 1:23 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Ashwin Saravanan
Production: Y NOT Studios & Reliance Entertainment
Cast : Taapsee Pannu, Vinodhini Vaidyanathan, Anish Kuruvilla, Sanchana Natarajan & VJ Ramya
Music : Ron Ethan Yohann
Cinematography: A. Vasanth
Editor : Richard Kevin

‘மாயா’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் அஸ்வின் சரவணன். இவர் இயக்கத்தில் டாப்சி கதையின் நாயகியாக நடித்துள்ள ‘கேம் ஓவர்’ சுவாரஸ்யம் தரும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

டாப்சி ஒரு வீடியோ கேம் டெவலப்பர்! தனது வீட்டில் இருந்தபடியே வீடியோ கேம்களை உருவாக்கி வருகிறார். ஒரு புத்தாண்டு தினத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவத்தை தொடர்ந்து, இருட்டு என்றாலே பயப்படும் டாப்சிக்கு சில திகில் சம்பவங்களும் நடக்கின்றன. அதே நேரம் தனது கையில் குத்திக்கொண்ட ஒரு டாட்டூவாலும் டாப்சிக்கு சில பிரச்சனைகள் வருகிறது. அத்துடன் சில மர்ம நபர்கள் டாப்ஸியை துரத்துவது மாதிரியான அனுபவங்களும் ஏற்படுகிறது! புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டாப்சிக்கு நடந்தது என்ன? அந்த டாட்டூவின் பின்னணி என்ன? அந்த மர்ம நபர்கள் யார்? இந்த கேள்விகளுக்கான விடைகளே ‘கேம் ஓவர்’.

படம் பற்றிய அலசல்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், வீடியோ கேம், டாட்டூ ஆகிய விஷயங்களை ஒருங்கிணைத்து பரபரப்பான ஒரு திரைக்கதை அமைத்த இயக்குனர் அஸ்வின் சரவணன், அதை விறுவிறுப்பான, பரபரப்பான, அடுத்தது என்ன என்ற கேள்வியை ஏற்படுத்தும் விதமாக படமாக்கி ரசிக்க வைத்துள்ளார். நகரத்தில் ஆங்காங்கே இளம் பெண்கள் கொலை செய்யப்படுவது, டாப்சி கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ, அதன் பின்னணியில் உள்ள கேரக்டர்கள், மர்ம நபர்கள் என்று விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதையில், நம்மை கொஞ்சம் குழப்பமடைய செய்வது சைக்கோ மாதிரியாக வரும் அந்த மூன்று மர்ம நபர்கள் கேர்க்டர்கள் தான்!’நடந்து முடிந்த ஒரு விஷயத்தில் நாம் அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம் என்று நினைத்து வருத்தப்படுவது உண்டு. ஆனால் ஒரு சம்பவம் நடக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் பிறகு வருத்தப்பட வேண்டிய அவசியம் வராது’ என்ற கருத்தை டாப்ஸி கேரக்டர் மூலம் வலியுறுத்தியுள்ள அஸ்வின் சரவணன், அது சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்கிய விதத்திலும் தனித்து நிற்கிறார்.

இயக்குனர் அஸ்வின் சரவணனும், காவ்யா ராம்குமாரும் எழுதிய திரைக்கதையை நிஜ காட்சிகளாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் ஒளிப்பதிவாளர் வசந்தின் பங்களிப்பு குறுப்பிடும்படியாக அமைந்துள்ளது. அதைப் போல படத்திற்கு இசை அமைத்திருக்கும் ரான் எதன் யோஹானும் திரைக்கதையின் தன்மையை உணர்ந்து இசையில் மிரட்டி உள்ளார். படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவினும் ’கேம் ஓவர்’ ஆட்டத்தை விறுவிறுப்பாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். ‘மாயா’வில் சூப்பர் நேச்சுரல் விஷயத்தை கையிலெடுத்து படமாக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தில் உளவியல் ரீதியான ஒரு விஷயத்தை கையிலெடுத்து விறுவிறுப்பும், பரபரப்புமாக இயக்கி ‘கேம் ஓவர்’ விளையாட்டிலும் ஜெயித்திருக்கிறார் என்று சொல்லலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

டாப்சி ஏற்று நடித்திருக்கும் கேரக்டருக்கு அவரை தவிர வேறு யாரையும் நினைத்து பாரக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவரது கதாபாத்திரப்படைப்பும் அவரது நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. டாப்சியின் பாதுகாவலராக வரும் வினோதினி, உளவியில் நிபுணராக வரும் அனிஷ் குருவிலா, ‘டாட்டூ’ பின்னணி கதையில் அமுதாவாக வரும் சஞ்சனா நடராஜன், அவரது அம்மாவாக வரும் பார்வதி, டாட்டூ நிபுணராக வரும் ரம்யா ஆகியோரின் தேர்வும் அவர்களை அஸ்வின் சரவணன் நடிக்க வைத்த விதமும் அருமை!

பலம்

1. திரைக்கதை, இயக்கம்

2. டாப்ஸி

3. இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு

பலவீனம்

1.கிளைமேக்ஸில் வந்து கொஞ்சம் குழபத்தை தரும் அந்த மூன்று சைக்கோ கேரக்டர்கள்

மொத்தத்தில்…

மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் சஸ்பென்ஸ், விறுவிறுப்பு, பரபரப்பு என்று பயணிக்கும் இந்த ‘கேம் ஓவர்’ த்ரில்லர் பட ர்சிகரக்ளுக்கு ஏற்ற ஒரு பாமாக அமைந்துள்ளது.

ஒருவரி பஞ்ச் : விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த ‘கேம்’

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கேம் ஓவர் ட்ரைலர்


;