அருண்குமார் தொடர்ந்து விஜய்சேதுபதியையே இயக்க காரணம் என்ன?

விஜய் சேதுபதின், அஞ்சலி இணைந்து நடித்துள்ள ‘சிந்துபாத்’ ஜூன் 21-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 12-Jun-2019 11:49 AM IST VRC கருத்துக்கள்

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து S.U அருண்குமாரும், விஜய்சேதுபதியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’. இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் அருண்குமார் படம் குறித்து பேசும்போது,

‘’சிந்துபாத்’ கதையை முதலில் பல முன்னணி நாயகர்களிடம் சொன்னேன். ஆனால் யாரும் நடிக்க முன் வரவில்லை. இந்நிலையில் விஜய்சேதுபதி என்னை அழைத்து நாமே இணைந்து பணியாற்றுவோம் என்றார். இந்த படத்தில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா படம் முழுவதும் வரக்கூடிய கேரக்டரில் நடித்திருக்கிரர். இந்த கதையை யோசிக்கும்போதே இந்த கேரக்டருக்கு சூர்யாதான் பொருத்தமாக இருப்பார் என்று தீர்மானித்திருந்தேன். அதை விஜய்சேதுபதியிடமும் சொல்லியிருந்தேன். அவரும் அந்த கேரக்டருக்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று சம்மதம் தெரிவித்திருந்தார். சூர்யாவை இந்த படத்தின் மூலம் அறிமுக்கப்படுத்துவதில் எனக்கு ரொம்பவும் சந்தோஷம்’’ என்றார்.

தொடந்து விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குனர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு எனக்கு சௌகர்யமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம் என்னை தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று சொன்னேன். ஆனால் யாரும் அருணை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து ‘சேதுபதி’ பட வாய்ப்பை கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த முயற்சியும் அருணுக்கு கைகூடவில்லை. பிறகு மீண்டும் அவரை அழைத்து இந்த பட வாய்ப்பு கொடுத்தேன். இந்த படம் வெற்றிப் பெற்றதும் வெளியில் சென்று வேறு ஹீரோகக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று மீண்டும் அருணிடம் கூறியுள்ளேன்.

‘சிந்துபாத்’ நமக்கு எல்லோருக்கும் தெரிந்த அறிமுகமான கணவன், மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான காரணிகள் இருக்கிறது. அதனை இப்போது விவரிக்க முடியாது. ஒருவனுடைய மனைவியை ஒரு கும்பல் கடத்திச் சென்று கடல் கடந்து ஓரிடத்தில் சிறை வைக்கப்படுகிறது. அந்த மனைவியை கணவனானவன் எப்படி கஷ்டப்பட்டு போராடி மீட்கிறார் என்பதுதான் ‘சிந்துபாத்’ படத்தின் கதை. இதில் கதாநாயகனுக்கு காது கொஞ்சம் மந்தமாதான் கேட்கும். உரக்கப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஆஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடியவர். அவர் இந்த கேரக்டரில் பொருத்தமாக நடித்துள்ளார். அவரை தவிர இந்த கேரக்டருக்கு வேறு யாரையும் யோசிக்கக் கூட முடியவில்லை. அந்தளவுக்கு அவர் அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தியுள்ளார். ‘சிந்துபாத்’ அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார் விஜய்சேதுபதி!

‘சிந்துபாத்’ ஜூன 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

#VijaySethupathi #Anjali #ArunKumar #Sindhubaadh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;