7 – விமர்சனம்

‘7’ என்று வித்தியாசமாக டைட்டில் வைத்த இயக்குனர் படத்தையும் வித்தியாசமாக தந்திருக்கலாம்!

விமர்சனம் 5-Jun-2019 5:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Nizar Shafi
Production : Sri Green Production
Cast : Rahman, Havish, Regina, Nandita Swetha, Anisha
Ambrose, Tridha Chowdry, Adithi Aarya, Pujitha Ponnad

Music : Chaitan Bharadwaj
Cinematography: Nizar Shafi
Editor :Praveen KL


‘சுட்டகதை’, ‘நளனும் நந்தினியும்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ மற்றும் சில தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிசார் ஷஃபி இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள படம் ‘7’. ரஹ்மான், ஹவிஷ், ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா ஸ்வேதா, த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள் ‘7’ எப்படி?

கதைக்களம்

விஜய் பிரகாஷ் (ரஹ்மான்) போலீஸ் அதிகாரியாக இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனது கணவர் கார்த்திக்கை (ஹவிஷ்) காணவில்லை என்று புகார் கொடுக்க வருகிறார் ரம்யா (நந்திதா ஸ்வேதா). ரம்யாவின் புகாரை ஏற்றுக்கொள்ளும் விஜய் பிரகாஷ், தனது கணவர் கார்த்திக்கை (ஹவிஷ்) காணவில்லை என்று ப்ரியா (த்ரிதா சௌத்ரி) என்ற பெண்ணும் புகார் அளித்துள்ளதை கூறுகிறார். அதைப் போல அபிநயா (அதிதி ஆர்யா) என்ற பெண்ணும் தனது கணவர் கார்த்திக் (ஹவிஷ்) மிஸ்ஸிங் என்று புகார் அளிக்கிறார். இந்நிலையில் விஜய் பிரகாஷ் தலைமையிலான போலீஸ் குழுவினரிடம் கார்த்திக் சிக்கிக் கொள்கிறார். ஆனால் தனக்கு அந்த மூன்று பெண்களையும் தெரியாது என்று கூறுகிறார் கார்த்திக்! இந்நிலையில் பைத்தியம் போன்ற ஒருவர் வந்து இவர் பெயர் கார்த்திக் இல்லை கிருஷ்ணமூர்த்தி என்று சொல்ல, ஒரு கட்டத்தில் அந்த பைத்தியக்காரர் கொலை செய்யப்படுகிறார்! அதனை தொடர்ந்து பயணிக்கும் கதையில் ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சி வர, அதில் சரஸ்வதி (ரெஜினா கெசென்ட்ரா) என்ற கிராமத்து பெண் எண்ட்ரியாக, சரஸ்வதி யார்? கார்த்திக் யார்? கார்த்திக்கை காணவில்லை என்று புகார் அளித்த அந்த பெண்கள் யார்? என்ற கேள்விகளுக்கான விடைகளே ‘7’.

படம் பற்றிய அலசல்!

மிகவும் சிக்கலான ஒரு கதையை தேர்வு செய்து இயக்கியுள்ள நிசார் ஷஃபி, அதை படம் பார்ப்பவர்களுக்கு புரியும்படி சொல்வதில் கோட்டை விட்டுள்ளார். முதல் பாதியில் கார்த்திக்கை காணவில்லை என்று புகார் அளிக்க வரும் அந்த மூன்று பெண்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கிறது! ஆனால் இடைவேளைக்கு பிறகு சரஸ்வதி கேரக்டர் எண்ட்ரி ஆனதிலிருந்து படத்தின் கதை வேறு ஒரு பாதையில் குழப்பத்துடன் பயணிப்பதால் இரண்டாம் பாதி பெரிய சுவாரஸ்யத்தை தரவில்லை. அதிலும் கிளைமேக்ஸில் வரும் முதுமையடைந்த சரஸ்வதி கேரக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கேலிகூத்தாகவே அமைந்து நம்மை சோதிக்கிறது. இந்த விஷயங்களில் இயக்குனர் நிசார் ஷஃபி கவனம் செலுத்தியிருந்தால் ‘7’ மாறுபட்ட, ரசிக்கக் கூடிய ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.

ரெஜினா, நந்திதா ஸ்வேதா, த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா ஆகிய நான்கு கதாநாயகிகளும் நல்ல தேர்வு, அவர்களை நன்றாக நடிக்க வைக்கவும் செய்துள்ள நிசார் ஷஃபி, படத்தின் ஒளிப்பதிவையும் சிறப்பாக செய்துள்ளார். அதைப் போல படத்திற்கு இசை அமைத்திருக்கும் சைத்தன் பரத்வாஜின் பணியும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. யூகிக்க முடியாத ஒரு த்ரில்லர் கதையை கையிலெடுத்த இயக்குனர் அதை சுவாரஸ்யமாக தருவதில் கவனம் செலுத்தாததாலும், லாஜிக் விஷயங்களில் கவனம் செலுத்தாததாலும் ‘7’ சுமாரான ஒரு படமாகவே அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

விஜய் பிரகாஷ் என்ற போலீஸ் அதிகாரியாக வரும் ரஹ்மான் தனது அனுபவ ஆற்றலை இப்படத்திலும் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். கிராமத்து பெண் சரஸ்வதி கேரக்டருக்கு ரெஜினா கெசண்ட்ரா பொருந்தவில்லை என்றாலும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். கார்த்திக்காக வரும் ஹவிஷ் மற்றும் நந்திதா ஸ்வேதா, அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி ஆகியோர் சம்பந்தப்பட்ட கிளாமர் காட்சிகள், அவர்களது பங்களிப்பு, நடிப்பு ஆகியவற்றை இளைஞர்களை கவரும் என்பது நிச்சயம்.

பலம்

1.முதல் பாதி

2.கதாநாயகிகள்

3.இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1.இரண்டாம் பாதி

2.லாஜிக் விஷயங்களில் கவனம் செலுத்தாதது

3.குழப்பத்தை தரும் கிளைமேக்ஸ்

மொத்தத்தில்

திரைக்கதையிலுள்ள குழப்பங்கள் மற்றும் லாஜிக் விஷயங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், வெறும் பொழுதுபோக்கை மட்டுமே மனதில் வைத்து வருபவர்களுக்கு இந்த ‘7’ பிடிக்க வாய்ப்பிருக்கிறது!

ஒருவரி பஞ்ச் : ‘7’ என்று வித்தியாசமாக டைட்டில் வைத்த இயக்குனர் படத்தையும் வித்தியாசமாக தந்திருக்கலாம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;