‘தேவி 2’ – விமர்சனம்

கணவர் மீது புகுந்த 2 பேய்களை விரட்டும் மனைவியின் கதை!

விமர்சனம் 1-Jun-2019 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: A. L. Vijay
Production: GV Films & Trident Arts
Cast: Prabhu Deva, Tamannaah, Kovai Sarala, Nandita Swetha, Dimple Hayathi & RJ Balaji
Music: Sam C. S.
Cinematography: Ayananka Bose
Editor: Anthony

ஏல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, சோனி சூட் ஆகியோர் நடித்து 2016-ல் வெளியாகி வெற்றியடைந்தை ‘தேவி’யின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ‘தேவி-2’ முதல் பாகத்தை மிஞ்சும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

‘தேவி-2’ படத்தின் கதை, முதல்பாக ‘தேவி’யின் கிளைமேக்ஸிலிருந்து துவங்குகிறது. ரூபியின் அட்டூழியம் மீண்டும் துவங்கி விடுமோ என்ற அச்சம் காரணமாக கணவன், மனைவியான பிரபுதேவாவும், தமன்னாவும் ஒரு போலி ஜோதிடரின் ஆலோசனை படி தண்ணீர் சுற்றி நிற்கும் மொரீஷியஸ் நாட்டுக்கு வந்து விடுகிறாரகள். மொரீஷியஸ் நாட்டில் தனது வேலையை தொடரும் பிரபுதேவா உடம்பில் காதல் ஆசை நிறைவேறாத ரூபியின் இரண்டு நண்பர்களின் (அலெக்ஸ், ரங்கா ரெட்டி) பேய்கள் புகுந்து விடுகின்றன. இந்த விஷயம் சில குழப்பமான சம்பவங்கள் நடைபெற்ற பிறகு தமன்னாவுக்கு தெரிய வருகிறது. இதனை தொடந்து அலெக்ஸ், ரங்கா ரெட்டி ஆகிய பேய்களின் நிறைவேறாத காதலை தமன்னா எப்படி நிறைவேற்றி வைத்து தனது கணவனை அந்த பேய்களிடமிருந்து மீட்கிறார் எனபதே ‘தேவி-2’வின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

முதல பாகத்தில் தமன்னாவுக்கு பேய் பிடித்திருக்கும். அந்த பேயிடமிருந்து தமன்னாவை காப்பாற்ற பிரபு தேவா போராடுவார். இரண்டாம் பாகத்தில் பிரபுதேவாவை இரண்டு பேய்கள் பிடிக்கிறது. அந்த பேய்களிடமிருந்து தன் கணவர் பிரபுதேவாவை காப்பாற்ற தமன்னா போராடுகிறார். அவ்வளவே இந்த இரண்டு படங்களுக்குமான வித்தியாசம். முதல்பாக ‘தேவி’யை சுவாரஸ்மாக தந்த ஏ.எல்.விஜய் இந்த இரண்டாம் பாகத்திற்காக எந்த புதிய முயற்சிகளையும் எடுத்ததாக தெரியவில்லை! தமன்னாவும், கோவை சரளாவும் சேர்ந்து பேய்களிடம் ஒப்பந்தம் செய்வது, அவர்களது காதலை நிறைவேற்றி வைக்க நாடகம் போடுவது என்று கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத விஷயங்களை வைத்து சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த காட்சிகளை பார்க்கும்போது எரிச்சலே ஏற்படுகிறது! படத்தில் கொஞ்சம் ஆறுதல் தரும் விஷயங்கள் கிருஷ்ணா, அலெக்ஸ், ரங்கா ரெட்டி ஆகிய மூன்று கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி நடித்திருக்கும் பிரபுதேவாவும், தமன்னா மற்றும் அலெக்ஸின் காதலியாக வரும் நந்திதா ஸ்வேதா ஆகியோரின் கவர்ச்சி பக்கங்களும், சாம் சி.எஸ்ஸின் இசையும், அயன்னகா போஸின் ஒளிப்பதிவும் தான்! மற்றபடி இந்த ‘தேவி-2’வில் சொல்லும்படியாக எந்த புதிய விஷயங்களும் இல்லை!

நடிகர்களின் பங்களிப்பு

கிருஷ்ணாவாக வரும் பிரபுதேவா உடம்பில் அல்கெஸ், ரங்கா ரெட்ட்டி ஆகியோரின் பேய்கள் புகுந்ததும் பிரபுதேவா அவர்களது மேனரிசங்களை மாறுபட்ட வகையில் வெளிப்படுத்தி நடித்திருக்கும் விதம் கவர்கிறது. பிரபுதேவாவின் முகத்தில் முதுமை தெரிந்தாலும் நடனம் ஆடுவதில் அவர் இன்னும் பழைய பிரபுதேவாவேதான்! பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக தோன்றி விருந்து படைத்திருக்கும் தமன்னா எமோஷன் மற்றும் சீரியஸ் காட்சிகளில் நடிப்பில் கோட்டை விட்டுள்ளார். தமன்னாவுக்கு உதவி செய்பவராக வரும் கோவை சரளாவின் அலப்பறைகள் சமீபகாலமாக அவர் நடித்த எல்லா படங்களிலும் இருந்தது மாதிரியே இப்படத்திலும் அமைந்திருப்பதால் பெரிய சுவாரஸ்யம் தரவில்லை! அலெக்ஸின் காதலியாக வரும் நந்திதா ஸ்வேதா, ரங்கா ரெட்டியின் காதலியாக வரும் டிம்பிள் ஹயாதி ஆகியோரில் நந்திதா ஸ்வேதா கவர்ச்சியிலும், நடிப்பிலும் மனதில் நிற்கிறார். ஓரிரு காட்சிகளில் முதல் ‘தேவி’ படத்தில் நடித்த சோனி சூட்டும் வந்து போகிறார்.

பலம்

1.பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா

2. இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1.திரைக்கதை

2. எந்த புதிய விஷயங்களும் இல்லாதது

3. கவனம் பெறாத காமெடி காட்சிகள்

மொத்தத்தில்…

ஓரளவுக்கு நல்ல கதை அமைப்புடன் குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய சுவாரஸ்யமான படங்களை வழங்கி வந்த ஏ.எல்.விஜய் ‘தேவி-2’ விஷயத்தில் தடுமாறியிருக்கிறார்! முதல்பாக ‘தேவி’ தந்த சுவாரஸ்யம் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் ‘தேவி-2’வுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே!

ஒருவரி பஞ்ச் : கணவர் மீது புகுந்த 2 பேய்களை விரட்டும் மனைவியின் கதை!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;