நீயா 2 - விமர்சனம்

இணையைத் தேடும் பாம்பு மனுஷியின் கதை!

விமர்சனம் 25-May-2019 4:32 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: L. Suresh
Production: Jumbo Cinemas
Cast : Jai Raai Laxmi Catherine Tresa Varalaxmi Sarathkumar Manas
Music : Shabir
Cinematography: Rajavel Mohan
Editor : Gopi Krishna

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘நீயா’. ஆனால், இந்த படத்திற்கும் இப்போது வெளியாகியுள்ள ‘நீயா-2’ படத்திற்கு எந்த சம்பந்தமுமில்லை. ‘எத்தன்’ படத்தை இயக்கிய எல். சுரேஷ் இயக்கத்தில் ஜெய், ராய்லட்சுமி, கேத்ரின் தெரெசா, வரலட்சுமி சரத்குமார் முதலானோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நீயா-2’ எப்படி?

கதைக்களம்

ஜாதகத்தில் நாகதோஷம் இருக்கும் ஜெய்யை ரொம்பவும் விரும்புகிறார் கேத்ரின் தெரெசா! ஜெய்யை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைக்கும் கேத்ரின் தெரெசா, தன்னுடைய ஜாதகத்திலும் நாகதோஷம் இருக்கிறது என்று பொய் சொல்லி அவரை திருமணம் செய்துகொள்கிறார்! இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இவர்களது தாம்பத்ய வாழ்க்கையில் அடிக்கடி ஒரு இச்சாதாரி பாம்பு (ராய் லட்சுமி) வந்து அவர்களுக்கு குடைச்சல்கள் கொடுக்கிறது! பகலில் மனித உருவத்திலும், சூர்யன் மறைந்த பிறகு பாம்பு உருவத்திற்கும் மாறும் ராய் லட்சுமி, ஜெய், கேத்ரின் தெரெசா வாழ்க்கையில் குறுக்கிட காரணம் என்ன என்ற கேள்விக்கான பதில்களே ‘நீயா-2’.

படம் பற்றிய அலசல்

ரசிக்க வைக்கும் விதமாக படமாக்கக் கூடிய ஒரு ஸ்டோரி லைன், ஜெய், ராய்லட்சுமி, கேத்ரின் தெரெசா, வரலட்சுமி சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள், மிரட்டும் வகையிலான ஒரு பாம்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த இயக்குனர் சுரேஷ் கையில் எடுத்த கதையை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி படமாக்குவதில் கோட்டை விட்டுள்ளார்! வண்ண வண்ண உடைகளில் கவர்ச்சியாக தோற்றமளிக்கும் ராய் லட்சுமி, கேத்ரின் தெரெசா, ஓரிரு காட்சிகளில் மட்டுமே வரும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரை ரசிக்கும் விதமாக காட்டிய இயக்குனர், பாம்பு உருவத்தில் வரும் ராய்லட்சுமி மற்றும் ஜெய், கேத்ரின் தெரெசா, பூஜாரி ஆகியோருக்கு இடையிலான போராட்டங்களை, பழிவாங்கும் காட்சிகளை கொஞ்சம் விறுவிறுப்பாக்கி படமாக்கியிருந்தால் ‘நீயா-2’ ஓரளவுக்கு ரசிக்கும்படியான படமாக அமைந்திருக்கும்! அதைப்போல 20 அடி நீளமான ராஜநாகத்தை வடிவமைத்த விதம் அருமை! ஆனால் அந்த ராஜநாகத்தை படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி கவனம் பெறும்படி பயன்படுத்தவில்லை என்பதும் குறையாக தெரிகிறது. ஆனால் படத்தின் கதை பயணத்திற்கு ஷபீரின் இசை, ராஜவேல் – மோகன் ஆகியோரின் ஒளிப்பதிவு ஆகிய டெக்னிக்கல் விஷயங்கள் கை கொடுத்துள்ளன. அதனால் ‘நீயா-2’வை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது!

நடிகர்களின் பங்களிப்பு

ஜெய்யை பொறுத்தவரையில் இப்படத்திலும் தனது வழக்கமான நடிப்பையே வழங்கியுள்ளார்! பகலில் மனித உருவம், சூர்ய அஸ்தமனத்துக்கு பிறகு பாம்பு உருவம் என்று வரும் ராய் லட்சுமி சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் பள்ளி மாணவியாக வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் அவரது முதுமை அந்த கேரக்டருடன் ஒட்டவில்லை! ஜெய்யை விரும்பி திருமணம் செய்த காரணத்திற்காக ராய் லட்சுமியால் விரட்டப்படும் கேரட்கரில் நடித்திருக்கும் கேத்ரின் தெரெசா சிறப்பாக நடித்துள்ளார். நாகதேவதையின் அருள் ஆசியோடு திருமணம் செய்துகொண்ட ஒரு சில மணி நேரத்திலெயே மாண்டு போகும் கேரக்டரில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், அவரது கணவராக வரும் நித்தீஷ் வீரா மற்றும் பூஜாரியாக வரும் அவினாஷ் ஆகியோரும் தங்கள் கேரடக்ருக்கு எற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. ஜெய், ராய்லட்சுமி, கேத்ரின் தெரெசா கேரக்டர்கள்

2. ஒளிப்பதிவு, இசை

பலவீனம்

1. திரைக்கதை அமைப்பு

2. விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இல்லாத காட்சி அமைப்புகள்

மொத்தத்தில்…

ஜெய், ராய்லட்சுமி, கேத்ரின் தெரெசா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரது பங்களிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது சந்தேகமே!

ஒருவரி பஞ்ச் : இணையைத் தேடும் பாம்பு மனுஷியின் கதை!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;