மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்

ஏழை பையனுக்கும், பணக்கார பெண்ணுக்கும் இடையில் நடக்கும் மோதல் காதல் கதை!

விமர்சனம் 18-May-2019 6:31 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: M. Rajesh
Production: Studio Green
Cast: Sivakarthikeyan, Nayanthara, Yogi Babu, Sathish, Raadhika Sarathkumar, Robo Shankar, Thambi Ramaiah
Music: Hiphop Tamizha Adhi
Cinematography: Dinesh Krishnan & Arthur A. Wilson
Editor: Vivek Harshan

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ‘வேலக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தில் இருவரது கெமிஸ்ட்ரி ‘ஒர்க்-அவுட்’ ஆகியுள்ளதா?

கதைக்களம்

கார் ஷோரூமில் வேலை செய்யும் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவரது அம்மா ராதிகா, தனக்குப் பிடித்த ஒரு டிவி நடிகையிடம் ஃபோட்டோ எடுக்க ஆசைப்படுகிறார். அந்த டி.வி. நடிகையை சந்திக்க சிவகார்த்திகேயனும், ராதிகாவும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு செல்கிறாகள். அந்த நடிகையிடம் ஃபோட்டோ எடுத்து திரும்புகையில் அங்கு வரும் அந்த டிவி தொடர் தயாரிப்பாளரும், பெரிய பணக்காரியுமான நயன்தாராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டு மோதல் உருவாகிறது. இதனை தொடர்ந்து அந்த டிவி நடிகையை தனது சீரியலிலிருந்து நீக்கி விடுகிறார் நயன்தாரா. தன்னால் பாதிக்கப்பட்ட அந்த நடிகைக்காக நயன்தாராவிடம் நியாயம் கேட்கப் போகிறார் சிவகார்த்திகேயன். நியாயம் கேட்க சென்ற இடத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும், நயன்தாராவுக்கு இடையில் மோதல் உருவாகி, அந்த மோதல் தொடர் கதையாகிறது. நடுத்தரக் குடுபத்தை சேர்ந்த சிவகார்த்திகேயனுக்கும், பெரிய பணக்காரியான நடயன்தாராவுக்கும் இடையில் தொடர்ந்து நடக்கின்ற மோதல் கடைசியில் அவர்களை எங்கு கொண்டு போய் சேர்த்து விடுகிறது என்பது தான் ‘மிஸ்டர் லோக்க’லின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

ஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த ஏழை பணக்கார மோதல் கதைதான் இந்த படமும்! அதை தனது வழக்கமான காமெடி ஃபார்முலாவில் தர முயற்சித்துள்ளார் இயக்குனர் எம்.ராஜேஷ். ஆனால் எம்.ராஜேஷ் இதற்கு முன் இயக்கிய படங்களில் இருந்த கதை அமைப்பு, காமெடி விஷயங்கள் அழுத்தம் நிறைந்த காட்சிகள் இந்த படத்தில் மிஸ்ஸிங்! சிவகார்த்திகேயனின் கேரக்டர் நயன்தாராவிடம் வேண்டுமென்றே வம்பு இழுப்பது மாதிரி அமைக்கப்பட்டிருப்பது, அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடக்கின்ற தொடர் மோதல்கள் ஆகியவற்றில் அழுத்தம் இல்லாததால் போரடிக்கவே செய்கிறது.

யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள்தான் படத்தை ஓரளவுக்கு ஜாலியாக கொண்டு செல்கிறது. சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகிய இரண்டு பிரபலங்கள் கையில் கிடைத்த இயக்குனர், அவர்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்புக்கு தகுந்த மாதிரி நல்ல ஒரு திரைக்கதையை அமைக்க தவறியுள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாரா இருவரது பங்களிப்பும் படத்தில் ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. அதைப் போல ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியின் இசை, தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஒரு பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஆர்தர் ஏ.வில்சன் ஆகியோரது ஒளிப்பதிவு, விவேக ஹர்ஷனின் படத்தொகுப்பு ஆகிய டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு கை கொடுத்துள்ளது. ஆனால் கதை, அழுத்தமான காட்சிகள், லாஜிக் போன்ற விஷயங்களில் கோட்டை விட்டிருப்பதால் இப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை சொல்ல முடியவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு

ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனின் மேனரிசங்களை சிவகார்த்திகேயன் அழகாக பிரதிபலித்து நடித்துள்ளார். ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நயன்தாராவுக்கு பெரிய இடத்து பெண் வேடம்! அதை தனது திறைமையான, ஸ்டைலிஷான நடிப்பால் நிறைவு செய்துள்ளார். ‘யோகி’ பாபு, சதீஷ், ‘ரோபோ’ சங்கர் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள், அதில் அவர்களது பங்களிப்பு குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் ராதிகாவும் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளார். நயன்தாராவின் உதவியாளராக வரும் தம்பி ரமையா, சிவகார்த்திகேயனின் தங்கச்சியாக வரும் ஹரிஜா, டி.வி.சீரியல் நடிகையாக வரும் நக்‌ஷத்திரா நாகேஷ், நயன்தாராவின் பிசினஸ் பார்ட்னாராக வந்து கிளைமேக்ஸில் திருப்பத்தை ஏற்படுத்தும் நாராயணன் ஆகியோரும் தங்கள் ஏற்ற கேரக்டருக்கு தகுந்த நடிப்பை வழங்கியுள்ளனர்!

பலம்

1.சிவகார்த்திகேயன், நயன்தாரா

2.காமெடி

பலவீனம்

1. அரதப்பழசான கதை

2. அழுத்தமும் நேர்த்தியும் இல்லாத காட்சி அமைப்புகள்

3. படத்தின் நீளம்

மொத்தத்தில்…

எம்.ராஜேஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது சந்தேகமே!

ஒருவரி பஞ்ச் : ஏழை பையனுக்கும், பணக்கார பெண்ணுக்கும் இடையில் நடக்கும் மோதல் காதல் கதை!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;