K-13 - விமர்சனம்

த்ரில்லர் விரும்பிகளுக்கு மட்டும்!

விமர்சனம் 3-May-2019 3:49 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Barath Neelakantan
Production : SP Cinemas
Cast : Arulnithi, Shraddha Srinath & Gayathrie
Music : Sam CS
Cinematography: Aravinnd Singh
Editor : Ruben


தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் அருள்நிதி, தற்போது ‘K-13’ என்ற சைகலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார்.

கதைக்களம்

தனது முதல் படத்திற்கான கதையைத் தேடி அலையும் இயக்குனர் அருள்நிதி, பப் ஒன்றில் கதைகள் எழுதும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை சந்திக்கிறார். சின்னச் சின்ன உரையாடல்களுக்குப் பின்னர், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட, தன் ஃப்ளாட்டிற்கு அருள்நிதியை அழைத்துச் செல்கிறார் ஷ்ரத்தா. சுத்தி நடப்பது எதுவுமே தெரியாத அளவிற்கு போதையில் இருக்கும் அருள்நிதியும் அவரின் பேச்சிற்குக் கட்டுப்பட்டு அவருடன் செல்கிறார். மறுநாள் காலை விடிந்ததும் ஒரு சோஃபாவில் அருள்நிதி கட்டப்பட்ட நிலையில் இருக்க, அதே அறையில் கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடக்கிறார் ஷ்ரத்தா. அந்த ரூமில் அப்படி என்னதான் நடந்தது? ஷ்ரத்தாவின் மரணம் கொலையா? தற்கொலையா? அருள்நிதியை கட்டிப்போட்டது யார்? அந்த ஃப்ளாட்டிலிருந்து அருள்நிதி தப்பித்தாரா இல்லையா? என பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ‘K-13’.

படம் பற்றிய அலசல்

ஒரு பப், ஒரு பெரிய அபார்ட்மென்ட்டின் மொட்டை மாடி, இன்னும் ஒன்றிரண்டு வெளிப்புற காட்சிகள் தவிர்த்து மொத்த படத்தையும் ஒரேயொரு ஃப்ளாட்டிற்குள்ளாகவே எடுத்து முடித்திருக்கிறார்கள் இப்படத்தை. படத்தின் இருபதாவது நிமிடத்திலேயே அடுத்து என்ன ஆகுமோ என்ற பரபரப்பான காட்சியமைப்பை உருவாக்கியிருந்தாலும், ஒரு ரூமிற்குள்ளேயே திரைக்கதை சுற்றிச் சுற்றித் திரிவதாலோ என்னவோ, மொத்தமே ஒண்ணேமுக்கால் மணி நேரமே ஓடிக்கூடிய இப்படம் ஒரு நீண்ட நேர படத்தைப் பார்ப்பதைப் போன்ற அலுப்பை ஆங்காங்கே ஏற்படுத்துகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் க்ளைமேக்ஸை உருவாக்கி, கடைசியில் காட்சியில் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். நேர்த்தியான ஒளிப்பதிவு, காட்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் பின்னணி இசை என டெக்னிக்கலாக தேவையான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். இன்னும்கூட காட்சிகளின் பரபரப்பைக் கூட்டி, திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தியிருந்தால், ‘பெஸ்ட் த்ரில்லர்’ படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பிடித்திருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

இதுபோன்ற கேரக்டர்களுக்கு அருள்நிதி ஏகப்பொருத்தமாய் இருக்கிறார். படத்திற்குப் படம் அவரின் நடிப்பில் நல்ல தேர்ச்சி இருந்து வருவதும் பாராட்டத்தக்கது. ஆனால், அருள்நிதி என்றாலே த்ரில்லர் படங்களுக்கு மட்டும்தான் ‘செட் ஆவாரோ’ என்ற எண்ணத்தையும் வரும் படங்களில் அவர் உடைக்க வேண்டிய அவசியம். அழகான ஷ்ரத்தா பாதி படத்தில் ‘செட்’ பிராபர்ட்டி போல்தான் பயன்பட்டிருக்கிறார். ஆனாலும், நடிக்க கிடைத்த ஒன்றிரண்டு காட்சிகளிலும் பெர்ஃபாமென்ஸ் செய்து அசத்தியிருக்கிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகை காயத்ரி, காமெடியன் யோகிபாபு ஒரேயொரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி மறைகிறார்கள்.

பலம்

1. அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்
2. பின்னணி இசை, ஒளிப்பதிவு
3. க்ளைமேக்ஸ்

பலவீனம்

1. ஒரே இடத்தில் கதை சுற்றிக் கொண்டே இருப்பது
2. குறைந்த ரன்னிங் டைம் இருந்தும்கூட, மெதுவாக நகர்வதைப்போன்ற உணர்வைத் தரும் திரைக்கதை அமைப்பு

மொத்தத்தில்...

த்ரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற படமாக இருந்தாலும், இரண்டு மணி நேரம் பொழுதுபோக்க வேண்டும் என்ற நினைப்பில் வரும் ஆடியன்ஸுக்கு இப்படம் எந்தளவுக்கு சுவாரஸ்யத்தைத்தரும் என்பது தெரியவில்லை. முதல் படம் என்ற வகையில் பரத் நீலகண்டன் இயக்குனராய் கவனம் பெற்றிருக்கிறார்.

ஒரு வரி பஞ்ச்: த்ரில்லர் விரும்பிகளுக்கு மட்டும்!

ரேட்டிங் : 5/10


#K13 #K13MovieReview #Arulnidhi #ShraddhaSrinath #BarathNeelakantan #SamCS #Ruben #SPCinemas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கே 13 டீஸர்


;