தேவராட்டம் – விமர்சனம்

வன்முறை ஆட்டம்!

விமர்சனம் 2-May-2019 12:58 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: M. Muthaiah

Production: Studio Green and Abi & Abi Pictures

Cast: Gautham Karthik, Soori & Manjima Mohan

Music: Nivas K. Prasanna

Cinematography: Sakthi Saravanan

Editor: Praveen KL


‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் முத்தையா, கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஆகியோருடன் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள ‘தேவராட்ட’த்தின் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

பிறந்ததுமே அப்பா, அம்மாவை இழந்த கௌதம் கார்த்திக்கை அவரது 6 அக்காக்கள் வளர்க்கிறார்கள். வக்கீலுக்கு படித்த கௌதம் கார்த்திக், தன் கண்முன்னே நடக்கும் தப்புகளை தட்டி கேட்கும் ரோஷக்காரர்! மதுரையையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பெரிய ரௌடி ‘பெஃப்சி’ விஜயன். ஒரு பெண் விவகாரத்தில் பெஃப்சி விஜயனின் மகனை கொலை செய்கிறார் கௌதம் கார்த்திக்! பல வேண்டுதல்களுக்கு பின் தனக்கு பிறந்த மகனை கொன்ற கௌதம் கார்த்திக்கை கொல்ல துடிக்கிறார் ‘பெஃப்சி’ விஜயன். இந்த மோதலில் கௌதம் கார்த்திக், தன்னை வளர்த்து ஆளாக்கிய தனது பெரிய அக்கா மற்றும் மாமாவை இழந்து விடுகிறார். அதனை தொடர்ந்து தன் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களையும் இழக்கும் அபாயம் கௌதம் கார்த்திக்குக்கு உருவாக, அந்த அபாயத்திலிருந்து தனது குடும்பத்தினரை கௌதம் கார்த்திக் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ‘தேவராட்ட’த்தின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

‘ஒவொரு பெண்ணையும் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு இருக்கிறது’ என்ற கருத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் முத்தையா. அதனை மதுரை பின்னணியில் சொல்லியுள்ளார். முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்கள் மாதிரியே இப்படமும் ‘கிராமத்து அக்மார்க்’ முத்திரையுடன் கருத்துக்கள் நிறைந்த வசனங்களுடன் உருவாகியுள்ளது. ஆனால் அவரது ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ முதலான படங்களின் கதையில் இருந்த அழுத்தமும், விறுவிறுப்பும் ‘தேவராட்ட’த்தில் தென்படவில்லை. யூகிக்க கூடிய காட்சிகள், கிளைமேக்ஸ் என்று பயணிக்கும் இந்த கதையில் தப்புகளை தட்டி கேட்கும் ஹீரோ, அவரால் பாதிக்கப்படும் வில்லன், இதனால் ஹீரோவை கொலை செய்ய துடிக்கும் வில்லன் என்ற அரதப்பழசான ஃபார்முலாவையே கையாளப்பட்டிருப்பதாலும், படம் முழுக்க சண்டை காட்சிகள், வன்முறை காட்சிகள் என்று பயணிப்பதாலும் ‘தேவராட்டம்’ பெரிய சுவாரஸ்யத்தை தரவில்லை.

முழுக்க முழுக்க மதுரை நேட்டிவிட்டியோடு சொல்லப்பட்டுள்ள இந்த கதையில் ஹீரோ வக்கீலுக்கு படித்தவர், அவரை விரும்பும் கதாநாயகியாக வரும் மஞ்சிமா மோகனும் வக்கீலுக்கு படித்தவர், ஹீரோவுக்கு ஆறு அக்காக்கள், ஆறு மாமன்கள்…. இந்த விஷயங்களை மையப்படுத்தியும், சில புதிய விஷயங்களை கையாண்டும் திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தால் ‘தேவராட்டம்’ கவனம் பெற்றிருக்கும்! ‘லவர் பாய்’ போன்ற கேரக்டர்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கை ஒரு கிராமத்து அடிதடி ஹீரோவாக இயக்குனர் முத்தையா காண்பித்திருக்கும் விதம், கௌதம் கார்த்திக் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி திலீப் சுப்பராயன் அமைத்த சண்டை காட்சிகள், கௌதம் கார்த்திக்கின் ஆறு மாமன்களில் ஒருவராக வந்து காமெடி செய்யும் சூரி கேரக்டர், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை, சொன்ன கதையை விறுவிறுப்பாக பயணிக்க உதவியிருக்கும் கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு ஆகியவை ‘தேவராட்டம்’ படத்தில் அமைந்த பாசிட்டிவான விஷயங்களாகும்!

நடிகர்களின் பங்களிப்பு

கிராமத்து இளைஞராக தோன்றியுள்ள கௌதம் கார்த்திக்கை இப்படம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக உயர்த்தியுள்ளது என்று சொல்லும் அளவிற்கு இப்படத்தில் அவரது அடிதடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் அமைந்துள்ளது. கதாநாயகியாக வரும் மஞ்சிமா மோகனுக்கு நடிப்பை வெளிப்படுத்த சொல்லும்படியாக காட்சிகள் இல்லை! இருந்தாலும் மதுரை பெண் கேரக்டருக்கு அவர் பொருந்தியுள்ளர். கௌதம் கார்த்திக்கின் மூத்த அக்காவாக வரும் வினோதினி, அக்கா என்பவர் அம்மாவுக்கு சமமானவர் என்பதை தனது சிறந்த நடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார். வினோதினியின் கணவராக வரும் ‘போஸ்’ வெங்கட், ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் வேலா ராமமூர்த்தி, மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கொடூர வில்லனாக வரும் பெஃப்சி விஜயன், இதற்கு முன் அவர் நடித்த படங்களில் வழங்கிய நடிப்பு மாதிரியே இப்படத்திலும் வழங்கியுள்ளார்.

பலம்

1.கௌதம் கார்த்திக்

2.வசனம், சண்டைக்காட்சிகள்

3.இசை, படத்தொகுப்பு

பலவீனம்

1. எந்த புதிய விஷயங்களும் இல்லாதது

2. அதிகபடியான அடிதடி, வன்முறை காட்சிகள்

3. யூகிக்க கூடிய திரைக்கதை அமைப்பு

மொத்தத்தில்…

‘தேவராட்டம்’ என்பது ஒரு கலை வடிவம்! இந்த டைட்டிலுக்கு ஏற்றமாதிரி கதை அமையவில்லை! இருந்தாலும், ‘மண்ணை தொட்டால் கூட விட்டு விடலாம், ஆனால் பெண்ணை தொட்டால் அவனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்’ என்று இந்த காலத்துக்கு தேவையான கருத்தை தாங்கி இப்படம் வருவதால், வரவேற்கலாம்!

ஒருவரி பஞ்ச் : வன்முறை ஆட்டம்!

ரேட்டிங் : 4.5/10


#Devarattam #DevarattamMovieReview #GauthamKarthik #ManjimaMohan #NivaskPrasanna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;