காஞ்சனா 3 - விமர்சனம்

அதே... அதே... ஆனாலும் நம்மூர் ரசிகர்களுக்கு அலுக்கவில்லை!

விமர்சனம் 19-Apr-2019 7:46 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Raghava Lawrence
Production : Sun Pictures
Cast : Raghava Lawrence,Oviya, Vedhika, Nikki Tamboli, Kovai Sarala, Soori, Anupama Kumar
Music : S.Thaman
Cinematography: Vetri, Sushil Choudhary
Editor : Ruben

இதுவரை தமிழில் வெளிவந்த தொடர் வரிசைப் படங்களில் அதிகளவில் (4 பாகங்கள்) உருவாக்கப்பட்ட படம் என்ற சாதனையோடு வெளிவந்திருக்கிறது ‘காஞ்சனா 3’ என்ற ‘முனி 4’. பழைய மாவில் புது தேசையா? அல்லது புதிய விஷயங்கள் எதையும் தாங்கி வெளிவந்திருக்கிறதா இப்படம்?

கதைக்களம்

யாருக்கும் அடங்காத பேய் ஒன்றை அடக்கி மரம் ஒன்றில் அடக்கி வைக்கிறது ஃபார்னிலிருந்து இம்போர்ட் செய்யப்பட்ட பேய் விரட்டும் டீம் ஒன்று. தனது தாத்தாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக குடும்பத்துடன் பயணிக்கும் ராகவா லாரன்ஸ் குடும்பம், சரியாக அந்த மரத்தடியில் சாப்பிடுவதற்காக அமர்கிறார்கள். பிறகென்ன சாப்பாட்டுக்கூடை வழியே ராகவா லாரன்ஸின் தாத்தா வீடு வரைக்கும் வரும் பேய், அப்படியே வழக்கம்போல் ராகவா லாரன்ஸின் உடம்பிற்குள்ளும் புகுந்துகொள்ள... அதன் பிறகு என்னென்ன நடந்திருக்கும் என்பது இதுவரை ‘முனி’ சீரிஸைப் பார்த்து வருபவர்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

படம் பற்றிய அலசல்

ஒரு அப்பாவி ஹீரோவிற்குள் புகுந்துகொள்ளும் ஆவி.. அவரை ‘அடப்பாவி’ என ஆக்ரோஷமான ஹீரோவாக மாற்றுமேயானால் அது இப்படத்தின் ஒன் லைன். வழக்கம்போல, பேய்க்கான ஃப்ளாஷ்பேக்கிற்காக மொத்த தியேட்டரும் காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம்பாதியில்தான் பேய்க்கான ஃப்ளாஷ்பேக்¬யே ஓபன் செய்கிறார் ராகவா லாரன்ஸ். முந்தைய படங்களைப் போலவே இப்படத்திலும் ஒன்றிற்கு இரண்டு பேயாக ராகவா லாரன்ஸ் உடம்பிற்குள் புகுந்து ரணகளம் செய்கிறது. வழக்கம்போல முதல்பாதியில் காமெடி, கிளாமர் எனவும், இரண்டாம்பாதியில் பேய்க்கான நெஞ்சை பிழிய வைக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள், பின்னர் பேயின் பழிவாங்கும் படலம் எனவும் பிரித்து மேய்ந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடுவதால் இரண்டாம்பாதி சற்று சோர்வையே ஏற்படுத்துகிறது. கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினியின் காமெடிகளுக்கு தியேட்டரில் அதிர்வெடிச் சிரிப்புகள் எழுகின்றன. பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி சற்று இரைச்சலாக இருந்தாலும், இப்படத்தின் காட்சிகளுக்கு இதுதான் தேவையோ என்ற எண்ணம் எழுவதையும் மறுப்பதற்கில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இரண்டு வேடங்களிலும் அதகளம் செய்திருக்கிறார் ராகவா. டான்ஸ், ஃபைட், ஹியூமர், ரொமான்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர். (அவரிடம் ஒரேயொரு வேண்டுகோள் மட்டுமே. அவரின் படங்களுக்கு பெரியவர்களைவிட குழந்தைகளே மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கிறார்கள். எனவே, அதனை மனதில் வைத்து காட்சிகளை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.) வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என மூன்று ஹீரோயின்களுக்கும்... ஹீரோவை சுற்றிச் சுற்றி வந்து கிளாமர் காட்டுவது மட்டுமே தலையாய கடமை. மற்றபடி இந்தக்கதையில் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி கூட்டணி இப்படத்திலும் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறார்கள். படத்தில் சூரியும் இருக்கிறார். ஆனால் பாவம் அவரின் காமெடிகள் எடுபடவில்லை. வில்லன் கபீர் துஹான் சிங் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

பலம்

1. ராகவா லாரன்ஸ்
2. கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி சம்பந்தப்பட்ட காமெடிகள்

பலவீனம்

1. டெம்ப்ளேட் கதைக்களம்
2. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

காஞ்சனா சீரிஸில் இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்த்து வருவார்கள் என்பதைப் புரிந்து, அதற்கேற்ற ஒரு படத்தை உருவாக்கிறார் ராகவா லாரன்ஸ். கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் கிளுகிளுப்பூட்டி, ஆங்காங்கே சிரிக்க வைத்து ஒரு பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறது ‘காஞ்சனா 3’ டீம்.

ஒரு வரி பஞ்ச்: அதே... அதே... ஆனாலும் நம்மூர் ரசிகர்களுக்கு அலுக்கவில்லை!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;