மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்

பார்க்கலாம்… ரசிக்கலாம்!

விமர்சனம் 19-Apr-2019 5:05 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Raju Saravananan
Production : Studio Green
Cast : Madhampatty Rangaraj , Shweta Tripathi, RJ Vigneshkanth, Kabir Duhan Singh,
Vela Ramamoorthy, Ravi Mariya

Music : Sean Roldan
Cinematography Selvakumar SK
Editor : Philomin Raj
இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுத, ராஜுமுருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அண்ணன், தம்பி கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸி’ன் ஆட்டம் எப்படி?

கதைக்களம்!

கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் ‘ராஜகீதம்’ என்ற பெயரில் கேஸட் கடை வைத்திருப்பவர் ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்). இளையராஜாவின் தீவிர ரசிகரான ஜீவாவுக்கும் பூம்பாறைக்கு மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்து டெண்ட் அமைத்து சர்க்கஸ் வித்தைகள் காட்டும் குழுவைச் சேர்ந்த மெஹந்தி (ஸ்வேதா திருபாதி) மீது காதல் வருகிறது. மெஹந்திக்கு ஜீவா மீதும் காதல் வருகிறது. ஜாதி வெறியரான ஜீவாவின் அப்பா ராஜாங்கம் (மாரிமுத்து) இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, மெஹந்தியின் அப்பாவும் (சன்னி சார்லஸ்) இவர்களது காதலுக்கு குறுக்கே நிற்கிறார். ஒரு கட்டத்தில் ஜீவா, மெஹந்தியின் அப்பாவிடம் மெஹந்தியை பெண் கேட்டு செல்ல, சர்க்கஸில் மரண விளையாட்டான கத்தி வீச்சில் வெற்றிப் பெற்றால் உனக்கு மெஹந்தியை திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்கிறார்! மெஹந்தியை அடைய, ஜீவா சர்க்கஸில் கத்தி வீச்சில் வல்லுனராக இருக்கும் ஜாதவ் (அன்கூர் விகாஸ்) உதவியுடன் கத்தி வீச்சுப் பயிற்சி பெற்று வரும் நிலையில் கதையில் சில திருப்பங்கள் ஏற்பட்டு, ஜீவாவும், மெஹந்தியும் பிரியும் சூழ்நிலை உருவாகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் ‘மெஹந்தி சர்க்கஸி’ன் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எப்போதும் சலிக்காத விஷயம் காதல் கதைகள்தான்! பெரும்பாலான அறிமுக இயக்குனர்களும் முதலில் கையிலெடுப்பதும் காதல் கதைகளைதான்! அந்த வகையில் அமைந்துள்ளது ராஜு முருகன் கதை வசனத்தில் உருவாகியுள்ள இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ கதையும்!

கதையில் சொல்லும்படியாக எந்த புதிய விஷயங்களும் இல்லை என்றாலும் ராஜுமுருகன் எழுதிய கதையை அப்படியே நிஜமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் இயக்குனர் சரவண ராஜேந்திரன் கடின உழைப்பை கொட்டியுள்ளார் என்று சொல்லலாம். ராஜஸ்தானிலிருந்து ஒரு இளம் பெண் பூம்பாறைக்கு வருவதிலிருந்து, ஃபளாஷ் பேக்கில் பயணிக்க துவங்குகிறது கதை! அதற்காக இயக்குனர் தேர்வு செய்த பூம்பாறை கிராமம், மஹாராஷ்ட்ரா போன்ற வட மாநில பிரதேசங்கள், அந்த இடங்களில் காட்சிகளை படமாக்கிய விதம், கதையை சொல்லியிருக்கிற விதம் சரவண ராஜேந்திரன் திறமையானவர் என்பதை நிரூபித்திருப்பதோடு, 1992 காலகட்டத்தில் நடைபெறும் ஒரு கண்ணியமான காதல் கதையை, ரொமான்ஸ், எமோஷன்ஸ், ஜாதி வெறி கலந்த விஷயங்கள் கலந்து, பின்னணியில் இளையராஜா இசை அமைத்த பாடல்கள் ஒலிக்க தந்த விதம் நம்மை ‘மெஹந்தி சர்க்கஸோ’டு கட்டிப் போட வைக்கிறது!

இளையரஜா இசை அமைத்த பாடல்களுடன் ஷான் ரோல்டனின் பின்னணி இசை, ஓரிரு பாடல்கள் மற்றும் கண்களுக்கு இதமான, அதே நேரம் கதையை மீறாத செல்வராஜின் ஒளிப்பதிவு, ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பு, சதீஷ் குமாரின் கலை இயக்கம் ஆகிய டெக்னிக்கல் விஷயங்கள் ‘மெஹந்தி சர்க்கஸு’க்கு பலம் சேர்த்துள்ளது என்றால், எந்த புதிய விஷயங்கள் இல்லாததும் அதிக விறுவிறுப்பு இல்லாமல் படம் மெதுவாக பயணிப்பதும் மெஹந்தி சர்க்கஸின் ஆட்டத்தில் மைனஸாக அமைந்துள்ளது. இருந்தாலும் சர்க்கஸ் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள, அதிக சினிமாத்தனம் இல்லாத இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பது நிச்சயம்!

நடிகர்களின் பங்களிப்பு!

கதாநாயக்ன ஜீவாவாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் நடிப்பில் புதுமுகமாக தெரியவில்லை. காதல், ரொமான்ஸ் போன்ற விஷயங்களில் நிறைவான நடிப்பை வழங்கியவர், எமோஷன் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கதாநாயகி மெஹந்தியாக வரும் ஸ்வேதா திருபாதி தான் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்! வட இந்திய முகம், அழகிய உருண்டை கண்கள், அந்த கண்களால் வெளிப்படுத்தும் காதல், ரொமான்ஸ், பயம் என்று படம் பார்ப்பவர்களின் மனதில் ‘மெஹந்தி’யாகவே இடம் பிடித்து விடுகிறார் ஸ்வேதா திருபாதி! அத்துடன், அவரது அப்பாவாக வரும் சன்னி சார்லஸ், கத்தி வீச்சு வல்லுனராக வந்து மெஹந்தியின் காதலுக்கு உதவி செய்பவராகவும், உபத்திரவம் செய்பவராகவும் நடித்திருக்கும் அன்கூர் விகாஸ் ஆகியோரும் அந்த கதாபாத்திரங்களுக்கு சரியான தேர்வு, சரியான பங்களிப்பு!

ரங்கராஜின் நண்பராக வரும் ஆர்.ஜே.விக்னேஷ் ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ரங்கராஜ் செய்யும் தவறுகளுக்கு அவரது அப்பா மாரிமுத்துவிடமிருந்து ஆர்.ஜே.விக்னேஷ் அடிவாங்கும் காட்சிகள் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. பெரும்பாலும் கரடு, முரடான கேரக்டர்களில் நடித்து வரும் வேலா ராமமூர்த்திக்கு இந்த படத்தில் சர்ச் ஃபாதர் வேடம். காதலின் மகத்துவங்களை சொல்லி காதலர்களை சேர்த்து வைக்கும் நல்ல ஃபாதராக கதையில் வாழ்ந்துள்ளார் வேலா ராமமூர்த்தி. ரங்கராஜின் ஜாதி வெறி பிடித்த அப்பாவாக வரும் மாரிமுத்து, மெஹந்தியின் மகள் நிஷாவாக வரும் பூஜா என படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்துள்ளர் இயக்குனர் சரவண ராஜேந்திரன்.



பலம்

1.ஸ்வேதா திருபாதி, சன்னி சார்லஸ், அன்கூர் விகாஸ்

2. வசனம், இயக்கம்

3.இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம்

பலவீனம்

1. புதிய விஷயங்கள் எதுவும் இல்லாதது

2. கதை மெதுவாக பயணிப்பது

மொத்தத்தில்…

சர்க்கஸ் கலை பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் கண்னியமான காதல் கதையாக அமைந்துள்ள இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ காதல் என்றைக்குமே அழியாது, அது சலிப்பை தராத ஒரு விஷயம் என்பதை மீண்டும் சொல்ல வந்துள்ளது. அத்துடன் எல்லாவற்றுக்கும் அடிப்படை ‘காதல்’தான் என்பதையும் இப்படம் வலியுறுத்துகிறது. தமிழ் சினிமாவின் தரமான காதல் படங்கள் வரிசையில் இந்த ‘மெஹந்தி சர்க்கஸு’ம் இடம் பிடிக்கும்!

ஒருவரி பஞ்ச் : பார்க்கலாம்… ரசிக்கலாம்!

ரேட்டிங் ; 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - ட்ரைலர்


;