கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்

பெண் சபலத்தால் அழியும் போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யம்!

விமர்சனம் 13-Apr-2019 1:16 PM IST Top 10 கருத்துக்கள்

Direction C. V. Kumar
Production Thirukumaran Entertainment
Cast Priyanka Ruth, V. Prabhakar, Daniel Balaji, Bagavathi Perumal & Aadukalam Naren
Music Hari Dafusia
Cinematography Karthik Kumar
Editor Radhakrishnan Dhanapal


‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கிய தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளியாகியுள்ள படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. பிரியங்கா ருத் கதையின் நாயகியாக நடிக்க, வேலுபிரபாகரன், அசோக், டேனியல் பாலாஜி, ‘ஆடுகளம்’ நரேன், பகவதி பெருமாள், ஈ.ராமதாஸ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்து வெளியாகியுள்ள ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ கவனம் பெறும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்!

பெற்றோர் சம்மதமில்லாமல் தன் காதலன் அசோக்கை திருமணம் செய்துகொண்டவர் பிரியங்கா ருத்! திருமணமான சில நாட்களிலேயே போலீஸ்காரர்களின் என்கவுண்டர் மூலம் தன் புருஷனை இழந்துவிடுகிறார் பிரியங்கா ருத்! தன் கணவரை அந்நியாயமாக சுட்டுத்தள்ளிய போலீஸ்காரர்களையும், என்கவுண்டருக்கு காரணமாக இருந்த போதை மருந்து கடத்தல் கும்பலையும், அப்பாவி பெண்ணாக இருந்த பிரியங்கா ருத் எப்படி, மும்பையில் இருக்கும் பெரிய தாதா டேனியல் பாலாஜி உதவியுடன் ‘அடப்பாவி’ பெண்ணாக மாறி எல்லோரையும் பழி வாங்குகிறார் என்பதுதான் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் கதையும், கதைக்களமும்!

படம் பற்றிய அலசல்

பல படங்களை தயாரித்து ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் ஓரளவுக்கு கவனம் பெற்றவர் சி.வி.குமார். அவரது இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவாகியுள்ள இப்படம் சர்வதேச போதை மருந்து கடத்தல் காரர்களின் செயல்பாடுகளை டீட்டெயிலாக சொல்லியுள்ளது. அதை ஓரளவுக்கு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், ரசிக்கும் விதமாகவும் படமாக்கியுள்ளார் சி.வி.குமார். ஆனால் அதற்கு எடுத்துக்கொண்ட அதிக நேரம், படம் ழுக்க இரத்தம் தெறிக்கவைக்கும் விதமாக அமைந்துள்ள வன்முறை காட்சிகள், கேங்ஸ்டர்கள் என்றாலே எப்போதும் மது, மாது, போதை என்று இருப்பதுபோலவே காட்டப்பட்டுள்ள காட்சிகள் ஒருவித அயர்ச்சியையே தருகிறது. அதைப்போல சர்வ வல்லமை பொருந்திய போதை மருந்து கடத்தல்கார்களை பிரியங்கா ருத், ஒரு தனிப் பெண்ணாக நின்று போராடி அழிக்கும் காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை! இதுபோன்ற குறைகளை சரி செய்து படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து படமாக்கியிருந்தால் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டைட்டிலுக்கு ஏற்ற விறுவிறுப்பான ஒரு படமாக அமைந்திருக்கும்.

கதை ஓட்டத்தை விறுவிறுப்பாக்கும் விதமாக அமைந்துள்ளது இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஹரி டஃபூசியா மற்றும் சியாமளாங்கண் ஆகியோரது பங்களிப்பு! கேங்ஸ்டர் ஸ்டோரி, பெரும்பாலும் இரவில் நடப்பது மாதிரியான காட்சிகள் என்று பயணிக்கும் கதைகளத்திற்கு கார்த்திக் குமாரின் ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது. படத்தொகுப்பாளர் ராதாகிருஷ்ணன் தனபால் படத்தை விறுவிறுப்பாக்குவதில் அதிக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை! இதுபோன்ற சில குறைகளுடன் படம் பயணித்தாலும் இப்படம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தராது என்றே சொல்லலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

முதலில் ‘அப்பாவி’ பெண்ணாக இயல்பான நடிப்பை வழங்கிய பிரியங்கா ருத், கணவரை இழந்ததும் அவரை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கும் பெண்ணாக மாறியதும் அடிதடி, ஆக்‌ஷன் என்று படம் முழுக்க அதகளம் பண்ணி அனைவரது கவனத்தையும் பெறுகிறார். ‘எனக்கு வேண்டியதை நான் தான் தேடிக்கொள்ள வேண்டும்’ என்பது போன்ற வீர வசனங்கள் பேசி அவர் ஒவ்வொருவரையாக அழிக்கும் காட்சிகளில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அசோக் கொலை செய்யப்பட காரணமாக இருந்த போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனாக நடித்திருக்கும் இயக்குனர் வேலு பிரபாகரன், அவரது மகன்களாக நடித்திருப்பவர்கள், மும்பை தாதாவாக வரும் டேனியல் பாலாஜி, சர்வதேச போதை மருந்து கடத்தல்காரர் லால் சேட்டாக வருபவர், போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஆடுகளம்’ நரேன், போதை மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் மந்திரியாக வரும் பி.எல்.தேனப்பன் என்று படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரையும் இயக்குனர் சி.வி.குமார் நன்றாக கையாண்டுள்ளார்.

பலம்

1. டீட்டெயிலாக சொல்லப்பட்டுள்ள போதை மருந்து கடத்தல் விஷயங்கள்..

2. பிரியங்கா ருத்தின் பங்களிப்பு

3. இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1. கதை ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருவது

2. அதிகபடியான மது, மாது, போதை, வன்முறை காட்சிகள்

3. படத்தொகுப்பு

மொத்தத்தில்…

‘மாயவன்’ படத்தில் ‘மனித மூளை’யை வைத்து விஞஞான ரீதியிலான ஒரு கதையை சொல்லிய இயக்குனர் சி.வி.குமார் இப்படத்தில், பெண் சபலத்தால் போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யத்தை இழப்பவர்களின் கதையை சொல்லியுள்ளார். தேவையில்லாத காட்சிகளை குறைத்து, கதையை தாங்கி பிடித்து செல்லும் பிரியங்கா ருத் கேரக்டரின் செயல்பாடுகளை கொஞ்சம் நம்பகத்தன்மையோடு வடிவமைத்து படமாக்கியிருந்தால் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும்!

ஒருவரி பஞ்ச் : பெண் சபலத்தால் அழியும் போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யம்!

ரேட்டிங் : 4.5/10

#GangsOfMadras #GangsOfMadrasReview #Kalaiyarasan #PriyankaRuth #DanielBalaji #CVKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐரா ட்ரைலர்


;