50 நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெடுநல்வாடை’

50 நண்பர்கள் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கியுள்ள படம் ‘நெடுநல்வாடை’

செய்திகள் 7-Mar-2019 12:51 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் ‘பூ’ ராமு, மற்றும் அறிமுகங்கள் இளங்கோ, அஞ்சலி நாயர் நடிக்கும் படம் ‘நெடுநல்வாடை’. இந்த படத்தை இயக்குனர் செல்வக்கண்ணனின் 50 நண்பர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ‘பி ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் வெளியீடும், பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் செல்வக்கண்ணன் பேசும்போது,

‘‘இந்த படம் துவங்கி பத்து நாட்களான நிலையில் நாயகன், நாயகி இருவரும் எஸ்கேப் ஆனார்கள். அதன் பிறகு இளங்கோ, அஞ்சலி நாயர் வந்தார்கள். அவர்களை வைத்து மீண்டும் படத்தை துவங்கினோம். என் நண்பர்கள் 50 பேர் என் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் இன்று படத்தின் ரிலீஸ் நெருங்கி விட்டோம். இந்த படம் துவங்கி கடந்த மூன்று வருடக்காலம் நாங்கள் சந்திக்காத பிரச்சனைகள் இல்லை! தொடர்ந்து போராடி எடுத்த இந்த படத்தை ரிலீஸ் செய்ய ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் அவர்கள் வந்து உதவியுள்ளார்.

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவரது வளர்ச்சிக்கு ஒருவர் உதவியாக இருந்திருப்பார். அதைப் போன்ற ஒரு கதைக்களத்தைக் கொண்ட படம் தான். இது! ஒரு தாத்தா பேரனுக்கு இடையில் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்களை கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படம் உறவு முறைகளின் வலிமையை சொல்லும்! இந்த படம் மூலம் ஒரு பைசா கூட திரும்பி வரவில்லை என்றால் கூட பரவாயில்லை என்று கூறி இந்த படத்தை தயாரிக்க எனக்கு உறுதுணையாக இருந்த எனது 50 நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார் இயக்குனர் செல்வக்கண்ணன்.

‘நெடுநல்வாடை’ படத்தை வெளியிடும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் பேசும்போது, ‘‘இன்றைய தேதியில் 50 நண்பர்கள் ஒருங்கிணைந்து இப்படி ஒரு காரியத்தில் இறங்கியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகளையும் மீறி மிகவும் தரமான படமாக ‘நெடுநல்வாடை’யை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் செல்வக்கண்ணன். இந்த படம் உருவாக காரணமாக இருந்த 50 நண்பர்களுக்கும் செல்வக்கண்ணன் வாழ்நாள் முழுக்க கடன்பட்டிருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும்’’ என்றார்

இந்த படத்தில் ‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோருடன் அஜய்நடராஜ், ‘மைம்’ கோபி, ஐந்து கோவிலான், செந்தி ஆகியோரும் நடித்துள்ளனர். அறிமுக இசை அமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்கிளின் இசை அமைத்திருக்கும் இந்த படத்திற்கான பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். ஒளிப்பதிவை வினோத் ரத்னசாமி கவனிக்க, மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளர்.

#Nedunalvaadai #Selvakannan #PooRamu #Elango #AnjaliNair #MimeGopi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டதாரி - டிரைலர்


;