இந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்?

இந்த வாரம் ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, உதயாவின் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 15-Nov-2018 5:26 PM IST Top 10 கருத்துக்கள்

சென்ற வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6-ஆம் தேதி விஜய்யின் ‘சர்கார்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’, ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்த ‘களவாணி மாப்பிள்ளை’ ஆகிய 3 படங்கள் வெளியாகின! இந்த படங்கள் வெளியாகி 10 நாட்களான நிலையில் இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள் வெளியாகிறது? அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த ஒரு சிறு கண்ணோட்டம் இதோ…

1. காற்றின் மொழி

‘மொழி’ படம் வெளியாகி 10 ஆண்டுகளான நிலையில் இயக்குனர் ராதாமோகனும், நடிகை ஜோதிகாவும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘காற்றின் மொழி’. வித்யா பாலன் நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகாவுடன் விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மயில்சாலி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க சிம்பு, யோகி பாபு ஆகியோற் கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளனர். ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ ஆகிய படங்களை தொடர்ந்து கதாநாயகி கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படமும் ஜோதிகாவின் சினிமா கேரியரில் ஒரு முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பாஃப்டா மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் உறவினர் காஷிஃப் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை மகேஷ் முத்துசாமி கவனிக்க, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

2. திமிரு புடிச்சவன்

அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள இந்த படத்தை விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் தயாரித்துள்ளது. வித்தியாசமான டைட்டில்களையும் மாறுபட்ட கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி இப்படத்தில் ‘திமிரு புடிச்ச’ சுபாவம் கொண்ட நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்ட் விஷயங்களுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறாத நிலையில் இந்த படம் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாகியுள்ளது என்று இப்படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் ஆகியோருடன் லட்சுமி ராமகிருஷ்ணன், டேனியல் பாலாஜி, சாய் தீனா, முத்துராமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு வழக்கம்போல விஜய் ஆண்டனியே இசை அமைத்துள்ளார்.

3. உத்தரவு மகாராஜா

‘ஜேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் உதயா கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனா ஆஷிஃப் குரைஷி இயக்கியுள்ளார். க்ரைம், சைக்கோ த்ரில்லர் ரக படமாக உருவாகியுள்ள இந்த படம் பண வசதி படைத்த வாழ்க்கையை வாழ ஆசைப்படும் ஒரு ஏழைக் குடுபத்து இளைஞன், அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அதனால ஏற்படும் விளைவுகள் என்று பயணிக்கும் கதையாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் உதயாவுடன் பிரபு, கோவை சரளா, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்சயன், மனோஜ் குமார், சோனியா, ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, அறிமுகங்கள் சேரா, பிரியங்கா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி ரங்கா இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்திருக்க, நரேன் பாலகுமாரன் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பாளர் ஆண்டனியின் சிஷ்யர் சத்யநாராயனன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட மூன்று நேரடி தமிழ் படங்கள் இந்த வார ரிலீசாக நாளை வெளியாகிறது. இந்த படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் வரவேற்பு பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது இப்படங்களின் வெளியீட்டுக்கு பிறகு தெரிய வரும்!

#ThimiruPudichavan #KaatrinMozhi #UtharavuMaharaja #Taxiwaala #UtharavuMaharaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி


;