கடந்த வாரம் இரண்டு, இந்த வாரம் நான்கு!

இந்த வாரம் ‘நோட்டா’, ‘96’, ‘ராட்சசன்’, ‘யாகன்’ ஆகிய 4 திரைப்படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 3-Oct-2018 5:15 PM IST Top 10 கருத்துக்கள்

கடந்த வாரம் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய 2 நேரடி தமிழ் திரைப்படங்க்ளே வெளியாகின! இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்று வெற்றி படங்களாக அமைந்துள்ள நிலையில் இந்த வாரம் எத்தனை நேரடி தமிழ் படங்கள் வெளியாகிறது என்று பார்ப்போம்!

1. 96 – அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா முதன் முதலாக இணைந்து நடித்துள்ளனர். ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள இந்த படம் பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஒரு மாணவன், மாணவிக்கு இடையில் ஏற்படும் காதல், அந்த காதல் கை கூடாமல் போவது, அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த காதலர்கள் சந்திக்கும்போது ஏற்படும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள காதல் கதையாகும்! நாளை (அக்டோபர்-4) வெளியாக இருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை கோவிந்த் ராஜ் கவனித்திருக்க, கோவிந்த் (மேனன்) வசந்தா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதியின் இளவயது கேரக்டர்களில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா நடிக்க, த்ரிஷாவின் இளவயது கேரக்டரில் கௌரி ஜி.கிருஷ்ணா நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படம் நாளை பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிறது!

2. ராட்சசன் – ‘முண்டாசுப்பட்டி’ படத்தை தொடர்ந்து ராம்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், ராதா ரவி, நிழல்கள் ரவி, காளி வெங்கட், ராம்தாஸ், சூசன் ராஜ், வினோத், வினோதினி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்த படத்தை ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. விஷ்ணு விஷால் காக்கி உடை அணிந்து நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு சவாலான கேரக்டராம்! இந்த படத்தின் ட்ரைலருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் மீதும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது!

3. நோட்டா – ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள படம் இது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ விஜய் தேவரகொண்டா தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருடன் மெஹ்ரின் பிரசித்தா, யாஷிகா ஆனந்த், சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். சமகால அரசியல் விஷயங்களை மையமாக வைத்து காமெடி, ஆக்‌ஷன், த்ரில் என்று எடுக்கப்பட்டுள்ள படம் ‘நோட்டா’ என்று கூறப்படுகிறது. ‘அபி&அபி’ நிறுவனமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். சந்தான கிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தொகுப்பை ‘அருவி’ படப் புகழ் ரேமண்ட் கவனித்துள்ளார். குறுகிய காலத்திற்குள் தெலுங்கு சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகும் இப்படம் தமிழில் அவருக்கு தகுந்த இடத்தை பிடித்துக்கொடுக்க உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

4. யாகன் – அறிமுக இயக்குனர் வினோத் தங்கவேலு இயக்கத்தில், அறிமுகம் சஜன் கதாநாயகனாக நடிக்க, அஞ்சனா கீர்த்தி கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘யாகன்’. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் சகோதரரும், நடிகருமான ஜெயராஜும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிரோ பிரபாகரன் இசை அமைத்துள்ளார். மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஷரன் ஷண்முகம் கவனித்துள்ளார். ‘யாகன்’ காதல் கதையாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படமும் 5-ஆம் தேதி ரிலீசாகிறது என்பதை படக்க்ழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் 2 திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த வாரம் 4 திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது! இந்த திரைப்படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது இப்படங்களின் வெளியீட்டுக்கு பிறகு ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்!

#NOTA #96 #Ratsasan #VijaySethupathi #VijayDeverakonda #Trisha #VishnuVishal #AmalaPaul

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;