இந்த வாரம் எத்தனை படங்கள்?

இந்த வாரம் இமைக்கா நொடிகள், 60 வயது மாநிறம், ஆருத்ரா, அண்ணனுக்கு ஜே ஆகிய 4 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 29-Aug-2018 6:36 PM IST VRC கருத்துக்கள்

சென்ற வாரம் ‘லக்‌ஷ்மி’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘எச்சரிக்கை - இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘களரி’ ஆகிய நான்கு நேரடி தமிழ் படங்கள் வெளியாகின! அந்த வரிசையில் இந்த வாரமும் நான்கு படங்கள் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் இது!

1.இமைக்கா நொடிகள் – ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யாப், ராஷி கண்ணா, விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் இது! இந்த படத்தில் அனுராக் காஷ்யாப் சீரியல் கில்லராக நடிக்க, நயன்தாரா சி.பி.ஐ.அதிகாரியாக நடிக்கிறார். கிரைம் த்ரில்லர் ரக படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அனுராக் காஷ்யாப் கேரக்டருக்கு இயக்குனர் மகிழ் திருமேனி டப்பிங் கொடுத்துள்ளார். ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படம் வெற்றிப் படமாக அமைந்துள்ள நிலையில் மூன்று வார இடைவெளியில் வெளியாக இருக்கும் நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும்!

2. 60 வயது மாநிறம் – ‘காற்றின் மொழி’ படத்திற்கு முன்னதாக ராதா மோகன் இயக்கத்தில் உருவான படம் இது! சத்தமில்லாமல் உருவான இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா முதலானோர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ‘GODHI BANNA SADHARANA MAYKATTU’ என்ற கன்னட படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ளது.

இந்த படம் அல்ஷிமர்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையை தேடும் மகனின் கதை என்று கூறப்படுகிறது. இளையராஜா இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். குடும்பத்தினருடன் சென்று பார்க்க கூடிய படங்களை தொடர்ந்து இயக்கி வரும் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமும் அந்த வரிசையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

3. ஆருத்ரா – ‘ஸ்ட்ராபெரி’ படத்தை தொடர்ந்து பா.விஜய் தனது ‘வில் மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பா.விஜயுடன் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.பாக்யராஜ், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், சஞ்சனா சிங், தக்‌ஷிதா குமார், மெகாலி, யுவா, சோனி கிரிஸ்டா என பலர் நடித்துள்ளனர்.

‘கருவறைக்குள் இருக்கும் பெண் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் உலகத்தில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் மாறினால் தான் பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியும்’ என்ற கருத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு வித்யா சாகர் இசை அமைத்துள்ளார். சென்சாரில் ‘U/A’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இந்த படம் சமூகம் மீது பா.விஜய்க்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

4.அண்ணனுக்கு ஜே – ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனம் சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள படம் இது! வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாகாவும், மகிமா நம்பியார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அரசியலில் நுழைந்து பெரிய பதவிக்கு வர ஆசைப்படும் ஒரு இளைஞன் பற்றிய காமெடி கலந்த இந்த கதையில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி, செந்தில்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு விஷ்ணுராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அடகத்தி’ தினேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘உள்குத்து’. இந்த படத்தை தொடர்ந்து ‘அடக்கத்தி’ தினேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் மீதும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலே குறிப்பிட்ட நான்கு நேரடி தமிழ் படங்கள் இந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படங்களில் ‘இமைக்கா நொடிகள்’ 30-ஆம் தேதி வியாழக் கிழமையும், மற்ற மூன்று படங்கள் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் வெளியாகிறது. இந்த நான்கு படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது இப்படங்கள் வெளியான ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;