‘ஒழுக்கம், கல்வி இருந்தால் எதையும் சாதிக்கலாம்!’ – சிவகுமார்

‘ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளை’ மற்றும் அகரம் ஃபவுண்டேஷனின் 39-ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா!

செய்திகள் 18-Jun-2018 1:49 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் சிவகுமாரின் ‘ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளை’யும் நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனும் இணந்து ஆண்டுதோறும் ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர், மாணவிகளை தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி வருகிறது. 39-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த பரிசளிப்பு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 2,05,000 ரூபாய் பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்காக ’தாய் தமிழ் பள்ளிக்கு 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை இயக்கத்திற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் அறிவியல் துறையில் சிறந்து விளங்கி வரும் மாணவர்களுக்கும், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை நடிகர்கள் சிவகுமார், சூர்யா வழங்கினர்.

அதன் பிறகு நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘‘இங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைத்துமே நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். சூர்யா அப்பா என்றவுடன் ஹீரோ என நினைத்துவிடாதீர்கள். நிங்கள் எப்போதும் இரண்டு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கல்வி, ஒழுக்கம்! இந்த இரண்டு மட்டுமே உங்களைக் காப்பாற்றும். எந்த ஊர், அப்பா - அம்மா என்ன செய்றாங்க போன்ற எதையுமே கவலைப்படாதீர்கள். கல்வி, ஒழுக்கம் இந்த இரண்டு விஷயம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். உலகத்தில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போகலாம், வாழலாம்’’ என்றார்.

சூர்யா பேசும்போது ‘‘கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி வாழ்ந்தவர்கள் சொல்வதை புரிந்துக் கொள்ள வேண்டும். எதற்காக ஓடணும், பணம் சம்பாதிக்கணும் என்று கேள்விக்கெல்லாம் இந்த விழாவைத் தான் பதிலாக பார்க்கிறேன். சில மாணவர்களுடைய பேச்சைக் கேட்கும் போது தான், நாம் இன்னும் நிறையப் பண்ணனும் என்று ஓட வைக்குது. மாணவர்களுடைய பேச்சு தான் உத்வேகத்தைக் கொடுக்கிறது.

‘அகரம்’ இப்படியொரு உயர்ந்த நிலைக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை. 2500 மாணவர்கள் இந்தாண்டு தொடர்கிறது. 1979-ல் ஒருவருடைய சின்ன எண்ணத்தால், இப்போது தமிழக மக்களின் பலருடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது. விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்து அடுத்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதை அகரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அகரத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரை அண்ணாக்களாகவும், அக்காக்களாகவும் கூடவே இருப்பார்கள். உதவிக் கேட்டு வருபவர்களை விட, அகரத்தில் போய் தேடிப் பிடித்து படிக்க வைக்கிற மாணவர்கள் அதிகம். கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய சப்போர்ட் தேவைப்படுது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;