‘வேலைக்காரன்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்

வேலைக்காரன் - முன்னோட்டம்

முன்னோட்டம் 19-Dec-2017 11:40 AM IST Top 10 கருத்துக்கள்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி, பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது ‘வேலைக்காரன்’ திரைப்படம். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மோகன் ராஜா இயக்கியுள்ளார். சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கியுள்ள இப்படத்தைப் பார்க்கத் தூண்டும் பல்வேறு விஷயங்களிலிருந்து 5 முக்கிய விஷயங்களை மட்டும் இங்கே தொகுத்துள்ளோம்.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுதுபோக்குப் படம்!

தங்கள் நிஜ வாழ்க்கையின் வலிகளையும், துயரங்களையும் மறந்து இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்குவதற்காகவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருகிறார்கள் என்பதால்தான், பெரும்பாலான பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்கள் முன்பெல்லாம் எளிதாக வெற்றி பெற்றன. ஆனால், சமீபகாலமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் படத்தில் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வு விஷயங்களும் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில், ‘வேலைக்காரன்’ படத்திலும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை கையிலெடுத்து அதனை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்குப் படமாக உருவாக்கியுள்ளார் மோகன் ராஜா.

ஆர்வத்தைத் தூண்டும் ‘வேலைக்காரனி’ன் மையக்கரு!

‘இனி விளம்பரங்களில் நடிப்பதில்லை... இது என் தனிப்பட்ட முடிவு’ என வேலைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பின்னணியில் இருப்பது ‘வேலைக்காரன்’ படத்தின் மையக்கரு என்றே கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் பயன்படுத்தும் பல உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்களையும், பித்தலாட்டங்களையும் தோலுரிக்கும் படமாகத்தான் ‘வேலைக்காரன்’ உருவாகியிருக்கிறது என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனிருத்தின் மயக்கும் பாடல்களும், எகிற வைக்கும் பின்னணி இசையும்!

சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணிக்கு இது 5வது படம். தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து அனிருத்தையே ஏன் இசையமைக்க வைக்கிறார் சிவகார்த்திகேயன் என்பதற்கு ‘வேலைக்காரன்’ பாடல்களின் வெற்றியே சான்று. அதிலும் குறிப்பாக கருத்தவன்லாம் கலீஜாம், இறைவா பாடல்கள் இந்த வருடத்தின் மெஹா ஹிட். இதுமட்டுமில்லாமல், அனிருத்தின் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும். அதிலும் ‘வேலைக்காரன்’ படத்திற்கான பின்னணி இசைக்காக பல மாதங்கள் அனிருத் செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நட்சத்திரப் பட்டாளமும், வலிமையான கதாபாத்திரங்களும்!

வேலைக்காரன் படத்தின் மிகப்பெரிய பலம் என்றுகூட இதனைச் சொல்லலாம். முதல்முறையாக சிவகார்த்திகேயன், நயன்தாரா கூட்டணி என்பதோடு, மிகச்சிறந்த நடிகர் என மலையாள சினிமாவால் புகழப்படும் ஃபஹத் ஃபாசிலும் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களோடு பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உட்பட இரண்டு டஜன் முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இத்தனை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் படத்தின் கதையோட்டத்தில் முக்கிய பங்களிப்பு இருக்குமாம்.

உச்சபட்ச டெக்னிக்கல் விஷயங்கள்!

அனிருத்தின் இசை மட்டுமில்லாமல், ராம்ஜியின் ஒளிப்பதிவும், எடிட்டர்கள் ரூபன், விவேக் ஹர்ஷனின் பங்களிப்பும் படத்தில் பெரிதாகப் பேசப்படுமாம். அதுமட்டுமில்லாமல், படத்தின் செட் ஒர்க் பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளது. படத்தில் இடம்பெறும் சேரிப்பகுதிக்காக மட்டுமே ஏழரை ஏக்கரில் செட் அமைத்து நிஜ சேரியையே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் முத்துராஜ். இதுதவிர படத்தின் சவுன்ட் டிசைனும் பெரிதாக கவனிக்கப்படும் என்கிறார்கள்.#Velaikkaran #Sivakarthikeyan #FahadhFaasil #Nayanthara #PrakashRaj #MohanRaja #Anirudh #24AMStudios #RDRaja #Sneha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;