143 - விமர்சனம்

பத்தோடு பதினொன்று!

விமர்சனம் 11-Nov-2017 5:36 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Rishi
Production : Eye Talkies
Starring : Rishi, Priyanka Sharma, Vijayakumar, KR Vijaya
Music : Vijay Baskar
Cinematography : Rajesh JK
Editing : Suresh Urs

கதாநாயகனாக நடித்து இப்படத்தை இயக்கியிருக்கும் ரிஷி, கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா ஷர்மா, இசை அமைத்திருக்கும் விஜய் பாஸ்கர், தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட் என இப்படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கும் பெரும்பாலானவர்களும் தெலுங்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த அறிமுகங்களே! இவர்களது உருவாக்கத்தில் வெளியாகியுள்ள ‘143’ எப்படி?

கதைக்களம்

ஊரில் நண்பர்களுடன் சுற்றி திரிவதே வேலையாக கொண்டவர் விஜயகுமாரின் மகன் ரிஷி. அவரை சென்னயில் இருக்கும் தனது நண்பரின் காப்பி ஷாப்பில் வேலைக்காக அனுப்பி வைக்கிறார் விஜயகுமார். சென்னை வந்த ரிஷிக்கு தான் வசிக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள பிரியங்கா ஷர்மா மீது காதல் வருகிறது. நாளடைவில் ரிஷி மீது பிரியங்காவுக்கும் காதல் வந்து அதை வெளிப்படுத்த வரும் நேரத்தில் ரிஷியை ஒருவர் கத்தியால குத்தி விடுகிறார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ரிஷி உயிர் பிழைத்தாரா? அவரை கத்தியால் குத்தியவர் யார், எதற்காக? என்ற கேள்விகளுக்கான விடைகள்தான் ’143’.

படம் பற்றிய அலசல்

மாறுபட்ட ஒரு காதல் கதையை தர வேண்டும் என்று முயற்சித்துள்ள படக்குழுவினர் அதற்கேற்ற மாதிரி சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டிருக்கிறார்கள். கதாநாயகன் ரிஷி, பிரியங்கா ஷர்மாவை சந்தித்ததிலிருந்து அவர் பின்னாடியே சுற்றி சுற்றி வருவது நமக்கு சலிப்பை தான் ஏற்படுத்துகிறது. கிராமத்தில் ரிஷி செய்யும் ஒரு காரியம் மூலம் அவர் மீது பாசம் கொள்ளும் பிரியங்கா ஷர்மா, எதிர்பாராமல் ரிஷியை சென்னையில் சந்திப்பது, ரிஷி தன்னை விரும்புவதை அறிந்து அவரிடம் தனக்கிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தாமல் ரிஷியை அலைய விடுவது போன்ற காட்சிகள் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக அமைந்துள்ளது என்றாலும், காட்சிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பயணிப்பதும், அதிகபடியான லாஜிக் மீறல்களும் படத்தின் பலவீனங்களாக அமைந்துள்ளன. ஹீரோயிசத்துக்கு இடம் தராமல் அமைக்கப்பட்டுள்ள கிளைமேக்ஸ் காட்சி ஓரளவுக்கு பாராட்டுபெறும்படி அமைந்துள்ளது. ராஜேஷ் ஜே.கே.யின் ஒளிப்பதிவு, விஜய் பாஸ்கரின் இசை ஆகிய விஷயங்கள் படத்திற்கு ஓரளவுக்கு பலம் சேர்த்துள்ளது. ஆனால் படத்தொகுப்பாளரின் பணி பாராட்டும் படி அமையவில்லை. நடிப்பு விஷயத்தில் பாஸ் மார்க் வாங்கியிருக்கும் ரிஷி இயக்கத்தில் இன்னும் நிறைய தேர்ச்சி பெற வேண்டும்.

நடிகர்களின் பங்களிப்பு

ரிஷியை பொறுத்தவரையில் நடிப்பில் குறை சொல்ல முடியாது. கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா ஷர்மா கிளாமர் மற்றும் காதல் காட்சிகளில் கவனம் பெறுகிறார். ஆனால் எமோஷன் காட்சிகளில் தேவையான எக்ஸ்பிரஷன்ஸை வெளிப்படுத்தவில்லை. ஓரிரு காட்சிகளில் மட்டுமே வரும் விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோரது நடிப்பில் அனுபவம் பளிச்சிடுகிறது. இவர்களுடன் சாமியாராக ‘பிதாமகன்’ மகாதேவன், வில்ல்னாக வரும் ராஜ்சிம்மன், தொழிலதிபராக வரும் சதீஷ் சந்திரா பாலேட், காஃபி ஷாப் அதிபராக வரும் ‘நெல்லை’ சிவா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1. நடிகர்களின் பங்களிப்பு
2. கிளைமேக்ஸ்

பலவீனம்

1.திரைக்கதை
2.படத்தொகுப்பு
3. லாஜிக் விஷயங்கள்

மொத்தத்தில்…

வித்தியாசமான ஒரு கிளைமேக்ஸுடன் வித்தியாசமான ஒரு காதல் கதையை தர வேண்டும் என்று முயற்சித்துள்ள இயக்குனர் ரிஷி, மேலும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து படமாக்கியிருந்தால் ‘143’ கவனம் பெற்றிருக்கும்.

ஒருவரி பஞ்ச் : பத்தோடு பதினொன்று!

ரேட்டிங் : 3/10

#143MovieReview #143 #Rishi #PriyankaSharma #Vijayakumar #VijayBaskar #SureshUrs #EyeTalkies

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;