‘விவேகம்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய காரணங்கள்!

அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘விவேகம்’ படம் பற்றிய முன்னோட்டம்

முன்னோட்டம் 23-Aug-2017 4:11 PM IST Top 10 கருத்துக்கள்

அஜித் படம் ரிலீஸ் என்றால் சொல்லவே வேண்டாம்.... தியேட்டர்கள் அனைத்தும் திருவிழாக் கோலத்திற்கு ஆட்கொள்ளப்படும். அந்தவகையில், நாளை வெளியாகவிருக்கும் ‘விவேகம்’ படத்திற்காக இப்போது தியேட்டர்கள் களைகட்டத் துவங்கியுள்ளன. தமிழகத்தில் மட்டுமே இதுவரை எந்தப் படத்திற்கும் இல்லாதவகையில் 850க்கும் அதிகமான தியேட்டர்கள் ‘விவேக’த்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறதென்றால், அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை. சரி... ‘விவேகம்’ படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களுக்கு இருப்பபதில் பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமான 5 காரணங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

‘அஜித்’ எனும் மந்திரச் சொல்!

கண்டிப்பாக இதைவிட முதன்மையான காரணம் வேறெதுவாய் இருக்க முடியும். அஜித் என்ற ஸ்டாருக்கே ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் நாளை ‘விவேகம்’ படத்தைப் பார்க்க படையெடுத்து நிற்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தன்னிடம் ரசிகர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதை கச்சிதமாகத் தெரிந்துகொண்டே தனக்கான கதைகளை தேர்வு செய்கிறார் அஜித். அந்த வித்தையை இயக்குனர் சிவா நன்றாக கற்று வைத்திருப்பதாலேயே அவருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார் தல.

முழுநீள சர்வதேச த்ரில்லர்!

‘விவேகம்’ என்ற சொல்லுக்கு இன்னொரு அர்த்தம் & சர்வதேச திரைப்படம். படத்தின் ஒவ்வொரு விளம்பரங்களிலும், படக்குழுவினர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் இது ஒரு சர்வதேச த்ரில்லர் திரைப்படம் என்பதைச் சொல்லிச் சொல்லி ரசிகர்கள் மனதில் முழுதாக பதிய வைத்துவிட்டனர். படத்தின் டீஸரும், டிரைலரும் அந்தச் சொல்லுக்கு நிகராய் அமைந்துவிட்டதால், ஒரு இன்டர்நேஷனல் திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலுடன்தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் கதை நகரும் களத்திற்கேற்ப அனிருத்தின் பாடல்களும் சர்வதேச தரத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ‘நெவர் கிப்அப்...’ பாடல் ஒரு சர்வதேச ஆல்பத்தையே நினைவுபடுத்துகிறது.

‘சென்டிமென்ட்’ அஸ்திரம்!

சிவா படங்களைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை உறுதிபடச் சொல்ல முடியும். அவரின் எல்லாப் படங்களுமே ஆக்ஷன் படங்களாக இருந்தாலும், அதில் வலுவான சென்டிமென்ட் காட்சிகள் நிச்சயம் இருக்கும். சிறுத்தை, வீரம், வேதாளம் ஆகிய மூன்று படங்களையும் பார்த்தவர்கள் இதை உணரலாம். அந்தவகையில், ‘விவேகம்’ படத்திலும் அஜித்தின் மனைவியாய் நடித்திருக்கும் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பெரிய சென்டிமென்ட் அஸ்திரத்தை சிவா உள்ளடக்கியிருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் சிவா படங்களுக்கு தொடர்ந்து குடும்ப ரசிகர்களின் ஆதரவும் கிடைத்து வருகிறது.

விவேகத்தின் மூன்று தூண்கள் : இசை, ஒளிப்பதிவு, படப்பிடிப்பு தளங்கள்

இரண்டாம் காரணத்தில் இங்கே குறிப்பிட்டபடி, ‘விவேகம்’ ஒரு சர்வதேச த்ரில்லர் கதை. அதனால், அதன் ஒளிப்பதிவு, பின்னணி இசை, லொகேஷன் ஆகியவை அதனை பறைசாற்றும் வகையில் இருக்க வேண்டியது அவசியம். ஒளிப்பதிவைப் பொறுத்தவரை வெற்றி இந்தப் படத்திற்கு வழக்கமான ஆங்கிள்களையும், லைட்டிங்கையும், கலர் டோனையும் பயன்படுத்தாமல் சற்று புதிதாகவே செயல்படுத்தியுள்ளார். டீஸர், டிரைலரில் அதை நாம் முழுதாக உணர்ந்தோம். முழுப்படத்திலும் அது தொடரும் என நம்பலாம். அதேபோல் இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜார்ஜியா போன்ற பனிப்பிரதேசம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். அனிருத்தின் இசை பற்றி சொல்லவே வேண்டாம். ‘வேதாளம்’ படத்தில் ‘ஆலுமா... டோலுமா..’ பாடல் ஒன்றிற்காக அப்படத்தைப் பார்த்தவர்கள் பலர். விவேகத்திலும் ‘சர்வைவா...’ ‘தலை விடுதலை...’ ‘நெவர் கிவ்அப்’ என பாடல்களை இன்டர்நேஷனல் வெர்ஷனாக கொடுத்திருக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போன்ற பின்னணி இசையை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

பரபர திரைக்கதை!

டெக்னிக்கல் விஷயங்களையும், படப்பிடிப்புத் தளங்களையும் வைத்துதான் இப்படத்தை ஒரு இன்டர்நேஷனல் த்ரில்லர் என்று நாம் குறிப்பிட்டுள்ளோம் என நினைக்க வேண்டாம். உண்மையில்... கதையிலும், திரைக்கதையிலும் ‘இன்டர்நேஷனல்’ படத்திற்கான பரபரப்பை சிவா உருவாக்கியுள்ளார் என்றே அவரின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாதாரணமாக ஆரம்பிக்கும் படம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியதும், பரபரவென பற்றிக் கொள்ளும் அளவுக்கு ‘கிரிப்’பான திரைக்கதையை சிவா உருவாக்கியுள்ளாராம். நிச்சயம் ரசிகர்களுக்கு ‘சீட் நுனி’யில் அமர்ந்து நகம் கடிக்க படம் பார்க்கும் ஒரு அனுபவத்தை ‘விவேகம்’ தரும் என்கிறார்கள்.

#Vivegam #Ajith #KajalAgarwal #AksharaHaasan #Siva #Anirudh #Kabali #Rajinikanth #Mersal #Vijay #Thala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;