வேலையில்லா பட்டதாரி 2 - விமர்சனம்

மீண்டும் ரகுவரனின் தரிசனத்திற்காக மட்டுமே ‘விஐபி 2’

விமர்சனம் 11-Aug-2017 11:48 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Soundarya Rajnikanth
Production : Wunderbar Films, V. Creations
Starring : Dhanush, Kajol, Amala Paul, Ritu Varma, Samuthirakani
Music : Sean Roldan
Cinematography : Sameer Thahir
Editing : Prasanna GK

தனுஷ் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2ஆம் பாகம் தற்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது. இயக்கத்திற்கு சௌந்தர்யா ரஜினிகாந்த், இசைக்கு ஷான் ரோல்டன், ஒளிப்பதிவுக்கு சமீர் தாஹிர், வில்லி கேரக்டருக்கு கஜோல் என புதிய டீமுடன் தனுஷ் களமிறங்கியிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’, முதல் பாகத்தின் வெற்றியை தக்கவைத்துள்ளதா?

கதைக்களம்

ஹாஸ்பிடல் புராஜெக்ட் ஒன்றை கைப்பற்றுவதில் அனிதா கன்ஸ்ரக்ஷனில் வேலைபார்க்கும் தனுஷுக்கும், கஜோலின் வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷனுக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. இந்த புராஜெக்ட் தனுஷ் வசம் வருகிறது. மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வரும் தன்னை ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலைசெய்யும் தனுஷ் வீழ்த்திவிட்டதாக நினைக்கும் கஜோல், அதன்பிறகு தனுஷ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பிற்கும் முட்டுக்கட்டையாக நிற்கிறார். கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய நிலைமைக்கு ஆளான தனுஷை, மீண்டும் ‘வேலையில்லா பட்டதாரி’யாக்குகிறார் கஜோல். அதன்பிறகு ‘ரகுவரன்’ என்ன செய்கிறார் என்பதே இந்த 2ஆம் பாகத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

கதையைப் பொறுத்தவரை முதல் பாகத்திற்கும், இந்த 2ஆம் பாகத்திற்கும் பெரிய வித்தியாசமெல்லாம் எதுவும் இல்லை. அதே ‘ஹீரோ - வில்லன் மோதலை’ அடிப்படையாகக் கொண்ட கதைக்களம்தான். அதில் ஒரேயொரு சமூக அக்கறை விஷயத்தை மட்டும் சேர்த்து ‘விஐபி 2’வாக ஆக்கியிருக்கிறார் கதை, வசனம் எழுதியிருக்கும் தனுஷ். முதல் பாகத்தில் காதலன், காதலியாக கொஞ்சிக் கொண்டிருந்த தனுஷும், அமலா பாலும் இந்த 2ஆம் பாகத்தில் கணவன், மனைவியாக குடும்பச் சண்டை போடுகிறார்கள். முதல் பாதி முழுக்க வரும் இதுபோன்ற காட்சிகளை ஓரளவுக்கு ரசிக்கும்படியே இயக்கியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். ஆனால், இடைவேளைக்கு பிறகு கதையை எப்படி நகர்த்துவது, படத்தை எப்படி முடிப்பது என்பதில் ‘விஐபி 2’ டீம் குழம்பியிருக்கிறதோ என்ற உணர்வே ஏற்படுகிறது. அந்தளவுக்கு 2ஆம் பாதி காட்சிகளும், க்ளைமேக்ஸும் பலவீனமாக படைக்கப்பட்டிருக்கின்றன.

அதோடு அனிருத்தின் இசை முதல் பாகத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஆனால், ‘விஐபி 2’வில் ஷான் ரோல்டனின் பாடல்கள் திரையில் பெரிய கவனம் பெறவில்லை. ‘மாஸ்’ காட்சிகளும் வலுவாக அமைக்கப்படாததால் பின்னணி இசையிலும் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. முக்கியமான காட்சிகளுக்கு அனிருத்தின் இசையையே பயன்படுத்தியிருப்பது தனுஷின் சாமர்த்தியம்! சமீர் தாஹிரின் ஒளிப்பதிவில் தனுஷ் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

தனுஷைப் பொறுத்தவரை ஏற்கெனவே ‘ரகுவரனாக’ தன்னை 100% நிலைநிறுத்திவிட்டதால், அவரின் பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு, ஸ்டைலிஷ் மேனரிசங்கள் என அனைத்திலும் மீண்டும் ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும் அதில் தனுஷின் நடனம் தனியாக கவனிக்க வைத்துள்ளது. அதேபோல், சண்டைக்காட்சிகளிலும் முதல் பாகத்திற்கு இணையான உழைப்பை இதிலும் கொட்டியிருக்கிறார். மொத்தத்தில் ரகுவரனின் பங்களிப்புதான் படத்திற்கு மிகப்பெரிய பலம். க்ளைமேக்ஸை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், ஒரு மிகப்பெரிய ஸ்டேட்டஸிலிருக்கும் பிசினஸ்வுமனை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கஜோல், ஆனால், அவருக்கும் தனுஷுக்குமான மோதல் காட்சிகளில் போதிய சுவாரஸ்யமில்லாததால், நடிப்பதற்கான பெரிய வேலை எதுவும் கஜோலுக்கு இல்லாமல் போய்விட்டது. இருந்தபோதும், தன் பங்கு வேலைகளை கச்சிதமாகவே செய்திருக்கிறார் கஜோல். காதலியாக ரசிக்க வைத்த அமலாபால், மனைவியாகவும் தன் கேரக்டரை சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார். வழக்கம்போல் சமுத்திரக்கனி ஒன்றிரண்டு அறிவுரைகளை வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். சுரபி கேரக்டரில் நடித்திருக்கும் ரீதுவர்மாவுக்கு மொத்தமே இரண்டு காட்சிகள்தான்.

பலம்

1. தனுஷ், கஜோலின் பங்களிப்பு
2. முதல்பாதியின் சில சுவாரஸ்ய காட்சிகள்
3. ஒளிப்பதிவு

பலவீனம்

1. திரைக்கதை
2. இசை
3. முதல் பாகத்தின் வெற்றியால் எழுந்த எதிர்பார்ப்பு

மொத்தத்தில்....

முதல் பாகத்தை மறந்துவிட்டுப் பார்த்தால், ‘விஐபி 2’வை ஓரளவு ரசிக்கலாம். ஆனால், முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியும், அது தந்த சுவாரஸ்யங்களையும் ரசிகர்களால் அத்தனை எளிதில் மறந்துவிட முடியுமா? அதனை மறக்கச் செய்யும் வகையிலான ஒரு சுவாரஸ்ய திரைக்கதையையும், அசத்தலான பாடல்களையும் தந்திருந்தால் ‘விஜபி 2’வையும் கொண்டாடியிருப்பார்கள் ரசிகர்கள்.

ஒரு வரி பஞ்ச் : மீண்டும் ரகுவரனின் தரிசனத்திற்காக மட்டுமே ‘விஐபி 2’

ரேட்டிங் : 4.5/10

#VelaiillaPattadhari2Review #VelaiillaPattadhari2 #VIP2 #Dhanush #Kajol #AmalaPaul #RituVarma #Samuthirakani #SeanRoldan #SameerThahir #SoundaryaRajnikanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலா ட்ரைலர்


;