விஜய்சேதுபதிக்கு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘விக்ரம் வேதா’

‘மக்களுடன் தியேட்டரில் பார்க்க விரும்புகிற படம் விக்ரம் வேதா’ - விஜய்சேதுபதி

செய்திகள் 29-Jun-2017 10:02 AM IST VRC கருத்துக்கள்

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம் வேதா'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி, மாதவன், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், இசை அமைப்பாளர் சாம்.சி. உட்படல் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்த இடம் 'விக்ரம் வேதா' படப்பிடிப்பு தளம் தான். இந்த படத்தில் எனக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து இப்பத்தில் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தின் கதையை 2014-ல் கேட்டேன். தற்போது படமாக பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தை தயாரித்திருக்கும் ஷசிகாந்த் சாரின் ரசனை மாறுபட்டது. ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரசனை மிகவும் முக்கியம். அது ஷசிகாந்திடம் நிறைய உள்ளது. வரலட்சுமி, கதிர் மற்றும் விவேக் உள்ளிட்ட யாருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. மாதவனுக்கும் எனக்கும் எது முதல் காட்சியோ, அது தான் எங்கள் இருவரையும் வைத்து முதலில் படமாக்கப்பட்டது. பெரிய படங்கள், பெரிய நடிகர்களோடு நடித்தவர் மாதவன். அவரோடு நடிக்கும்போது எப்படியிருக்கும், எதிர்வினை எப்படியிருக்கும், முதல் தடவை நம்மைக் காணும்போது என்ன பேச வேண்டும் என நிறைய யோசித்து வைத்திருந்தேன். அவர் வந்தவுடனே சாதாரணமாக அந்த இடம் மாறிவிட்டது. பழகுவதற்கு இனிமையானவர். ஒரு காட்சியைப் பற்றி எளிதாக அவருடன் விவாதிக்க முடிகிறது. நீண்ட நாள் நண்பர்கள் இணைந்து பணியாற்றினால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் அவரோடு நடித்தது இருந்தது.

இந்தக் கதையில் கதிரும் ஒரு நாயகன் தான். சில சமயங்களில் வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவு மட்டுமே, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். கதிருடன் பழகியதால் சொல்கிறேன், அவனிடம் அவனது வயதுக்கு மீறிய ஒரு முதிர்ச்சி இருக்கிறது. நாம் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இப்படத்தின் டைனோசர் வினோத் சார் தான். அவருடைய வேலை சத்தமாக இருக்கும். ஆனால், அவரோ அமைதியாக இருப்பார். அவர் ஒரு மகா கலைஞர். அவருடைய ஒளிப்பதிவில் இதுவரை ஒருமுறை கூட மானிட்டரைப் பார்த்ததில்லை. அவரோடு பணியாற்றியதே சந்தோஷம் தான்.

இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது நிறைய கொலைகள் இருப்பது போல தோன்றும். ஆனால், அதெல்லாம் தாண்டி இது ஒரு லாலாலா படம். அவ்வளவு தூரம் வாசித்திருக்கிறோம். நிறைய எமோஷன் காட்சிகள் நிறைந்த ஒரு அற்புதமான படம். இப்படத்தின் எமோஷன் காட்சிகள் மின்னல் தாக்குவதைப் போன்று உங்களைத் தாக்கும்.

விக்ரமாதித்தான், வேதாளம் படத்தின் கதைக்களத்தை எப்படி இவ்வளவு நாள் விட்டு வைத்தார்கள் என்பதை இந்த கதையை கேட்டவுடன் நினைத்தேன். அதனை மிகவும் சுவாரசியமாக இப்படத்தின் கதைக்குள் திரைக்கதையாக வடிவமைத்திருந்தார்கள். எனது கதாபாத்திரத்தின்படி சொல்கிறேன். ஒரு வாழ்க்கையை படித்த ஒருவன் பேசும் தத்துவங்கள், வாழ்க்கையை அவன் எப்படி புரிந்து கொண்டுள்ளான், வாழ்க்கையின் மீது அவனுடைய பார்வை என்ன என பல விஷயங்களைக் கூறியுள்ளோம். நிறைய ஆழமான வசனங்கள் உள்ளன.

இப்படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியுமே இயக்குநர் புஷ்கர் - காயத்ரி இருவரால் உருவாக்கப்பட்டவை. நிறைய படங்களில் நடித்துவிட்டேன். 'விக்ரம் வேதா' படம் மட்டும் எனக்கு பதட்டமாக உள்ளது. இப்படத்தை மக்களோடு திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன். போலீஸ், ரௌடி கதை தான். புதிதாக எதுவுமே இல்லை. ஆனால், சொன்ன விதம் புதுமையாக இருக்கும்’’ என்றார் விஜய்சேதுபதி!

விழாவில் மாதவன், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி, இசை அமைப்பாளர் சாம் முதலானோரும் பேசினார்கள்.

#VikramVedha #VijaySethupathi #Madhavan #Varalakshmi #ShradhaSrinath #SamCS #PushkarGayathri

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;