‘யாகன்’ படத்தில் இண்டர்நேஷனல் ஹீரோ! லோக்கல் ஹீரோயின்!

புதுமுகங்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘யாகன்’

செய்திகள் 1-Apr-2017 4:36 PM IST VRC கருத்துக்கள்

டென்மார்க் நாட்டு தமிழ் இளைஞர் சஜன் கதாநாயகனாக நடிக்க, லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ள படம் ‘யாகன்’. அறிமுக இயக்குனர் வினோத் தங்கவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளார். ’மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. பாடல்களை திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரும், சுரேஷ் காமாட்சியும் இணைந்து வெளியிட, நடிகை நமீதா பெற்றுக்கொண்டார்.

அப்போது ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் பேசும்போது, ‘‘பெரிய பட விழாக்களுக்கு நான், நீ என்று போட்டிப் போட்டுகொண்டு செல்ல பலரும் இருக்கிறார்கள். ஆனால் சிறிய படங்களின் விழாக்களுக்கு அதிகம் யாரும் வருவதில்லை. இந்த படக் குழுவினரை ஊக்கப்படுத்த வேண்டும், வாழ்த்த வேண்டும் என்று நான் இங்கு வந்திருக்கிறேன். புதிதாக படம் தயாரிக்க வருபவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். சினிமாவில் வியாபார வாய்ப்புகள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால் யாரும் அதை தெரிந்துகொண்டு வருவதில்லை. வியாபார விஷயங்கள் தெரியாமல் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். வியாபார விஷயங்களை தெரிந்து கொண்டு வந்து படம் எடுங்கள்! அப்போது தான் லாபம் சம்பாதிக்க முடியும்! இது தான் எனது வேண்டுகோள்’’ என்றார்.

சுரேஷ் காமாட்சி பேசும்போது, ‘‘ஈழத்தில் பிறந்து லண்டனில் வளர்ந்து தமிழகத்தில் சாதிக்க வந்திருக்கும் இசை அமைப்பாளர் நிரோ பிரபாகரன், டென்மார்க்கிலிருந்து தமிழ் சினிமாவில் சாதிக்க வந்திருக்கும் சஜன் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. தமிழ் வார்த்தைகளும், வரிகளும் நன்றாக உள்ளது. தமிழ் மொழி யாரையும் ஏமாற்றாது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்’’ என்றார்.

நடிகை நமீதா பேசும்போது, ‘‘பெரும்பாலும் தமிழ் படங்கள் மூலம் அறிமுகமாகும் ஹீரோக்கள் லோக்கல் ஏரியாவை சேர்ந்தவர்களாகவும், ஹீரோயின்கள் இண்டர்நேஷனல் அல்லது பாலிவுட்டை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்! ஆனால் இந்த படத்தை பொறுத்தவரையில் ஹீரோ இன்டர்நேஷனலாகவும், ஹீரோயின் லோக்கலாகவும் இருக்கிறார்கள். இசை அமைப்பாளர் லண்டனிலிருந்து வந்திருக்கிறார்! அனைவரும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

‘யாகன்’ படத்திற்காக மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரும் பாடல் எழுதியிருக்கிறார். இதனை முன்னிட்டு இவ்விழாவிற்கு நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் மற்றும் அவரது மாமனார் வந்திருந்தனர். இருவரும் ‘யாகன்’ படக்குழுவினருடன் இணைந்து நா.முத்துக்குமாரின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து ‘யாகன்’ படக்குழுவினர் நா.முத்துக்குமாரின் மகனிடம் 25,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்கள்!

#Yaagan #MappanarProduction #Sajan #NaMuthukumar #AnjenaKirti #Namitha #VinothThangavel #YaaganMovieAudioLaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;