விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

முன்னோட்டம் 23-Feb-2017 12:16 PM IST Chandru கருத்துக்கள்

விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு வகையில் மனித உணர்வுகளை பிரபலிப்பதாக அமைந்து வருகிறது. கடந்த வருடத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘பிச்சைக்காரன்’, வித்தியாசமான கதைக்களத்தை தாங்கிவந்த ‘சைத்தான்’ ஆகிய படங்கள் விஜய் ஆண்டனியின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல பேருதவி செய்தது. இந்நிலையில், அவரின் ‘எமன்’ படம் நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைப் பார்க்கத் தூண்டும் பல்வேறு காரணங்களில் 5 முக்கிய காரணங்களை ‘டாப் 10 சினிமா’ ரசிகர்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

தற்போதைய அரசியல் சூழல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு இன்னமும் அடங்காத சூழல்தான் நிலவி வருகிறது. இதனால் தமிழ்த்திரையுலகம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில், கிட்டத்தட்ட தற்போதைய அரசியல் சூழலை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு கதைக்களத்துடன் ‘எமன்’ படம் வெளிவரவிருப்பதாக நம்பப்படுகிறது. அரசியல் நாட்டம் கணிசமாக உயர்ந்துள்ள இன்றைய இளைஞர்களுக்கு ‘எமன்’ படம் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருப்பது உண்மை.

நடிகர்களின் பங்களிப்பு

பெரிய ரசிகர் பட்டாளங்கள் இல்லையென்றாலும், விஜய் ஆண்டனியின் கதைத் தேர்வுக்காகவம், அவரின் அலட்டல் இல்லாத நடிப்புக்காகவுமே அவருடைய படங்களைப் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அந்தவகையில் இந்த ‘எமனி’லும் விஜய் ஆண்டனி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். தவிர நாயகியாக மியா ஜார்ஜ், முக்கிய அரசியல்வாதி கதாபாத்திரத்தில் இயக்குனர் தியாகராஜன், குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் சார்லி என நம்பிகையான நடிகர்கள் ‘எமன்’ படத்தில் நடித்திருப்பது நிச்சயம் ப்ளஸ்தான்.

மியா ஜார்ஜின் கதாபாத்திர வடிவமைப்பு

நாயகனுக்கு முக்கியத்துவமுள்ள அரசியல் படமாக ‘எமன்’ இருக்கும் என்ற எதிர்பார்பிருந்தாலும், உண்மையில் இப்படத்தின் மையக்கதை மியா ஜார்ஜைச் சுற்றி வருவதுபோல்தான் கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இதனை மியாவே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதோடு, முதல்முறையாக தனிப்பாடல் ஒன்றிலும் தோன்றவிருக்கிறார் மியா ஜார்ஜ். குறிப்பாக இப்படத்தில் அவர் நடிகையாகவே நடிக்கிறார் என்பது நிச்சயமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

ஜீவா சங்கரின் திரைக்கதை ஏற்படுத்தும் நம்பிக்கை

தனது அறிமுகப் படமான ‘நான்’, அதனைத் தொடர்ந்து வெளிவந்த ‘அமர காவியம்’ ஆகிய இரண்டு படங்களிலுமே வித்தியாசமான திரைக்கதை அமைப்பின் மூலம் வெகுவாகக் கவர்ந்தவர் இயக்குனர் ஜீவா சங்கர். இப்படம் நெடுக ஆங்காங்கே ரசிகர்கள் எளிதில் யூகிக்க முடியாத ட்விஸ்ட்களும், புதிய கேரக்டர்களின் அறிமுகமும் இருக்குமென நடிகர் தியாகராஜன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஜீவா சங்கரின் ‘எமன்’ திரைக்கதையும் ரசிகர்களுக்கு புதியதொரு படைப்பைப் பார்க்கும் வாய்ப்பைத் தரும் என நம்புவோம்.

விஷுவல் மேஜிக்

ஒளிப்பதிவாளராக தனது திரையுலக பயணத்தைத் துவங்கி, இயக்குனராக மாறியவர் ஜீவா சங்கர். அதிலும் அவரின் குருவான ஒளிப்பதிவாளர் ஜீவாவின் பட்டறையில் பயின்றவர் என்பது ஜீவா சங்கரின் ஒவ்வொரு பிரேமிலும் தெரியும். இயக்குனர் என்ற அடையாளத்தையும் தாண்டி, தான் இயக்கும் படங்களில் தனக்குள் இருக்கும் ஒளிப்பதிவாளனை தனித்து தெரிய வைப்பதில் கைதேர்ந்தவர் ஜீவா சங்கர். அந்தவகையில் ‘எமன்’ படத்திலும் நிச்சயமாக ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கரின் விஷுவல் மேஜிக்கை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது படத்தின் டிரைலர், பாடல் வீடியோ மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் இரண்டு நிமிட காட்சி ஒன்று.#VijayAntony #Picchaikaaran #Saithan #Yaman #JeevaShankar #MiyaGeorge #Thyagarajan #Naan #YamanMoviePreview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;