அதிரடி போலீஸ் அதிகாரிகளாக வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் நடிக்கும் ‘எவனவன்’

’மெய்ப்பொருள்’, ‘பனித்துளி’ படங்களை தொடர்ந்து நட்டி குமார் இயக்கியுள்ள படம் ‘எவனவன்’

செய்திகள் 9-Feb-2017 11:55 AM IST VRC கருத்துக்கள்

சிறந்த திரைப்படமாக தமிழக அரசின் விருது பெற்ற ‘மெய்ப்பொருள்’ மற்றும் ‘பனித்துளி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நட்டி குமார் மூன்றாவதாக இயக்கியுள்ள படம் ‘எவனவன்’. ‘டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் அதிரடி போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் என்ற புதுமுகமும், ‘முருகாற்றுப்படை’யில் நடித்த சரண் மற்றும் சாக்‌ஷி சிவா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு பெடோ பீட் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படம் குறித்து இயக்குனர் நட்டி குமார் பேசும்போது, ‘‘எதையும் திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இதை செய்தால், இப்படி செய்தால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தே செய்பவர்கள் நிறைய பேர். பின் விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்களும் இருக்கிறார்கள்! சின்ன தவறுதானே செய்கிறோம், அதனால் என்ன பெரிதாக வந்துவிடப் போகிறாது என்று நினைத்து ஒரு இளைஞன் செய்யும் தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது என்பது தான் இந்த படத்தின் கதைக்களம். அதனை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஆந்திரா மற்றும் பாடல்களின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றுள்ளது’’ என்றார்.
இந்த படத்தை இயக்கியிருக்கும் நட்டி குமார் பல விருதுகள் பெற்ற ‘மோகமுள்’ திரைப்படத்தை தயாரித்த ஜானகி ராமனின் புதல்வராவார். ‘எவனவன்’ படத்தின் ஒளிப்பதிவை அருண் பிரசாத் கவனித்திருக்க, ராமராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை தென்றல் ராம் குமார் எழுதியுள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

#VincentAshokan #SoniaAgarwal #Yevanavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;