ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து சூர்யா அறிக்கை!

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி போராடி வரும் அனைவருக்கும் தனது ஆதரவை தெரிவித்து சூர்யா அறிக்கை

செய்திகள் 17-Jan-2017 1:49 PM IST Chandru கருத்துக்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றத் தடையை மீறி பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அப்படி ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரியும், ‘பீட்டா’ அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்றுமுதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெரினா பீச்சில் மாணவர்களும், இளைஞர்களும் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த டி.ராஜேந்தர், மயில்சாமி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஆர்யா, இயக்குனர்கள் அமீர், வ.கௌதமன் உட்பட பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உணர்வோடு தற்போது நடிகர் சூர்யாவும் கைகோர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம்...

‘‘போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்...

பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ‘ஜல்லிக்கட்டு’ மாறி இருக்கிறது. ‘ஜல்லிக்கட்டு நடத்த தடை’ வாங்கி, பொதுப்பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்!

‘தன்னெழுச்சியான’ போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, ‘மாடுகளுக்கு எதிரானது’ என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற ‘பீட்டா’ அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. ‘நாட்டு மாடு இனம்’ அழிவதற்கு துணைபோகிறவர்கள், ‘ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன’ என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

மக்களின் போராட்டம் வெற்றிபெற்று ‘ஜல்லிக்கட்டு’ விரைவில் நடைபெறும். எதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

அன்புடன்,
சூர்யா

#Suriya #S3 #Singam3 #Jallikattu #Alanganallur #Beta #Karthi #Sivakumar #Maattraan #Masss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;