கத்தி சண்டை - விமர்சனம்

காலாவதியாகிப்போன திரைக்கதை!

விமர்சனம் 23-Dec-2016 5:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Suraj
Production : Madras Enterprises
Starring : Vishal, Tamannaah, Jagapati Babu, Vadivelu, Soori
Music : Hiphop Tamizha
Cinematography : Richard M. Nathan
Editing : Selva RK

அலெக்ஸ் பாண்டியன், அப்பாடக்கர் என வரிசையாக சறுக்கிய இயக்குனர் சுராஜ் விட்டதைப்பிடிக்க ‘கத்தி சண்டை’ மூலம் களத்திற்குத் திரும்பியிருக்கிறார். இந்தமுறை அவருக்குக் கைகொடுக்க வைகைப்புயலும் இணைந்திருப்பதால் கத்தி சண்டைக்கான எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை. விஷால், தமன்னா, சூரி ஆகியோரும் நடித்திருக்கும் ‘கத்தி சண்டை’ காமெடியா...? அடிதடியா?

கதைக்களம்

கட்டுக்கட்டாக பணத்தை கடத்தி வரும் கண்டெய்னர் லாரி ஒன்றை மடக்கிப் பிடிக்கிறார் தமன்னாவின் அண்ணனும் ‘டிசி’யுமான ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் விஷால் என்ட்ரி தருகிறார். தமன்னாவை காதலிக்கிறார், கொஞ்சம் கொஞ்சமாக ஜெகபதி பாபுவின் வீட்டிற்குள் மாப்பிள்ளையாக நுழைகிறார். திடீரென தான் ஒரு சிபிஐ என ‘ஐடி’யைக் காட்டி ஜெகபதி பாபுவை மிரட்டும் விஷால், அவர் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் பல கோடி ரூபாய்களை வெளியே எடுக்கிறார். உண்மையில் விஷால் யார்? அவர் எதற்காக தமன்னாவை காதலித்தார்? ஜெகபதி பாபுவின் வீட்டில் அவ்வளவு பணம் எப்படி வந்தது? அதன் பிறகு என்னென்ன சம்பவங்கள் நடந்தன? என்பதற்கான விடைதான் ‘கத்தி சண்டை’.

படம் பற்றிய அலசல்

‘புலியைப் பார்த்து சூடுபோட்டுக்கொண்ட பூனை கதை’யாக ஷங்கரின் ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி போன்ற படங்களின் மையக்கதையைத் தழுவி ஒரு ஒன்லைனைப் பிடித்து, அதற்கு ஒரு சுவாரஸ்யமற்ற லாஜிக் இல்லாத திரைக்கதையையும் அமைத்து ‘கத்தி சண்டை’யாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். படத்தின் மையக்கதையே படத்தின் கடைசி 20 நிமிடத்தில் தான் வருகிறது. மீதமிருக்கும் 2 மணி நேரத்திற்கு மேலும் காமெடி, அடிதடி என்ற பெயரில் ரசிகர்களின் பொறுமையாக சோதிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், அந்த கடைசி 20 நிமிட ஃப்ளாஷ்பேக் காட்சியும் 20 வருடத்திற்கு முந்தைய தமிழ் சினிமா பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் யூகித்துவிட்ட பல ‘ட்விஸ்ட்’களை ஆங்காங்கே தெளித்துவிட்டிருக்கிறார்கள். அதனால், மேற்படி ட்விஸ்ட்களுக்கு ஆச்சரியப்படுவதற்குப் பதில் ‘கெட்டாவி’தான் விடுகிறார்கள்.

படத்தின் ஒரே ஆறுதல் முதல் பாதியில் வரும் சூரியின் சிற்சில காமெடிகள் மட்டுமே. ‘கம்பேக்’ வடிவேலுவால் கூட படத்தை எந்த இடத்திலும் காப்பாற்ற முடியவில்லை. கதையும், திரைக்கதையுமே சரியில்லை எனும்போது படத்தின் டெக்னிக்கல் விஷயங்களான இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை பற்றியெல்லாம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

ஒரு ஹீரோவாக ரொமான்ஸ், ஹ்யூமர், ஆக்ஷன், டூயட் என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாட வாய்ப்புள்ள ஒரு கேரக்டர்தான் விஷாலுக்கு. ஆனால், ஏற்கெனவே பார்த்து சலித்துப்போன கேரக்டர் என்பதால் அவரின் எந்த ஒரு முயற்சியும் ரசிகர்களிடம் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாக, க்ளைமேக்ஸில் விஷால் பேசும் சீரியஸ் வசனங்களுக்கு தியேட்டரில் சிரிப்புச் சத்தம் கேட்கிறதென்றால், மேற்படி காட்சிகளின் நிலைமையை படம் பார்க்காதவர்கள்கூட யூகித்துவிடலாம். ‘பாகுபலி’, ‘தேவி’யில் கிடைத்த புகழை சர்வ சாதாரணமாக இப்படத்தின் மூலம் இழந்திருக்கிறார் தமன்னா. பாடல்களுக்கு கிளாமர் உடைகளில் நடனமாடுவதோடு அவரின் வேலை முடிந்துவிடுகிறது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலுவும் முழுதாக ஏமாற்றிவிட்டார். அவரின் அறிமுகக் காட்சிக்குக் கிடைத்த ‘அப்ளாஸ்’கள் அடுத்த நொடியிலேயே அடங்கிப்போனதுதான் சோகம். அதன் பிறகு வடிவேலுவின் எந்தகாட்சிக்கும் அது மீளவே இல்லை. எதிர்பார்த்ததற்கு மாறாக சூரியின் காமெடிக்கு முதல்பாதியில் சிரிபொலிகள் அதிகமாக எழுந்தன. அவரும் இரண்டாம்பாதியில் சுத்தமாக திரையில் தோன்றவில்லை. வழக்கம்போல் தமிழ் சினிமாவின் பழைய ஃபார்முலா முட்டாள் வில்லன் கேரக்டர்களில் ஜெயபிரகாஷ், ஜெகபதி பாபு, சுதான்சு பாண்டே கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பலம்

சூரியின் ஒருசில காமெடிகளைத் தவிர்த்து படத்தின் ப்ளஸ் என்று சொல்வதற்கு எதையுமே யோசிக்க முடியவில்லை.

பலவீனம்

நோ கமென்ட்ஸ்

மொத்தத்தில்...

‘பொழுதுபோக்குப் படம்’ என்ற ஒற்றை விஷயத்திற்குள் எப்படி வேண்டுமானாலும் திரைக்கதை அமைத்து, காமெடி என்ற பெயரில் எதையாவது காட்சிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்தால் கொண்டாடிவிடுவார்கள் என தப்புக்கணக்குப் போட்டிருக்கிறார் இயக்குனர் சுராஜ். ஒரு அருமையான டீமை வைத்துக் கொண்டு, மழுங்கிப்போன கத்திகளை வைத்து சண்டைபோட்டிருக்கிறார்கள். வேறொன்றும் சொல்வதற்கில்லை!

ஒரு வரி பஞ்ச் : காலாவதியாகிப்போன திரைக்கதை!

ரேட்டிங் : 3/10

#KaththiSandaiMovieReview #KaththiSandai #Vishal #Tamannaah #JagapatiBabu #Vadivelu #Soori #HiphopTamizha #Suraj #KaththiSandaiReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;