மணல்கயிறு 2 – விமர்சனம்

சிரிப்புக்கு கேரண்டி!

விமர்சனம் 23-Dec-2016 10:26 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Madhan Kumar
Production : Sri Thenandal Films
Starring : S. Ve. Shekhar, Ashwin Shekhar, Shamna Kasim, Visu
Music : Dharan Kumar
Cinematography : Gopi
Editing : Athiyappan Siva

விசு, எஸ்.வி.சேகர் கூட்டணியில் 34 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற ‘மணல்கயிறு’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கும் ‘மணல்கயிறு-2’ முதல் பாகத்தின் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா?

கதைக்களம்

முதல் பாகத்தில் திருமண புரோக்கராக வரும் நாரதர் நாயுடுவிடம் (விசு) 8 கண்டிஷன்கள் போட்டு அவர் பார்த்து வைக்கும் உமாவை (சாந்திகிருஷ்ணா) திருமணம் செய்து செய்துகொள்கிறார் கிட்டுமணி (எஸ்.வி.சேகர்). இரண்டாம் பாகத்தில் வரும் கிட்டுமணி, உமாவின் மகள் பூர்ணாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லை! பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணாவும் தன் தந்தையை போன்றே திருமணம் செய்ய 8 கண்டிஷன்கள் போடுகிறார். நாரதர் நாயுடுவே பூர்ணாவுக்கும் வரன் பார்க்க, அஸ்வின் சேகரை திருமணம் செய்கிறார் பூர்ணா! திருமணம் முடிந்த பிறகு அஸ்வின் சேகர் தன் கண்டிஷன்களுக்கு உட்பட்டவர் இல்லை என்றும், அவர் ஒரு ‘ஃப்ராட்’ என்றும் பூர்ணாவுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு வெடிக்கும் சீரியஸ் மற்றும் காமெடி ‘பாம்’கள் தான் ‘மணல்கயிறு-2’.

படம் பற்றிய அலசல்!

இப்படத்தின் கதை, திரைக்கதையை எஸ்.வி.சேகர் எழுத, மதன் குமார் வசனம் எழுதி இயக்கியுள்ளார். விசுவின் திரைக்கதையில் முதல் பாதியில் எப்படிப்பட்ட சுவாரஸ்யம், சீரியஸ், சமூக கருத்துக்கள் இருந்ததோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இந்த இரண்டாம் பாகத்திலும் சுவாரஸ்யத்தை தந்து பாராட்டு பெறுகிறார்கள் எஸ்.வி.சேகர் மற்றும் மதன் குமார். விளம்பர படம் எடுப்பவர்களாக வரும் அஸ்வின் சேகர், ஜெகன், ஜார்ஜ் மற்றும் திருமண புரோக்கராக வரும் சாமி நாதன், பூர்ணாவுக்கு மாப்பிள்ளையாக துடிக்கும் சாம்ஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல் பாதி காட்சிகள் கொஞ்சம் நாடகத்தன்மையுடன் பயணித்தாலும் கலகலப்புக்கு பஞ்சமில்லாததால் போரடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பூர்ணா திருமணம் செய்த அஸ்வின் சேகர் அவரது மாமாவின் (குரியகோஸ்) மகன் என்று தெரிய வருவதிலிருந்து சீரியசாகும் திரைக்கதை பிறகு சென்டிமென்ட், அறிவுரைகள் என்று பயணித்து நல்ல ஒரு கிளைமேக்ஸுடன் முடிகிறது. ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வையும் தருகிறது. மொத்தம் 141 நிமிடங்கள் ஓடும் படத்தில் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகளின் நீளத்தை குறைத்தும் லாஜிக் விஷயங்களை கொஞ்சம் கடை பிடித்திருந்தாலும் ‘மணல்கயிறு-2’ இன்னும் சுவாரஸ்யம் அடைந்திருக்கும். கதை ஆசிரியர் எஸ்.வி.சேகர் மற்றும் இயக்குனர் மதன் குமாரின் எண்ணங்களுக்கு ஈடு கொடுத்து பணியாற்றியுள்ளனர் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனும், இசை அமைப்பாளர் தரணும். படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்களில் அனிருத் பாடியுள்ள ‘அடியே தாங்கமாட்டே…’ ஸ்பெஷல் ரகம்!

நடிகர்களின் பங்களிப்பு

முதல் பாகத்தில் கிட்டுமணியாக வந்த எஸ்.வி.சேகர், நாரதர் நாயுடுவாக வந்த விசு, கிட்டுமணியின் மைத்துனராக வந்த குரியாகோஸ் ஆகியோர் அதே கேரக்டர்களை இப்படத்திலும் ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் உமாவாக நடித்த சாந்தி கிருஷ்ணா வேடத்தில் ஜெயஸ்ரீ நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். கதையின் நாயகனாக வரும் அஸ்வின் சேகர் காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என எல்லா ஏரியாவிலும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளார். பூர்ணாவுக்கு தன் திறமையை வெளிப்படுத்தும்படியான நல்ல கேரக்டர். மனதில் இடம் பிடிப்பது மாதிரியாக சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார். விளம்பர இயக்குனராக வரும் ஜெகன், அவரது உதவியாளராக் வரும் ஜார்ஜ், நாரதர் நாயுடுவின் விசுவாசமான உதவியாளராக வரும் சாமி நாதன், ஜோதிடராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அரசியல் வாதியாக வரும் நமோ நாராயணன் அனைவரும் கொடுக்கப்பட்ட கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளனர்.

பலம்

1. ரசிக்கும்படியான கதாபாத்திர வடிவமைப்பு
2. பாசிட்டிவான கிளைமேக்ஸ்

பலவீனம்

1. நாடகத்தன்மையுடன் பயணிக்கும் திரைக்கதை
3. லாஜிக் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தாது.

மொத்தத்தில்…

லாஜிக் விஷயங்கள் மற்றும் கொஞம் நாடகப் பாணியிலான கதை அமைப்பை பற்றி கவலைப்படால இரண்டரை மணிநேரம் ஜாலியாக பொழுதை கழிக்க நினைப்போர் இப்படத்தைப் பாரக்க குடும்பத்தினருடன் தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : சிரிப்புக்கு கேரண்டி!

ரேட்டிங் : 4/10

#ManalKayiru2Review #ManalKayiru2 #SVeShekhar #AshwinShekhar #ShamnaKasim #Visu #DharanKumar #Gopi #SriThenandalFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மணல்கயிறு 2 - டிரைலர்


;