பைரவா - இசை விமர்சனம்

சந்தோஷ் நாராயணின் ரசிகர்களை சிறிது ஏமாற்றினாலும், விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது ‘பைரவா’.

இசை விமர்சனம் 22-Dec-2016 10:35 AM IST Chandru கருத்துக்கள்

2016ல் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான விஜய்யின் ‘பைரவா’ ஆல்பம் வருடக் கடைசியில் வெளியாகியிருக்கிறது. ‘கபாலி’ இசையமைப்பாளர், இளைதளபதியுடன் முதல்முறையாக கூட்டணி அமைந்திருக்கும் படம் என்ற ஒன்றை எதிர்பார்ப்பே ‘பைரவா’ பாடல்கள் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளன. எதிர்பார்ப்புக்கு ஏற்ற தீனி போட்டிருக்கிறாரா சந்தோஷ் நாராயணன்?

1. பட்டைய கௌப்பு...
பாடியவர் : அனந்து
சிறப்புக்குரல் : பென்னி தயாள்
பாடலாசிரியர் : வைரமுத்து


இந்த ஆல்பத்தில் ஹீரோவுக்கான அறிமுகப்பாடல் எது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் பாடல். காரணம் ஆல்பத்தின் மற்றொரு பாடலும் இதேபோன்றதொரு நாயகன் துதி பாடும் வரிகளோடு பயணிக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான பாடலைப்போல் இல்லாமல், விஜய்யின் வழக்கமான மசாலா பாடல் போன்ற உணர்வையே தருகிறது இந்த ‘பட்டைய கௌப்பு’. எது எப்படியிருந்தாலும் விஜய்யின் ஆட்டமும், அவரின் மேனரிசமும் எப்படிப்பட்ட ஆவரேஜ் பாடலையும் திரையில் பார்க்கும்போது ரசிக்கும் வைக்கும் தன்மையைக் கொண்டது. எனவே, காட்சிகளோடு நம்மை வசீகரிக்கும் என நம்புவோம்.

2. நில்லாயோ...
பாடியவர் : ஹரிச்சரண்
பாடலாசிரியர் : வைரமுத்து


இதைத்தான் எதிர்பார்த்தோம்... சந்தோஷ் நாராயணனின் ஆஸ்தான ஏரியாவான மெலடி ரகத்தைக் கொண்டிருக்கும் ஆல்பத்தின் ஒரே பாடல். அவரின் டிரேக் மார்க் ட்யூன்களோடு அட்டகாசமாக ஒலிக்கிறது. ‘இவள் தென்னாட்டின் நான்காம் கடலா...’ என்ற வைரமுத்துவின் வைர வரிகளை ஹரிச்சரணின் மெய்மறக்கச் செய்யும் குரலில் கேட்பதே தனிசுகம்தான். நிச்சயமாக அனைவருக்கும் பிடித்த ‘பைரவா’ பாடலாக இந்த ‘நில்லாயோ...’ இருக்கும்.

3. அழகிய சூடான பூவே...
பாடியவர்கள் : விஜய்நரேன், தர்ஷனா கே.டி.
பாடலாசிரியர் : வைரமுத்து


டிரென்டியான மேற்கத்திய ரகப் பாடல் இந்த ‘அழகிய சூடான பூவே...’. கொஞ்சம் ரெட்ரோ ஸ்டைலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு விஜய் நரேன், தர்ஷனாவின் குரல்கள் அற்புதமாகப் பொருந்தியிருக்கிறது. முதலில் கேட்கும்போது பெரிதாக வசீகரிக்கவில்லையென்றாலும், திரும்பத்திரும்ப கேட்கும்போது ‘ஏதோ’ செய்கிறது சந்தோஷின் இசையும், பாடகர்களின் குரல்களும். நிச்சயமாக கேட்கலாம் ரகம்!

4. பாப்பா... பாப்பா..
பாடியவர்கள் : ‘இளையதளபதி’ விஜய், ப்ரியதர்ஷினி
சிறப்புக்குரல் : அனந்து
பாடலாசிரியர் : வைரமுத்து


‘இளையதளபதி’ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆல்பத்தின் முக்கியப் பாடல். இந்தப் பாடலின் பலமே, இப்படியொரு பாடலை யாரும் விஜய்யின் குரலில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதுதான். இதுவொரு வழக்கமான விஜய் படப் பாடல்தான் என்றாலும், அதைப் பாடியிருப்பவர் விஜய் என்பதுதான் அதன் தனிச்சிறப்பு. சும்மா... குத்தி எடுத்திருக்கிறார் விஜய். கேட்கும்போதே இத்தனை எனர்ஜியாக இருக்கிறதென்றால், விஜய்யின் நடனத்தோடு இப்பாடலைப் பார்ப்பது நிச்சயமாக அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். இதையும் ஒரு நாயகன் புகழ்பாடும் வரிகளைக் கொண்ட பாடலாகத்தான் வைரமுத்து உருவாக்கியிருக்கிறார்.

5. வர்லாம் வர்லாம் வா...
பாடியவர் : அருண்ராஜா காமராஜ்
ஆங்கில ராப் : ரோஷன் ஜம்ராக்


‘வர்லாம் வர்லாம் வா... வர்லாம் வா... பைரவா...’ என்ற வரிகள்தான் லேட்டஸ்ட்டாக இளைஞர்களை படுத்தியெடுக்கும் வரிகள். காரணம் ‘பைரவா’வின் டீஸர். ரஜினிக்கு ஒரு ‘நெருப்புடா...’ போல், விஜய்க்கு ஒரு ‘வர்லாம் வா பைரவா...’. ‘பாசத்துக்கே தத்துப்புள்ள தளபதிடா... நேசத்துக்கே என்றும் இவன் அதிபதிடா...’ என இப்பாடலிலும் ஹீரோயிஸத்தை உச்சத்துக்கு ஏற்றியிருக்கிறார் வைரமுத்து. பாடலின் இடையே வரும் ரோஷனின் ஆங்கில ராப் ரசிக்க வைக்கிறது. அதிரிபுதிரி ஹிட்டடித்துள்ள இந்தப் பாடலுக்கு தியேட்டர்கள் அதிரப்போவது நிச்சயம்.

மொத்தத்தில்... மூன்று அதிரடிப் பாடல்கள், ஒரு மெலடி, ஒரு வெஸ்டர்ன் பாடல் என மொத்தம் 5 பாடல்களை கொண்டுள்ள ‘பைரவா’ ஆல்பம் இளையதளபதி ரசிகர்களைக் குறிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக தன் வழக்கமான ஸ்டைலிலிருந்து வெளியேறி, முழுக்க முழுக்க விஜய் பட இசையமைப்பாளராகவே மாறியுள்ளார் சந்தோஷ் நாராயணன். வைரமுத்துவும், முழுவதும் நாயகனை உயர்த்திப் பிடிக்கும் வரிகளுக்கே முன்னுரிமை தந்துள்ளார். இதுதான், இப்படித்தான் இருக்கும் என்பது புரிந்தவர்களுக்கு ‘பைரவா’ நிச்சயம் ஏமாற்றம் தராது.

ஒரு வரி பஞ்ச்: சந்தோஷ் நாராயணின் ரசிகர்களை சிறிது ஏமாற்றினாலும், விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது ‘பைரவா’.

#BairavaaMusicReview #Bairavaa #Vijay #KeerthySuresh #Sathish #Bharathan #VijayaProduction #SanthoshNarayanan #JagapathiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;