வீர சிவாஜி - விமர்சனம்

சறுக்கல்!

விமர்சனம் 16-Dec-2016 4:06 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ganesh Vinayak
Production : Madras Enterprises
Starring : Vikram Prabhu, Shamili
Music : D. Imman
Cinematography : M. Sukumar
Editing : Ruben

தனது தாத்தாவின் பெயரோடு வீரத்தைச் சேர்த்து களமிறங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு. ‘வீர சிவாஜி’ கைகொடுத்தாரா?

கதைக்களம்

அனாதையான விக்ரம் பிரபுவுக்கு, ‘எங்கேயும் எப்போதும்’ வினோதினியும் அவருடைய மகளும் ஆதரவாக இருக்கிறார்கள். டாக்ஸி டிரைவரான விக்ரம் பிரபுவுக்கு ஒரு மோதலில் ஷாம்லி மேல் காதல் வருகிறது. ஒருதலைக்காதலை, இருபக்கக் காதலாக மாற்ற விக்ரம் பிரபு போராடிக்கொண்டிருக்கும் சூழலில், வினோதினியின் மகள் ‘பிரைன் ட்யூமர்’ நோயால் பாதிக்கப்படுகிறார். ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவர் உயிர்பிழைப்பார் என்ற சூழலில், அவரின் மருத்துவச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் விக்ரம் பிரபுவுக்கு தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு 5 லட்சம் ரூபாயை புரட்டிய விக்ரம் பிரபு, அதை 25 லட்சமாக மாற்ற போலி பைனான்சியரான ஜான் விஜய்யிடம் சிக்குகிறார். தன்னிடமிருக்கும் கள்ள நோட்டுகளை, நல்ல பணம் வாங்கிக்கொண்டு மக்களை ஏமாற்றும் ஜான் விஜய் அன்ட் கோ, விக்ரம் பிரபுவின் பணத்தை சுருட்டிவிட்டு தலைமறைவாகிறது.

10 நாட்களுக்குள் 25 லட்சம் பணம் தேவை என்ற சூழலில், தன்னிடமிருந்த பணத்தையும் இழந்து நிற்கும் விக்ரம் பிரபு, தன் வீரத்தாலும் விவேகத்தாலும் அந்த இக்கட்டான சூழலை எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘வீர சிவாஜி’.

படம் பற்றிய அலசல்

வீர சிவாஜிக்காக ‘சதுரங்க வேட்டை’ ஸ்டைல் பித்தலாட்டங்களை மையமாக வைத்து ஒரு ‘ஒன் லைன்’ கதையை தேர்வு செய்திருக்கும் இயக்குனர் கணேஷ் வினாயக், அதில் வழக்கமான காதல், சென்டிமென்ட், காமெடிகளைச் சேர்த்து ஒரு சுமாரான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் முதல் அரை மணி நேரம் எதை நோக்கி நகர்கிறது என்பதே தெரியாமல் ‘தேமே’வென பயணிக்கிறது. இடைவேளைக்கு முந்தைய அரைமணி நேரம் கொஞ்சம் பரபரப்பாக சென்று, ஒரு ட்விஸ்ட்டுடன் ‘இடைவேளை’யும் போடுகிறார்கள். அதன்பிறகு வில்லனுக்கும், ஹீரோவுக்கும் இடையே விறுவிறுப்பான சேஷிங் காட்சிகள் இருக்கும் என்று நினைத்து வந்தமர்ந்தால் மறுபடியும் முதலிலிருந்து காதல், சென்டிமென்ட், காமெடி என சம்பந்தமில்லாமல் படத்தை இழுத்தடித்திருக்கிறார்கள். இதில் இடையிடையே பாடல்கள் வேறு...!

இமானின் பின்னணி இசை, சுகுமாரின் ஒளிப்பதிவு ஆகியவை சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

முதல் இரண்டு படங்களின் கதைகளை நன்றாக தேர்வு செய்த விக்ரம் பிரபு, அதன்பிறகான படங்களுக்கான கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்திருப்பதில் சறுக்கியிருப்பதாகவே தெரிகிறது. படத்தின் ஹீரோவாக தன்னால் முடிந்தளவு உழைப்பைக் கொட்டியிருக்கிறார் விக்ரம். திரைக்கதையில் எந்தவித பங்களிப்புமில்லாத வழக்கமான நாயகி ரோலில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் ஷாம்லி. அதைத் தவிர அவரைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. வில்லன் ஜான் விஜய்க்கும் வித்தியாசமான வில்லன் வேடமெல்லாம் இல்லை. ஆனால், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். யோகிபாபு, ரோபோ ஷங்கர், ராஜேந்திரன் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

பலம்

1. இடைவேளைக்கு முந்தைய அரைமணி நேரக்காட்சிகள்
2. பின்னணி இசையும் ஒளிப்பதிவும்

பலவீனம்

1. திரைக்கதை
2. பாடல்கள்

மொத்தத்தில்...

கதையிலும் புதுமையில்லை... திரைக்கதையிலும் சுவாரஸ்யமில்லை! வெறுமனே காதல், காமெடி, சென்டிமென்ட் காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு வழக்கமான ஆக்ஷன் படத்தை பார்க்க விரும்புபவர்கள் ‘வீர சிவாஜி’யை ரசிக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : சறுக்கல்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - டிரைலர்


;