சென்னை 28 : 2வது இன்னிங்ஸ் - விமர்சனம்

உண்மையிலேயே... ‘தி பாய்ஸ் ஆர் பேக்’

விமர்சனம் 9-Dec-2016 4:47 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Venkat Prabhu
Production : Capital Film Works, Black Ticket Company
Starring : Jai, Shiva, Premji, Aravind Akash, Nithin Sathya
Music : Yuvan Shankar Raja
Cinematography : Rajesh Yadav
Editing : Praveen K. L.

மீண்டும் களத்திற்குத் திரும்பியிருக்கிறது ‘சென்னை ஷார்க்ஸ்’ அணி. இந்தமுறை தன் பாய்ஸை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ வெங்கட்பிரபு?

கதைக்களம்

முதல் பாகத்தில் விடலைப் பையன்களாக சுற்றிக்கொண்டிருந்த ‘சென்னை ஷார்க்ஸ்’ அணி பிளேயர்களில் சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ் ஆகியோர் கல்யாணம் முடித்து குழந்தை குட்டி என குடும்பஸ்தர் ஆகிவிட்டார்கள். பிரேம்ஜி இன்னும் ‘வெர்ஜின் பாயா’க சுற்றிக் கொண்டிருக்கிறார். அதோடு ஷார்க்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜெய் தான் காதலித்த பெண்ணையே இருவீட்டாரிடம் சம்மதத்தோடு திருமணம் செய்யவிருக்கிறார். ஜெய்யின் திருமணத்தை தேனியில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால் குடும்பத்துடன் தேனி செல்கிறது ‘சென்னை ஷார்க்ஸ்’ டீம். அங்கே போனதும் திடீர் சர்ப்ரைஸாக தங்களின் நண்பன் அர்விந்த் ஆகாஷை சந்திக்கிறார்கள். அவரின் என்ட்ரிக்குப் பிறகு நடக்கும் ஆட்டம் பாட்டம், அடிதடி, கிரிக்கெட், காதல், பிரிவு, சோகம், ஏமாற்றம், சந்தோஷம் ஆகியவற்றின் கலவையே இந்த 2வது இன்னிங்ஸ்.

படம் பற்றிய அலசல்

முதல் 20 நிமிடங்களுக்கு பழைய பிளேர்களின் தற்போதைய ஸ்டேட்டஸை அறிமுகம் செய்து வைக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக மெல்ல மெல்ல கதைக்குள் நுழைகிறார். முதல் பாகத்தில் ஜாலி கேலி, குடி கும்மாளம், கிரிக்கெட் அடிதடி என கதையே இல்லாமல் பொழுதுபோக்க வைத்த இயக்குனர், இந்த 2வது இன்னிங்ஸில் ஒரு சின்ன கதையையும், அதற்கேற்ற ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையும் உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் மிகப்பெரிய பலம் முதல் பாகத்திலிருந்த பெரும்பாலான நட்சத்திரங்களை இதிலும் பயன்படுத்தி, அதோடு சில சுவாரஸ்யமான புதிய கேரக்டர்களையும் அறிமுகம் செய்து அனைவரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் வெங்கட்பிரபுவின் டைரக்ஷன் சாமர்த்தியம். ஆனால், வழக்கமாக அவர் படத்தின் க்ளைமேக்ஸிலிருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்டோ, அல்லது செம ஜாலியான ஒரு முடிவோ இல்லாமல் கொஞ்சம் ‘சப்’பென்று முடித்திருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.

வழக்கம்போல் பின்னணி இசையில் பின்னியெடுத்திருக்கிறார் யுவன். முதல் பாகத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் என்பது அப்படத்தின் முக்கிய ப்ளஸ். ஆனால் 2வது இன்னிங்ஸில் ‘சொப்பன சுந்தரி’யைத் தவிர வேறெந்த பாடலும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவையும் படத்தை எந்த இடத்திலும் தொய்வடையாமல் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

இவர்தான் ஹீரோ, இவர் ஹீரோயின் என யாரையும் தனித்தனியாக பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு அந்தந்த கதாபாத்திரங்களாக அவரவர்கள் நடித்திருப்பதால் அத்தனை பேருக்குமே சமபங்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வெங்கட் படத்தில் சிவாவின் காமெடிகள் பெரிய அளவில் கவனம் பெறுகின்றன. ஜெய், நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ், அர்விந்த் ஆகாஷ், இனிகோ பிராபகரன், பிரேம்ஜி ஆகியோரோடு இப்படத்தில் வைபவும், மகத்தும் இவர்களோடு இணைந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். முந்தைய ஹீரோயின் விஜயலட்சுமியோடு இப்படத்தில் சனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி என மேலும் இரண்டு புதிய ஹீரோயின்களையும் களமிறக்கியிருக்கிறார்கள். ‘சொப்பன சுந்தரி’யாக ஒரு பாடலுக்கு தலைகாட்டி மறைகிறார் மனீஷா யாதவ். ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா மிரட்டல் அப்பாவாக பயமுறுத்தியிருக்கிறார். இவர்களோடு சண்முக சுந்தரம், இளவரசு, சந்தானபாரதி, படவா கோபி, சுப்பு பஞ்சு போன்றவர்களையும் ‘டைமிங்’காக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக யாருடைய நடிப்பையும் குறைசொல்ல முடியாத அளவுக்கு நல்ல பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

1. வெங்கட்பிரபுவின் இயக்கம்
2. நட்சத்திரப்பட்டாளத்தின் பங்களிப்பு
3. யுவனின் பின்னணி இசை

பலவீனம்

பெரிய பலவீனங்கள் என எதையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. இருந்தாலும், பாடல்களையும், க்ளைமேக்ஸையும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாமோ என்று மட்டுமே தோன்றுகிறது.

மொத்தத்தில்....

இதுபோன்ற பொழுதுபோக்கு வகைப் படங்களின் முதல் பாகத்தை கொண்டாடித்தீர்த்த பிறகு, அதன் 2ஆம் பாகத்தை எடுப்பதென்பது பெரிய சவால். அந்த சவாலை தன் டைரக்ஷன் சாமர்த்தியத்தால் முழுமையாக பூர்த்தி செய்ய முயன்றிருக்கிறார் வெங்கட்பிரபு.

ஒரு வரி பஞ்ச் : உண்மையிலேயே... ‘தி பாய்ஸ் ஆர் பேக்’

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் தான் ஷபானா - டிரைலர்


;