‘கலைச்செல்வி’ ஜெயலலிதா பற்றிய 25 சுவாரஸ்ய சினிமா தகவல்கள்!

மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் சினிமா வரலாற்றிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள சில குறிப்புகள்

கட்டுரை 8-Dec-2016 5:50 PM IST Chandru கருத்துக்கள்

இன்று தமிழக மக்களால் ‘அம்மா’ என்றழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே அவரின் திரையுலக வெற்றிப் பயணம்தான். அந்த வகையில், 1961ஆம் ஆண்டு முதல் 1980 வரை கிட்டத்தட்ட 20 வருடங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகை ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கையிலிருந்து 25 சுவாரஸ்யத் தகவல்களை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

1. 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ஜெயராமன், சந்தியா தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஜெயலலிதா. அன்றைய காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ஜெ.வின் அம்மா சந்தியா.

2. பெற்றோர்களால் ‘கோமளவல்லி’ என்று பெயர் சூட்டப்பெற்று, அவரின் அம்மா சந்தியாவால் ‘அம்மு’ என்றழைக்கப்பட்டு, திரையுலகில் ஜெயலலிதாவாக நுழைந்து, ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆரால் ‘வாயாடி’ என சொல்லமாக அழைக்கப்பட்டு, அரசியலில் ‘புரட்சித்தலைவி’யாக உருவெடுத்து, தமிழக மக்களால் ‘அம்மா’ என்று அன்போடு அழைக்கப்பட்டார் ஜெ.

3. தமிழ் மட்டுமல்ல ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என 6 மொழிகளில் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றவர் ஜெயலலிதா. இந்தத் திறமையே அவரை இந்தியாவின் முதன்மை கதாநாயகி என்ற அந்தஸ்திற்கு அழைத்துச் செல்ல உதவியது.

4. தமிழில் 87 படங்கள், தெலுங்கில் 29 படங்கள், கன்னடத்தில் 7 படங்கள், ஹிந்தியில் 2 படங்கள், மலையாளத்தில் ‘ஜீசஸ்’ என்றொரு படம் உட்பட 125 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகை ஜெயலலிதா. அதில் 8 படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். அவரின் 100வது படம் திருமாங்கல்யம்.

5. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி..கிரியின் மகன் சங்கர் கிரி இயக்கிய "EPISTLE" என்ற ஆங்கில ஆவணப் படத்திலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.

6. 1961ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘ஸ்ரீசைல மகாத்மே’வில் பார்வதி வேடத்திலும், பின்னர் 1962ல் கிஷோர் குமார் கதாநாயகனாக நடித்த ‘மன்மாஜி’ என்ற இந்தி படத்தில் கிருஷ்ணர் வேடத்திலும் நடித்தார் ஜெயலலிதா.

7. 1964ஆம் ஆண்டு ‘சின்னத கொம்பே’ படத்தின் மூலம் தனது 15வது வயதில் கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜெ.

8. 1965ஆம் ஆண்டு அகினேனி நாகேஸ்வராராவுடன் ‘மனுஷுலு மமதாலு’ மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா, 1980-ல் தனது கடைசி தெலுங்கு படமான ‘நாயகடு விநாயகடு’விலும் நாகேஸ்வரராவுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. ஸ்ரீதர் கதை, வசனம் எழுதி தயாரித்து, இயக்கிய ‘வெண்ணிற ஆடை’ படம் மூலம் தனது 16வது வயதில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜெயலலிதா. இப்படத்தின் நாயகியாக ஹேமாமாலினியை மனிதில் வைத்திருந்த ஸ்ரீதர், ஜெயலலிதாவின் திறமையைப் பார்த்து வியந்து அவரை நடிக்க வைத்தாராம்.

10. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் மூலம் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடிக்கத் தொடங்கிய ஜெயலலிதா, ஒட்டுமொத்தமாக 28 படங்களில் அவருடன் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வெள்ளிவிழா படங்கள்.

11. 1960-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கிய ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், ‘பெரிய சினிமா நடிகையாக வருவார்’ என்று அவரை வாழ்த்தினார். நடிகையான பின்பு, சிவாஜி கணேசனுடன் மட்டுமே 17 படங்களில் நடித்தார் ஜெயலலிதா. சிவாஜியுடன் நடித்த முதல் படமான ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’யில் அவரின் மகளாக ஜெயலலிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

12. தமிழ்த்திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலேயே புகழ்பெற்ற நாயகியாக விளங்கிய ஜெயலலிதா மூன்று வருடங்களில் (1966-1968) 50 படங்களில் நடித்துக் குவித்தார். அதில் 1968ஆம் வருடம் மட்டுமே ஜெயலலிதா நடிப்பில் 21 படங்கள் வெளிவந்தன.

13. தெலுங்கில் என்.டி.ராமராவுடன் 11 படங்களிலும், நாகேஸ்வர ராவுடன் 8 படங்களிலும், கிருஷ்ணாவுடன் 2 படங்களிலும், சோபன் பாபு, ஜக்கையா ராமகிருஷ்ணா மற்றும் ஹரநாத் ஆகிய நடிகர்களுடன் முறையே ஒரு படத்திலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.

14. கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்று, இசைக்கருவிகளை மீட்டுவதிலும், பாடுவதிலும் தேர்ச்சி பெற்றவர் ஜெ. குறிப்பாக பியானோ வாசிப்பதில் வல்லவரான அவர் தமிழ் சினிமாவில் இதுவரை 11 பாடல்களைப் பாடியுள்ளார். இதுமட்டுமல்லாமல் குன்னக்குடி வைத்தியநாதனின் 3 ஆன்மீக பாடல்களையும் பாடியுள்ளார்.

15. ஆணாதிக்கம் நிறைந்த அந்தக்கால சினிமா சூழ்நிலையிலேயே பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 15 படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ஜெயலலிதா.

16. 5 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், 5 முறை தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றுள்ள ஜெயலலிதா, 1973ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற ‘சூரியகாந்தி’ படத்தின் வெற்றிவிழாவில் தந்தை பெரியார் கையால் பரிசு வாங்கியுள்ளார்.

17. 1973ஆம் ஆண்டு சிவாஜி, ஜெயலலிதா நடித்து வெளிவந்த ‘பட்டிக்காடா பட்டணமா’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதேபோல், சிவாஜியுடன் ஜெயலலிதா நடித்த ‘தெய்வமகன்’ திரைப்படம் ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பரிந்துரைப் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது.

18. இப்போது பல பட்டங்களுக்கு சொந்தக்காரராக விளங்கும் ஜெயலலிதா, 1967-ல் சினிமாவில் பெற்ற முதல் பட்டம் ‘காவிரி தந்த கலைச்செல்வி’. அதன் பின்னர் அவர் நடித்த படங்களில் 'கலைச்செல்வி' ஜெயலலிதா என்றே குறிப்பிடப்பட்டது.

19. கதாநாயகர்களுக்கு இணையாக எல்லாவற்றிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெயலலிதா ‘குமரிப்பெண்’ படத்துக்காக சைக்கிள் ஓட்டவும், ‘தெய்வ மகன்’ படத்துக்காக கார் ஓட்டவும் கற்றுக்கொண்டார்.

20. பல மேடை நாடகங்களிலும் நடித்தவர் ஜெயலலிதா. தன் தாயாருடன் இணைந்து கதாநாயகியாக அவர் நடித்த UNDER SECRETARY என்ற நாடகம் பெயர் வாங்கிக்கொடுத்தது. அந்த நாடகத்தில் ஜெயலலிதாவின் ஜோடியாக நடித்தவர் சமீபத்தில் மறைந்த அவருடைய ஆலேசாகரும் நண்பருமான சோ.ராமசாமி. The Hold Truth, The de house of the August Moon என்று இரண்டு நாடகங்களில் நடிக்கும் போதும் உடன் நடித்த சக நடிகர் ‘சோ’ ராமசாமி.

21. தேவர் பிலிம்ஸின் ‘கன்னித்தாய்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்ததற்காக ஜெயலலிதா பெற்ற சம்பளம் ஐந்தாயிரம் ரூபாய். அதன்பின்னர் வெற்றிகரமான நாயகியாக வலம்வந்தபோது இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக உயர்ந்தார்.

22. தனது ஒவ்வொரு படத்தின் பூஜையின் போதும் மாம்பலம் அகஸ்தியர் கோயில் பிள்ளையாருக்குச் சிறப்பு அர்ச்சனை செய்வதை ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டிருந்தார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

23. ‘நன்ன கர்த்வ்யா’ என்ற கன்னடப் படத்தில் ஜெயலலிதாவுக்கு மாமியாராக நடித்தது, அவரின் அம்மா சந்தியா.

24. படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்வது என்ற முடிவை ஜெயலலிதா எடுத்த சமயத்தில், பாலாஜியின் ‘பில்லா’ படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆனால் தன் முடிவிலிருந்து பின்வாங்காத ஜெ, அந்த வாய்ப்பை நிராகரித்தார்.

25. சினிமா துறையில் தொடர் வெற்றிகளை குவித்த ஜெயலலிதா, 1980-ம் ஆண்டு ‘நதியைத் தேடி வந்த கடல்’ என்ற திரைப்படத்தோடு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அதன்பிறகு 1992ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற படத்தில், தமிழக முதலமைச்சராகவே தோன்றினார் ஜெயலலிதா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி


;