ஏ, டிசம்பர் மாதமே எத்தனை இரங்ல் செய்தி எழுதுவது? – கவிஞர் வைரமுத்து!

‘கோமாளி போல் தோன்றிய அறிவாளி சோ!’ கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி!

செய்திகள் 8-Dec-2016 11:23 AM IST VRC கருத்துக்கள்

நேற்று காலை சென்னையில் காலமான பிரபல நடிகரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சோ மறைவையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்,

‘‘ஓரெழுத்தில் ஒரு வாக்கியம் சோ. வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர் என்ற ஆறு முகம் கொண்டவர். அறிவாளிகளில் சிலர் கோமாளிகளைப் போல் தோன்றும்போது கோமாளிபோல் தோன்றிய அறிவாளி அவர்! அவர் யாரை எதிர்க்கிறாரோ அவரையே தனக்கு ரசிகராக்கிவிடும் ரசவாதம் அறிந்தவர்.
தமிழ்நாட்டில் இன்று புலனாய்வு இதழியல் என்பது விரிந்து வளர்ந்திருப்பதற்கு வித்திட்டவர் அவர்தான். அவருடைய கேள்வி பதில்களுக்காக ஒரு கணிசமான கூட்டத்தை காத்திருக்க செய்த சொல்லாடல் மிக்கவர் சோ!.

எல்லாரையும் விமர்சித்து விட்டு எல்லாரையும் தன்னை நேசிக்க செய்த ஞானவித்தைதான் அவர் செய்த சாதனை! ‘நான் பாதிப்புலி. பதுங்குவேன்; ஆனால் பாயமாட்டேன்’ என்று நீலகிரி எக்ஸ்பிரஸி’ல் அவர் பேசும் வசனம்தான் அவரது எழுத்துக்கொள்கையும் கூட! அவர் எழுத்தால் யாருக்கும் தீங்கு நேர்ந்ததில்லை. தன் நெஞ்சுக்கு சரியென்று பட்டதை அவர் ஒருபோதும் சொல்ல தயங்கியதில்லை. எதிரி என்பதற்காக இகழ்ந்ததுமில்லை, நண்பர் என்பதற்காக வளைந்ததுமில்லை.

முகமது பின் துக்ளக், சம்பவாமி யுகே யுகே போன்ற நாடகங்கள் அவரை மேடை வரலாற்றில் உயர்த்திப் பிடிக்கும். அவர் எழுதிய மகாபாரதம் காலத்தை வென்று கட்டியம்கூறும். இப்படி ஒரு பல்துறை வித்தகர் இன்னொருவர் தோன்ற முடியுமா என்ற கேள்வி தான் அவரது கீர்த்தி! அவரை இழந்து வாடும் அனைவர்க்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் ஏ, டிசம்பர் மாதமே! எத்தனை இரங்கல் செய்தி எழுதுவது என்று இதயம் துடிக்கிறது. தமிழ்நாட்டின் மனித வளத்தை குறைக்காதே! இரங்கல் செய்தி எழுதி எழுதி என் கண்ணீரை கறுக்க வைக்காதே! இனிவரும் காலமெல்லாம் நலம் வரும் காலமாகத் திகழ வேண்டுமென்று காலத்தின் காலடிகளில் மண்டியிடுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

#Vairamuthu #ChoRamassamy #Rajinikanth #Suriya #Karthi #Sivakumar #MadhanKarky #Vishal #Naaser

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;