ஜெயலலிதா மறைவு : தமிழ்த்திரையுலகினர் நேரில் அஞ்சலி!

ஜெயலலிதா மறைவு : தமிழ்த்திரையுலகினர் நேரில் அஞ்சலி!

செய்திகள் 6-Dec-2016 2:50 PM IST RM கருத்துக்கள்

கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றிரவு (டிசம்பர் 5, 2016) 11.30 மணியளவில் காலமானார். அவரின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியிருக்கிறது. ஜெயலலிதாவின் பூத உடல் தற்போது சென்னை ராஜாஜி ஹாலில் அரசியல் தலைவர்கள், திரையுலகினர், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அரசியல் தலைவர்களும், மாநில முதல்வர்களும், அரசு அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மதியம் 1.30 மணியளவில் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். கலைத்துறையில் பல சாதனைகளைப் புரிந்த ஜெயலலிதாவிற்கு திரையுலகைச் சேர்ந்வர்களும் தொடர்ந்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். அவருடன் நடிகர் தனுஷம் வந்திருந்தார். ஜெயலலிதா மறைவு குறித்து தனது டுவிட்டரில் இரங்கல் குறிப்பு வெளியிட்டிருந்த ரஜினிகாந்த், ‘‘தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் அஞ்சலி செலுத்திய பின்னர், ‘‘நமது சங்கத்தின் மூத்த உறுப்பினரான ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கலைச்சேவையிலும், மக்கள் சேவையிலும் ஜெயலலிதாவின் பங்கு அளிப்பறியது’’ என்று குறிப்பிட்டார். நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து ஜெயலலிதாவிற்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். இவர்கள் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலதரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்த ஜெயலலிதா, 1961ஆம் ஆண்டு முதல் கன்னடத் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 1965ஆம் ஆண்டு ‘வெண்ணிற ஆடை’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக வெற்றிக் கொடி நாட்டிவந்த ஜெயலலிதா மறைந்த எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் நடித்துக் கொண்டே மெல்ல மெல்ல அரசியலிலும் நாட்டம் காட்டிய ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் இணைந்து அரசியல் பணிகளாற்றினார். பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்தி தமிழக முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகினர்மீது எப்போதும் மாறாத அன்பு கொண்டிருந்த ஜெயலலிதாவின் மறைவு மிகப்பெரிய பேரிழப்பாகும். அன்னாரின் மறைவுக்கு ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி


;