பார்த்திபனின் ‘குரு வணக்கம்’ நிகழ்ச்சி ஹைலைட்ஸ்!

பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்கள் நிரப்புக’ இசை வெளியீட்டும், குரு வணக்கமும்!

கட்டுரை 5-Dec-2016 12:18 PM IST VRC கருத்துக்கள்

பார்த்திபன் இயக்கி, தயரித்து, ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்துள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவும், பார்த்திபனின் குருநாதரான கே.பாக்யராஜுக்கு ‘குரு வணக்கம்’ செலுத்தும் நிகழ்ச்சியும் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. எந்தவொரு நிகழ்ச்சியையும் வித்தியாசமாக நடத்துவதில் பார்த்திபனுக்கு நிகர் யாரும் இல்லை! அதைப் போலவே ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ இசை வெளியீடும், ‘குரு வணக்கம்’ நிகழ்ச்சியும் வித்தியாசமாக நடைபெற்றது.

சிறுவர்களின் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது நிகழ்ச்சி. அதனை தொடர்ந்து டிரம்ஸ் சிவமணியின் பிரத்தியேகமான டிரம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் கதாநாயகனும், கே.பாக்யராஜின் மகனுமான சாந்தனு கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த படங்களில் இடம் பெற்ற சில பாடல்களுக்கு நடனம் ஆடினார்.

இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்திபனின் குருநாதரான கே.பாக்யராஜை மேடைக்கு அழைத்து வந்து பிரத்தியேகமான நாற்காலியில் உட்கார வைக்கப்பபட்டார். அதனை தொடர்ந்து அவர் மீது வானத்திலிருந்து பூமாரி பொழிவதுபோல் பூக்கள் மழை பொழிய, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பேனா வடிவிலான நினைவு பரிசை வழங்கினார்கள். அத்துடன் பார்த்திபன் கையால் கே.பாக்யராஜுக்கு தங்க வளைகாப்பும் அணிவித்தார் அதைப் போல இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாக்யராஜின் குருநாதரும் இயக்குனருமான பாரதிராஜாவும் கௌரவிக்கப்பட்டார். அவருக்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார் பார்த்திபன்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, ‘‘சுவரில்லாத சித்திரங்கள், தூறல் நின்னு போச்சு என்று அபசகுனமான வார்த்தைகளை தன் படங்களுக்கு தலைப்பாக வைத்து பல வெற்றிப் படங்களை வழங்கியவர் பாக்யராஜ் சார். அவரிடமிருந்து வந்தவரான பார்த்திபனும் வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர். அவர் தனது குருவுக்கு மரியாதை செய்யும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி’’ என்றார்.
இயக்குனர் ஷங்கர் பேசும்போது, ‘‘அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு ஆகிய படங்களின் கிளைமேக்சுக்காகவே நிறைய தடவை அந்த படங்களை பார்த்திருக்கிறேன். திரைக்க்தை வல்லுனரானா கே.பாக்யராஜ் சாரின் இடைத்தை யாராலும் பிடிக்க முடியாது’’ என்றார்.
இயக்குனர் விக்ரமன் பேசும்போது, ‘‘பாக்யராஜ் சார் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘எங்க சின்ன ராசா’ தான்’’ என்றார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, ‘‘ரஜினியையும் கே.பாக்யராஜையும் வைத்து நான் இயக்கிய படம் ‘நான் சிகப்பு மனிதன்’. அந்த படத்தை இயக்கும்போதே பாக்யராஜின் திறமையை கண்டு வியந்தவன் நான். பார்த்திபன் எடுத்திருக்கும் இந்த விழா நியாயமானது’’ என்றார்.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது, ‘‘பாக்யராஜ் இயக்கிய படங்களில் வரும் ஆண் குரல் பாடல்களை பெரும்பாலும் நான் தான் பாடியிருக்கிறேன். அதைப் போல பாக்யராஜ் இயக்கிய படங்கள் தெலுங்கில் வெளியாகும்போது நான் தான் அவருக்கு குரல் கொடுத்திருக்கிறேன். குரு என்பவர் இருட்டிலிருக்கும் ஒருவரை வெளிச்சத்துக்கு கொண்டு போகிறவர். அதைப் போல இருட்டிலிருந்த பார்த்திபனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த குரு பாக்யராஜ். இங்கு பாக்யராஜின் குருவான பாரதிராஜாவும் வந்திருக்கிறார். நான் பாரதிராஜாவை அவர் என்று சொல்ல மாட்டேன். ஏன் என்றால் நான் அப்படி சொன்னால் அது ரொம்ப தூரமாகி விடும். என்னோட வளர்ச்சியில் அவனுக்கும் (பார்திராஜா) நிறைய பங்கு இருக்கிறது. அவன் ‘முதல் மரியாதை’ படத்தை இயக்கியபோது அதில் சிவாஜி சார் நடித்த கேரக்டரில் முதலில் என்னை நடிக்க வைக்க தான் அவன் திட்டமிட்டிருந்தான். அவன் என்னிடம் வந்து 45 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்றான். என்னால் முடியாது என்று சொல்லி விட்டேன். அதற்கு பிறகு தான் சிவாஜி சாரை அணுகி அவரை நடிக்க வைத்தார். உண்மையை சொன்னால் நான் அந்த படத்தில் நடிக்காமல் இருந்தது அனைவருக்கும் நல்லதாக அமைந்து விட்டது. ஏன் என்றால் ஒருவேளை நான் நடித்திருந்தால் அதுபோன்ற ஒரு கேரக்டரில் சிவாஜி சாரை நாம் ரசிக்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்’’ என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது, ‘‘இந்த படம் மூலம் பார்த்திபன் சார் சாந்தனுவை நல்ல ஒரு இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் ஜெயிக்கும். ஜெயிக்க வேண்டும்! ஏன் என்றால் சாந்தனு மனிதநேயம் மிக்க ஒரு தம்பி. கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது சாந்தனு மேற்கொண்ட மக்கள் நற்பணிகளை எங்களால் மறக்கவே முடியாது’’ என்றார்.

பாரதிராஜா பாக்யராஜ் பற்றி பேசும்போது, ‘‘நான் பொதுவாக இது பொன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நான் தவற விட்டால் என் பிள்ளையை பாராட்ட எனக்கு இதுபோன்ற ஒரு மேடை இனி கிடைக்காது என்பதால் தான் நான் இவ்விழாவுக்கு வந்தேன். ஒரு மனிதனை பார்க்கும்போது அவனை பிடிக்கும். அதைப் போல இவனை பார்த்த கணமே எனக்கு பிடித்து விட்டது. நான் விதை தான் நட்டேன். ஆனால் அந்த விதைக்குள் இவ்வளவு வீரியம் இருக்கும் என்று நான் சொன்னால் அது பொய்! பார்த்திபன் நீ கிரேட்! நீ உன் குருவுக்கு செய்த மரியாதை போல எனக்கும் செய்தாய்! நான் உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

தொடந்து நிகழ்ச்சியில் கே.பாக்யராஜுடன் இயக்குனர்கள் தரணி, கரு பழனியப்பன், சரண், நலன் குமாரசாமி, லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்துரையாடிய நிகழ்வும் நடைபெற்றது.
விழாவில் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, நாசர், நெப்போலியன், பிரபு இயக்குனர் பி.வாசு, இசை அமைப்பாளர் கங்கை அமரன், ஏவி.எம்.சரவணன், நடிகைகள் ரேகா, லிசி, நடன இயக்குனர் புலியூர் சரோஜா என ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு பார்த்திபனையும், கே.பாக்யராஜையும் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சிகளை நடிகைகள் சுஹாசினி, ரோகிணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

#KodittaIdangalaiNirappuga #Parthipan #Bhagyaraj #Karthi #Vishal #Shankar #Shanthanu #ParvathiNair #VishaL #Lingusamy #ManoBala #Bharthiraja #Rekha #Poornima #Mayilsamy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;