மாவீரன் கிட்டு - விமர்சனம்

அழுத்தமில்லை... ஆனாலும் இயக்குனரின் தைரியத்திற்கு ஒரு சல்யூட்!

விமர்சனம் 2-Dec-2016 5:35 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Suseenthiran
Production : Nallu Samy Pictures
Starring : Vishnu, Sri Divya, R. Parthiepan
Music : D. Imman
Cinematography : Soorya.A.R
Editing : Kasi Viswanathan

80களின் இறுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ‘மாவீரன் கிட்டு’ படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். சாதிய அடுக்குமுறைகளுக்கெதிராக தைரியமாக குரல் கொடுத்திருக்கும் சுசீந்திரனின் முயற்சிக்கு ரசிகர்களிடம் எத்தகைய வரவேற்பு கிடைத்திருக்கிறது?

கதைக்களம்

தங்கள் இன மக்களுக்கெதிராக நடத்தப்படும் தீண்டாமைக்கெதிராக தைரியமாக குரல் கொடுத்து வருபவர் பார்த்திபன். அவரின் இன மக்கள் யாராவது இறந்தால், அந்த சடலத்தைக்கூட தங்கள் ஊர் வழிய எடுத்துச் செல்ல மறுக்கிறது ஹரிஷ் உத்தமனைச் சேர்ந்த இன்னொரு சமூகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணு விஷால் மாநிலத்திலேயே முதல் மாணவனாக 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். விஷ்ணுவை படிக்க வைத்த பார்த்திபன், அவரை கலெக்டராக்கி தன் இன மக்களுக்கு நல்லது செய்ய வைக்க ஆசைப்படுகிறார். ஆனால், போலீஸான ஹரிஷ் உத்தமன் மூலம் விஷ்ணுவை படிக்க விடாமல் சில சதித்திட்டங்களை செய்கிறார்கள். இந்த சதித்திட்டங்களை முறியடித்து விஷ்ணு கலெக்டரானாரா, இல்லையா? பார்த்திபன் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்ததா இல்லையா? என்பதே ‘மாவீரன் கிட்டு’.

படம் பற்றிய அலசல்

இந்த 2016லும் தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சாதிய பிரச்சனைக்கெதிராக தைரியமாக குரல் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். அதற்காக 1987ல் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். எடுத்துக் கொண்ட பிரச்சனையும், அதற்கான தீர்வும் மிக முக்கியமானதாக இருந்தாலும், அவர் சொல்ல வந்த விஷயத்தில் அழுத்தமில்லாததால், ரசிகர்களுக்கு ஏற்பட வேண்டிய உணர்ச்சிகள் போதுமான அளவுக்கு கடத்தப்படவில்லை. அதோடு, படத்தின் க்ளைமேக்ஸ் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கும் என்பதையும் கொஞ்சம் முன்கூட்டியே யூகித்துவிட முடிவதும் படத்திற்கு பின்னடைவுதான்.

பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார் இமான். ஒளிப்பதிவும் படத்தின் தன்மைக்கேற்ப சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

ஹீரோவாக இல்லாமல் படத்தின் ஒரு மையக்கதாபாத்திரமாக யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் விஷ்ணு விஷால். அவரின் கேரியரில் ‘கிட்டு’வின் கதாபாத்திரத்திற்கு தனியொரு இடம் நிச்சயம் உண்டு. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யாவிற்கு பெரிய வேலைகள் இல்லை. இருந்தாலும், தன் கேரக்டரை அழகாக செய்துள்ளார்.

தீண்டாமைக்கெதிராக குரல் கொடுப்பவராக பார்த்திபனின் நடிப்பிற்கு ரசிகர்களிடம் கைதட்டல் கிடைத்துள்ளது. படம் முழுக்க அவரின் ராஜ்ஜியம்தான். மெயின் வில்லனான ஹரிஷ் உத்தமன் போலீஸ் கேரக்டருக்கு கரெக்டாகப் பொருந்தியிருக்கிறார். சாதித் திமிரை கண்முன் நிறுத்தியிருக்கும் அவரின் நடிப்பை தாராளமாக பாராட்டலாம். காமெடியே இல்லாத ஒரு திரைக்கதையில் சூரியின் பங்களிப்பு எதற்காக?

பலம்

கதைக்களமும், கையாளப்பட்டிருக்கும் பிரச்சனையும்
ஒளிப்பதிவு
பின்னணி இசை

பலவீனம்

அழுத்தமில்லாத திரைக்கதை
பாடல்கள்

மொத்தத்தில்...

சாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் படங்கள் பெரும்பாலும் வெட்டுக்குத்து, அடிதடி வகையறாவைச் சேர்ந்தவையாகவே இருக்கும். ஆனால், அதையெல்லாம் தவிர்த்துவிட்டும் ஒரு படத்தை கொடுக்க முடியும் என புதிய கோணத்தில் முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சொல்ல விஷயத்தின் வீரியம் ரசிகர்களுக்கு இன்னும் ஆழமாக பதியும்படியான ஒரு திரைக்கதை அமைத்திருந்தால், ‘மாவீரன் கிட்டு’வின் தியாகத்தை ரசிகர்கள் என்றென்றும் மறக்காமல் இருந்திருப்பார்கள்.

ஒரு வரி பஞ்ச்: அழுத்தமில்லை... ஆனாலும் இயக்குனரின் தைரியத்திற்கு ஒரு சல்யூட்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;