பழைய வண்ணாரப்பேட்டை - விமர்சனம்

ஏமாற்றவில்லை!

விமர்சனம் 2-Dec-2016 11:38 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Mohan.G
Production : Sri Krishna Talkies
Starring : Prajin, Ashmitha
Music : Jubin
Cinematography : Farooq.J
Editing : Devaraj

பழைய வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவரும், அறிமுக இயக்குனருமான மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் இப்படம் அங்கு அவர் பார்த்த சில சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாம்! ‘பழைய வண்ணாரப்பேட்டை’ எப்படி?

கதைக்களம்

பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் பிரஜன் படிப்பு முடித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் அந்த ஏரியாவில் தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் நடக்கும் ஒரு கொலை சம்பவத்தில் பிரஜினின் அப்பாவி நண்பர் ஒருவர் குற்றவாளியாகிறார்! எந்தவொரு வழக்கு ஆனாலும் 21 மணிநேரத்திற்குள் குற்றவாளியை கண்டு பிடித்துவிடுவோம் என்று சவால் விடும் அந்த ஏரியா போலீஸ் அதிகாரியால் உண்மையான கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நண்பனை காப்பாற்ற களத்தில் இறங்கும் பிரஜன் அந்த கொலைக்குப் பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டு பிடித்து, நண்பனை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’யின் ஒன் லைன் ஸ்டோரி!

படம் பற்றிய அலசல்

ரௌடிசம், அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற விஷயங்களுக்கு பெயர் பெற்ற ஏரியா பழைய வண்ணாரப்பேட்டை! அங்கு நடக்கும் அதுபோன்ற சம்பவங்களை திரைக்கதையாக்கி, யதார்த்தமான காட்சி அமைப்புகளுடன் இப்படத்தை ஓரளவுக்கு ரசிக்கும்படியாக தந்து தனது முதல் முயற்சியிலேயே கவனம் பெறுகிறார் இயக்குனர் மோகன்.ஜி. படத்தின் முதல் முக்கால் மணிநேரம் கொஞ்சம் ஸ்லோவாக பயணித்தாலும், நண்பனை காப்பாற்ற பிரஜன் களத்தில் குதிப்பதிலிருந்து படம் விறிவிறுப்படைகிறது. அந்த கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டறிவதில் பிரஜன் மற்றும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் ஆகியவற்றை யதார்த்தம் மீறாத காட்சி அமைப்புக்களுடன் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருப்பதால் நம்மால் கதையுடன் ஒன்றி பயணிக்க முடிகிறது. பாடல் காட்சிகள், காமெடி காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகள் போன்ற பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதையுடன் மட்டுமே பயணித்திருக்கும் மோகன்.ஜி.யின் முயற்சியை பாராட்டலாம். ஆனால் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பை கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை. அறிமுக இசை அமைப்பாளர் ஜூபின் இசையில் கதையுடன் ஒட்டி வரும் இரண்டு பாடல்கள் ரசிக்க முடிகிறது. பழைய வண்ணாரப்பேட்டையின் அழகையும், கம்பீரத்தையும் ஒளிப்பதிவாளர் பாருக் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

நடிகர்களின் பங்களிப்பு

நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக வரும் பிரஜன் தான் ஏற்ற கதாபாத்திரத்தை தனது சிறந்த நடிப்பால் நிறைவு செய்திருக்கிறார். பிரஜனின் காதலியாக வரும் அஷ்மிதா கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிந்து விடுகிரார், போலீஸ் அதிகாரியாக வரும் ரிச்சர்டுக்கு இப்படத்தில் நல்ல கேரட்கர்! நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். பிரஜனுக்கு உதவி செய்பவராக வரும் நிஷாந்த், அவரது காதலியாக வரும் காஜல், கதையில் முக்கியத்துவமில்லாத கேரக்டரில் வந்தாலும் கவனம் பெற வைக்கும் கருணாஸ் மற்றும் பாடகர் வேல்முருகன், கானா பாலா, மணிமாறன், தீனா என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

பலம்

எடுத்துக்கொண்ட கதையை ஓரளவுக்கு நேர்த்தியாக சொல்லியிருக்கும் விதம்
நடிகர்களின் பங்களிப்பு

பலவீனம்

ஸ்லோவாக பயணிக்கும் முதல் முக்கால் மணிநேரம்
ரசிகர்கள் எதிர்பார்க்கும் பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லாதது.

மொத்தத்தில்…

சென்னையின் ஒரு பகுதியான பழைய வண்ணாரப்பேட்டையின் நிஜ முகம் என்ன என்பது தெரியாதவர்களுக்கு இப்படம் ஒரு புதிய அனுபவத்தை தர வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : ஏமாற்றவில்லை!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை சண்டை காட்சி - வீடியோ


;