சைத்தான் - விமர்சனம்

ஆவரேஜ் த்ரில்லர்!

விமர்சனம் 1-Dec-2016 4:00 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Pradeep Krishnamoorthy
Production : Vijay Antony Film Corporation (Fathima Vijay Antony)
Starring : Vijay Antony, Arundathi Nair
Music : Vijay Antony
Cinematography : Pradeep Kalipurayath
Editing : Veera Senthil Raj

‘பிச்சைக்காரன்’ படத்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப் பிறகு விஜய்ஆண்டனியின் மார்க்கெட் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது. இந்நிலையில், அவரின் அடுத்த படமான ‘சைத்தான்’ இன்று தமிழ், தெலுங்கு என உலகமெங்கும் 1300க்கும் அதிகமான திரையரங்குளில் வெளியாகியுள்ளது. ‘சைத்தான்’ சாதித்தானா?

கதைக்களம்

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் விஜய்ஆண்டனி, அருந்ததி நாயரைத் திருமணம் செய்தபிறகு வினோதமான பிரச்சனை ஒன்றுக்கு ஆளாகிறார். யாரோ ஒருவர் தன்னுடன் பேசுவதுபோன்று கற்பனை செய்யும் விஜய் ஆண்டனி நிறைய மனக்குழப்பங்களுக்கு ஆளாகிறார். அதன்பிறகு அந்தகுரல் அவரை தற்கொலை செய்துகொள்ளும்படி கட்டளையிடுகிறது. இந்த பிரச்சனைகளால் விஜய்ஆண்டனியின் நண்பரான ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆக்ஸிடென்ட் ஒன்றில் இறந்துபோகிறார். தனக்கிருக்கும் பிரச்சனையால் சுற்றியிருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரும் விஜய் ஆண்டனி, மனோத்துவ நிபுணர் கிட்டியிடம் சிகிச்சை பெறுகிறார். விஜய் ஆண்டனியை மெஸ்மரிஸம் செய்து, அவரை அவரின் கடந்தகால வாழ்க்கைக்குள் கொஞ்சம் கொஞ்சம் பின்னோக்கி அனுப்புகிறார். அதில் விஜய் ஆண்டனிக்கு பல அதிர்ச்சியான சம்பவங்கள் மனக்கண்ணில் வந்துபோகின்றன.

உண்மையிலேயே விஜய் ஆண்டனிக்கு இருக்கும் பிரச்சனை என்ன? அவரின் கடந்தகால வாழ்க்கையில் என்ன நடந்தது? இந்த பிரச்சனையிலிருந்து அவர் வெளிவந்தாரா இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு ‘சைத்தான்’ படம் விடையாக விரிகிறது.

படம் பற்றிய அலசல்

ஒரு பரபரப்பான த்ரில்லர் நாவலைப் படித்ததைப்போன்ற உணர்வை ‘சைத்தான்’ படம் மூலம் ரசிகர்களுக்கு தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அவரின் திரைக்கதைக்கு ‘ஆ...’ நாவல் மூலம் பெரிதாக உதவியிருக்கிறார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. படத்தின் முதல்பாதியில் எந்தவித சஸ்பென்ஸ் முடிச்சுகளையும் அவிழ்க்காமல் இடைவேளைவரை ரசிகர்களுக்கு ‘அடுத்து என்ன நடக்கும்’ என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், விறுவிறுப்பு அதிகமாக இருக்க வேண்டிய இரண்டாம்பாதி, ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் அழுத்தமில்லாமல் உருவாக்கப்பட்டிருப்பதும், படத்தின் கடைசி 20 நிமிடங்கள் ஸ்லோவாக பயணிப்பதாலும்தான். அதோடு, க்ளைமேக்ஸ் சண்டை காட்சிகளை ஸ்கேர்லட் ஜோஹன்ஸன் நடித்த ‘லூஸி’ படத்திலிருந்தும், ‘ஈக்குலைஸர்’ படத்திலிருந்தும் எடுத்து காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்றவை படத்தின் தன்மைக்கேற்ப பயன்பட்டிருக்கின்றன. ‘ஜெயலட்சுமி’ பாடல் சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கிறது. மற்ற பாடல்கள் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

படத்திற்குப் படம் நடிப்பில் மெருகேறி வருகிறார் விஜய் ஆண்டனி. அதிலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும், கேரக்டர்களும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து அவரின் பயணம் இதுபோன்றே இருக்கும்பட்சத்தில், தனக்கென ஒரு தனி இடத்தை விஜய் ஆண்டனி நிச்சயம் பிடிப்பார். ஷர்மா, தினேஷ் என இரண்டு கேரக்டர்களிலும் விஜய் ஆண்டனியின் நடிப்பு அருமை. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அருந்ததிக்கும் இரண்டு கேரக்டர்கள். அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், மீரா கிருஷ்ணன், சாருஹாசன் ஆகியோர் சின்னச் சின்ன ரோல்கள் மூலம் கவனம் பெற்றிருக்கின்றனர்.

பலம்

1. கதை
2. நடிகர்களின் பங்களிப்பு
3. பின்னணி இசை

பலவீனம்

1. ஃப்ளாஷ்பேக் காட்சிகள்
2. க்ளைமேக்ஸ்

மொத்தத்தில்...

ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையிலெடுத்திருக்கும் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, அதை ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக்குவதில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். குறிப்பாக படத்தின் இரண்டாம்பாதியில் வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் அதிகப்படுத்தியிருந்தால் ரசிகர்களுக்கு ‘சைத்தான்’ மறக்கமுடியாத அனுபவமாக அமைந்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : ஆவரேஜ் த்ரில்லர்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;