இளமி – விமர்சனம்

யதார்த்தம் நிறைந்த வீர விளையாட்டு!

விமர்சனம் 26-Nov-2016 1:15 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Julian Prakash
Production : Joe Productions
Starring : Yuvan, Anu Krishna, Akhil, Ravi Mariya
Music : Srikanth Deva
Cinematography : Yuga

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து அறிமுக இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் இயக்கியிருக்கும் படம் ‘இளமி’. ஜல்லிக்கட்டில் வெளி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என்று மூன்று ரகம் இருக்கிறது என்ற விளக்க உரை காட்சியுடன் துவங்கும் படத்தில் வடம் ஜல்லிக்கட்டை மையமாக்கியுள்ளார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ்! ‘இளமி’யின் ஆட்டமும், வீரமும் எப்படி?

கதைக்களம்

கிராமத்து பெரியவர் ரவிமரியாவின் மகள் இளமியும் (அனு கிருஷ்ணா), யுவனும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். இரு கிராமங்களுக்கிடையே இருந்து வரும் சாமி கும்பிட்டு பிரச்சனையில், தனது வடம் ஜல்லிக்கட்டு காளையை யார் அடக்குகிறாரோ அவர் சாமியை மட்டுமல்ல, நான் குலசாமி மாதிரி வளர்க்கும் என் மகள் இளமியையும் மனைவியாக்கி அழைத்து செல்லலாம் என்று சவால் விடுகிறார் ரவி மரியா! சூழ்ச்சியால் காளைகளை அடக்கி ஊரில் பெரும் வீரனாக திகழும் அகில் மற்றும் யுவன் உட்பட 9 இளைஞர்கள் காளைய அடக்க களத்தில் இறக்கப்படுகிறார்கள். இந்த சவாலில் ரவிமரியாவின் காளையை அடக்கி சாமி சிலையையும், இளமியையும் யார் அடைகிறார்கள் என்பதற்கு விடை தருகிறது ‘இளமி’யின் க்ளைமேக்ஸ்.

படம் பற்றிய அலசல்

கதை 1715 காலகட்டத்தில் நடப்பது மாதிரி என்ற விளக்கத்தோடு படம் துவங்குகிறது. அந்த காலகட்டத்து பின்னணியை, மக்களை அப்படியே நம் கண் முன் நிறுத்தி, தமிழனின் வீரமும் காதலும் கலந்த வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடித்து காட்டியுள்ள இயக்குனர் ஜூலியனுக்கு முதலில் ஒரு சபாஷ். எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களையும் திரைக்கதையில் புகுத்தாமல் அந்த காலத்து வெள்ளந்தியான மக்களின் நடை, உடை, பேச்சு மொழி உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி இயக்கியிருக்கும் ஜூலியன் பிரகாஷுக்கு கலை இயக்குனர் ஜான் பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் யுகா, இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் பக்க பலமாக செயல்பட்டுள்ளனர். சின்ன பட்ஜெட் படம் என்பதால் காளை சம்பந்தப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளிலுள்ள குறைபாடுகளை நாம் மறந்து விடலாம்! ஆனால் யாரும் எதிர்பார்க்காத அந்த கொடூரமான க்ளைமேக்ஸை காட்சியை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. இந்த குறைகளை தவிர்த்து பார்த்தால் ‘இளமி’ நல்ல ஒரு யதார்த்த படைப்பே!

நடிகர்களின் பங்களிப்பு

கதையில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் வரும் யுவன், அகில் ஆகியோரில் அகில் நடிப்பிலும் கெட்-அப்பிலும் அதிக ஸ்கோர் செய்துள்ளார். கத்தி’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த அனுகிருஷ்ணா நடிப்பில் ‘இளமி’யாக வாழ்ந்துள்ளார். ரவிமரியா, மதுரை பேரரசின் தளபதியாக வரும் கிஷோர், தவசி, ஊர் மக்களாக வருபவர்கள் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரையும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

பலம்

1. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை
2. 1715 காலகட்டத்து மக்களை, பின்னணியை கையாளப்பட்ட விதம்
3. கலை இயக்கம், இசை

பலவீனம்

1. கிராஃபிக்ஸ் காட்சிகள்
2. கிளைமேக்ஸ்

மொத்தத்தில்…

எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களையும் நம்பாமல் அந்த காலத்து ஜல்லிக்கட்டின் மகத்துவத்தை, மக்களின் வாழ்வியலை இன்றுள்ள மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படத்தை, தயாரித்து இயக்கியிருக்கும் ஜூலியன் பிரகாஷுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : யதார்த்தம் நிறைந்த வீர விளையாட்டு!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;