டியர் ஸிந்தகி - விமர்சனம்

‘டியர் ஸிந்தகி’ உரையாடல்கள் நிறைந்த ‘வாழ்க்கைப் பாடம்’!

விமர்சனம் 25-Nov-2016 4:34 PM IST Top 10 கருத்துக்கள்

மாஸ் மசாலா படங்களில் நடித்து பெரிதாக வசூலை அள்ளிக்குவிக்கும் ஷாருக்கான், அவ்வப்போது சில வித்தியாசமான முயற்சிகளையும் செய்வார். அந்தவகையில் தில்வாலே படத்திற்குப் பிறகு ஃபேன் படத்தை வெளியிட்ட ஷாருக், இப்போது ‘ராயீஸ்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ‘டியர் ஸிந்தகி’ படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். அவர் முயற்சிக்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி?

விளம்பரப்பட ஒளிப்பதிவாளராக இருக்கும் அலியா பட்டிற்கு படம் ஒன்றை இயக்க வேண்டுமென்பது நீண்டநாள் கனவு. சிற்சில காரணங்களால் தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வந்து மும்பையில் தங்கி தன் தோழிகளுடன் இணைந்து வேலைகளை கவனித்து வருகிறார். வேலையில் சந்தோஷமாக பயணிக்கும் அலியா, தனக்கான துணையைத் தேடுவதில் இரண்டுமுறை தோற்கிறார். இந்த சூழ்நிலையில், அலியா தங்கியிருக்கும் மும்பை வீட்டை காலி செய்யச் சொல்வதால், வேறுவழியில்லாமல் கோவாவிலிருக்கும் தன் பெற்றோர்களுடனே தங்க வேண்டிய சூழல் அலியாவிற்கு வருகிறது. தூக்கமில்லாமல், மன அழுத்தத்துடன் அங்கே சுற்றிவரும் அலியாவின் கண்ணில் மனோதத்துவ டாக்டர் ஷாருக்கான் படுகிறார். தன் பிரச்சனைகளுக்கு அவர்மூலம் தீர்வு காண நினைக்கிறார் அலியா. அதன்பிறகு ஷாருக்கானுக்கும், அலியாவிற்கும் இடையே நடக்கும் மெலோ டிராமா உரையாடல்கள்தான் ‘டியர் ஸிந்தகி’.

அலியா பட் பெயருக்குப் பிறகுதான் திரையில் ஷாருக்கான் பெயரையே போடுகிறார்கள் என்றால், இப்படத்தில் கதாநாயகிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. சொல்லப்போனால் ஷாருக் இப்படத்தில் ஒரு குணச்சித்திர நடிகராகத்தான் தோன்றியிருக்கிறார். ஒரு யுவதியின் பிரச்சனைகளை ஒரு மனோதத்துவ டாக்டர் எப்படி நீக்குகிறார் என்பதைச் சொல்லும் ‘டியர் ஸிந்தகி’, ‘நம் வாழ்க்கையை காதலிக்க வேண்டும்’ என்ற உண்மையையும் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது.

மொத்த படமும் ஆமை வேகத்தில்தான் நகர்கிறது. திடீர் திருப்பங்களோ, பரபரப்பான காட்சிகளோ எதுவுமில்லாமல், சொல்லவந்த விஷயத்தை ஆற அமர ‘பேசிப்பேசியே’ தீர்க்க முயன்றிருக்கிறார் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை இயக்கிய கௌரி ஷிண்டே. ஒருவகையில், இக்கதையை இப்படி எடுப்பதுதான் அதற்கு சரியாக இருக்கும் என்றாலும், அதுவே படத்திற்கு பலவீனமாக மாறியிருப்பதையும் மறுப்பதற்கில்லை. அழகான தத்துவங்களையும், ஆழமான கருத்துக்களையும் எவ்வளவு நேரம்தான் ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்க முடியும்?

ஆனால், பொறுமையாக உட்கார்ந்து ரசிக்கும் மனேபாவமிருக்கும் ரசிகர்களுக்கு ‘டியர் ஸிந்தகி’ நிச்சயம் பிடித்துப்போகும். காரணம் அலியா பட்டின் அட்டகாசமான நடிப்பும், அவரின் ‘க்யூட் எக்ஸ்பிரசன்ஸும்’. அதோடு ஒளிப்பதிவு, இசை போன்றவையும் படத்தை அழகாக்கியிருப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. ‘மாஸ்’ இமேஜை ஒரம்கட்டி வைத்துவிட்டு, தனக்குள்ளியிருக்கும் அற்புதமான நடிகனை வெளிப்படுத்துவதற்கு டாக்டர் ஜஹாங்கீர் கான் கேரக்டர் ஷாருக்கிற்கு பயன்பட்டிருக்கிறது. அத்தனை நிதானமான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாருக்.

மொத்தத்தில்... ‘டியர் ஸிந்தகி’ உரையாடல்கள் நிறைந்த ‘வாழ்க்கைப் பாடம்’!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராயீஸ் - டிரைலர்


;