Direction : Gowtham Sundararajan
Production : Sugar & Spice Entertainment
Starring : Aravind Akash, Chandini Tamilarasan, Aswathy
Music : Divakar Subramaniam
Cinematography : Aravind Kamalanathan
Editing : C. M. Selvakumar
மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகனும், நடிகருமான மேஜர் கௌதம் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ‘கண்ல காச காட்டப்பா’ காசை வசூல் செய்யும் படமாக அமைந்திருக்கிறதா?
கதைக்களம்
அரசாங்கம் கழிவறை கட்ட ஒதுக்கும் நிதி 100 கோடி ரூபாயை மந்திரி ஒருவர் ஆட்டைப் போடுகிறார். இந்த பணம் ஹவாலா முறையில் மலேசியா வழியாக கொலம்பியா சென்று மந்திரியின் வங்கி கணக்கில் சேரவேண்டும். பணத்தை மலேசியா வழியாக கொலம்பியா கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்கிறார் விச்சு விஸ்வநாத். மலேசியா செல்லும் விச்சு விஸ்வநாத் மந்திரியை ஏமாற்றி அந்த பணத்தை ஆட்டை போட நினைக்கிறார். அதே நேரம் விச்சு விஸ்வநாத்திடமிருந்து அந்த பணத்தை அடிக்க மலேசியாவில் வாழ்ந்து வரும் அரவிந்த் ஆகாஷ், அவரது தாத்தா எம்.எஸ்.பாஸ்கர், ‘பார்’ நடன அழகி சாந்தினி, திருட்டை தொழிலாக கொண்ட பெண் அஸ்வதி, மலேசியாவில் ‘டான்’ ஆக இருக்கும் கல்யாண், ‘யோகி’ பாபு… இப்படி ஒரு திருட்டு கும்பலே திட்டம் போடுகிறது. கடைசியில் அந்த 100 கோடி ரூபாய் யார் கைக்குப் போகிறது? என்பது தான் ‘கண்ல காச காட்டப்பா’வின் கதைக்களம்.
படம் பற்றிய அலசல்
‘பிளாக் காமெடி’ பட வரிசையில் இந்த ‘கண்ல காச காட்டப்பா’ ரசிக்கும் படியான ஒரு படமாக அமைந்துள்ளது. லாஜிக் விஷயங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு கிரேசி மோகன், சுந்தர்.சி முதலானோர் பாணியில் ஒரு காமெடி திரைக்கதையை அமைத்து படமாக்கியுள்ள இயக்குனர் மேஜர் கௌதம் தனது முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்! படத்தின் முதல் அரை மணிநேர காட்சிகள் கொஞ்சம் போரடிக்க வைத்தாலும், அதன் பிறகு சூடுபிடிக்கும் காமெடி திரைக்கதை கடைசி வரை கலகலக்க வைக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை கேரக்டர்களையும் கெட்டவர்களாக, திருடர்களாக சித்தரித்துள்ள மேஜர் கௌதமின் துணிச்சலை பாராட்டலாம். ‘பணம் என்றால் பத்தும் செய்யும்’ என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி மலேசியா முருகன் கோவிலில் நடைபெறும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தியேட்டரில் அப்படியொரு சிரிப்பு! காதல், டூயட் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் இல்லாமலும் ஒரு படத்தை ஜாலியாக, ரசிக்கும் படியாக தர முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் மேஜர் கௌதம். அதற்கு மலேசியாவின் அழகை அழகாக படம் பிடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ள ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதனின் பணியும், வித்தியாசமான பின்னணி இசையை தந்த திவாகர் சுப்பிரமணியத்தின் பணியும் பாராட்டத்தக்கது.
நடிகர்களின் பங்களிப்பு
அரவிந்த் ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், விச்சு விஸ்வநாத், சாந்தினி, அஸ்வதி, கல்யாண், யோகி பாபு என படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் சம்மான கேரக்டர்கள்! அத்தனை பேரும் குறை சொல்ல முடியாத நடிப்பையும் வழங்கியுள்ளனர். ஆனால் தொடர்ந்து தனது ஸ்டைலில் பேசிக்கிட்டே இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தான் கொஞ்சம் போரடிக்க வைத்தார்.
பலம்
நகைச்சுவையாக பயணிக்கும் திரைக்கதை
எல்லா கேரட்கடர்களுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது
பின்னணி இசை
பலவீனம்
கொஞ்சம் போரடிக்க வைக்கும் படத்தின் முதல் அரை மணி நேர காட்சிகள்
நம்ப முடியாத சில காட்சி அமைப்புகள்
அதிகபடியான லாஜிக் மீறல்கள்!
மொத்தத்தில்…
லாஜிக் விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் இரண்டு மணிநேரம் சிரித்து மகிழ விரும்புவோருக்கு இந்த ‘கண்ல காச காட்டப்பா’ படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
ஒருவரி பஞ்ச் : ‘காசு’ மோசம் போகாது!
ரேட்டிங் : 4/10
‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும்,...
‘சினிமா ப்ளாட்ஃபார்ம்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T. ரித்தீஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான்...
ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...