பட்டதாரி - விமர்சனம்

தேர்ச்சி பெறவில்லை!

விமர்சனம் 25-Nov-2016 10:37 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : A. R. Sankar Pandi
Production : S Elangovan Latha
Starring : Abi Saravanan, Sayana Santhosh, Ambani Shankar
Music : SS Kumaran
Cinematography : Suriyan

இயக்குனர் களஞ்சியத்திடம் உதவியாளராக பணிபுரிந்த ஏ.ஆர்.சங்கரபாண்டி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பட்டதாரி’ எப்படி?

கதைக்களம்

அபிசரவணன் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் படிப்பு முடித்து வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். இவர்களில் அபி சரவணன் தவிர்த்து மற்ற நான்கு பேரும் பெண்களை தப்பான நோக்கத்திற்காக காதலிப்பதுபோல் நடிப்பது, ‘சரக்கு’ அடிப்பது என்ற வேலையாகவே இருக்கிறார்கள். இந்நிலையில், எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத அபிசரவணனை விரும்புகிறார் கல்லூரியில் படிக்கும் அதிதி. ஆனால் அபி சரவணன் அதிதியை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இதனால் வெறுத்துப் போகும் அதிதி, அபி சரவணனிடம் அதற்கான காரணத்தை கேட்க, ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சி விரிகிறது. அந்த ஃப்ளாஷ் பேக் என்ன? அபிசரவணனும், அதிதியும் இணைந்தார்களா? இதற்கெல்லாம் விடை தரும் படமே ‘பட்டதாரி’.

படம் பற்றிய அலசல்

‘ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன்’ என்ற அரதப்பழசான ஒரு கதையை கையிலெடுத்து, அதை மதுரைப் பின்னணியில் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.சங்கரபாண்டி. கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் எதிலும் புதுமையோ, சுவாரஸ்யமோ இல்லை. காமெடிக்காக எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கூட படத்திற்கு கை கொடுக்கவில்லை. எஸ்.எஸ்.குமரன் இசையில் அமைந்துள்ள இரண்டு பாடல்கள் அதை படமாக்கப்பட்ட விதம் ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது. ‘படித்தவர்கள் மட்டும் பட்டதாரிகள் கிடையாது! படிக்காது சிந்தித்து செயல்பட்டு வெற்றிபெறும் ஒவ்வொருவரும் பட்டதாரிகளே’ என்ற கருத்தை வலியுறுத்த முன் வந்திருக்கும் இயக்குனர் சங்கரபாண்டி, அதற்கேற்றபடி அழுத்தமான காட்சிகளை அமைத்து படமாக்கியிருந்தால் இந்த ‘பட்டதாரி’ ஓரளவுக்கு ரசிக்கத்தக்க படமாக அமைந்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

‘அட்டகத்தி’, ‘குட்டிப்புலி’ உட்பட சில படங்களில் நடித்துள்ள அபி சரவணன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் அவரது திறமையை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. கதாநாயகியாக வரும் அதிதி, ஃப்ளாஷ்பேக் காட்சியில் அபி சரவணனின் காதலியாக வரும் ராசிகா மற்றும் அபி சரவணனின் நான்கு நண்பர்கள் என அனைவரும், தங்களது கேரக்டர்களுக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை பலவீனமாக அமைந்திருப்பதால் அவர்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை. போலீஸ் அதிகாரிகளாக வரும் ’மகாநதி’ சங்கர், ஜெயவேணி ஆகியோர் கவர்கின்றனர்.

பலம்

நடிகர், நடிகைகளின் நேர்த்தியான பங்களிப்பு மற்றும் இரண்டு பாடல்கள்!

பலவீனம்

கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, பின்னணி இசை என படத்தின் பெரும்பாலான அம்சங்களும் பலவீனங்களாக அமைந்துவிட்டன.

மொத்தத்தில்...

அரதப்பழசான கதை என்றாலும் திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அமைத்து படமாக்கியிருந்தால் ‘பட்டதாரி’யை ரசிகர்கள் ஓரளவுக்கு வரவேற்றிருப்பார்கள்!

ஒருவரி பஞ்ச் : தேர்ச்சி பெறவில்லை!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;