கவலை வேண்டாம் - விமர்சனம்

திரைக்கதையில் ‘கவனம் வேண்டும்’!

விமர்சனம் 24-Nov-2016 3:44 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Deekay
Production : RS Infotainment
Starring : Jiiva, Kajal Aggarwal, Bobby Simha, Sunaina
Music : Leon James
Cinematography : Abinandhan Ramanujam
Editing : T. S. Suresh

‘யாமிருக்க பயமே’ வெற்றிக்குப் பிறகு ‘கவலை வேண்டாம்’ படத்தை இயக்கியிருக்கிறார் டிகே. 2வது படமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்துடன், நடிகர் ஜீவாவிற்கும் ஒரு ‘பிரேக்கிங் வெற்றி’யை கொடுத்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் டிகே என்ன யுக்தியை கையாண்டிருக்கிறார்?

கதைக்களம்

காதலித்து கல்யாணம் செய்துகொண்ட 2வது நாளே, மனஸ்தாபம் காரணமாக ஜீவாவைவிட்டுப் பிரிகிறார் காஜல் அகர்வால். இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜீவாவைத் தேடி வரும் காஜல், விவாகரத்து விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்கிறார். ஒரு கண்டிஷனுடன் அதற்கு சம்மதிக்கிறார் ஜீவா. அது என்ன கண்டிஷன்? ஜீவாவுக்கும் காஜலுக்கும் இடையே என்ன கருத்து வேறுபாடு? மீண்டும் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா? என்பதுதான் ‘கவலை வேண்டாம்’.

படம் பற்றிய அலசல்

‘சிவா மனசுல சக்தி’ படத்தின் ஜாலி, கேலிகளையும், ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் ஈகோ ரொமான்ஸையும் கலக்கியடித்து, அதில் தன் ஸ்டைல் ‘அடல்ட் காமெடி’களைத் தூவி ‘கவலை வேண்டாம்’ படமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் டிகே. ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா ஆகிய நட்சத்திரப்பட்டாளத்துடன் ஆர்.ஜே. பாலாஜி, பால சரவணன், மயில்சாமி, மனோபாலா போன்றோரின் காமெடி கலாட்டாக்களுடன், படம் பார்க்க வரும் ரசிகர்களை ‘கவலை வேண்டாம்.... சிரிக்க வைப்பது மட்டுமே எங்கள் நோக்கம்’ என இறங்கி விளையாடியிருக்கிறது டிகே டீம். குறிப்பாக, படத்தின் போலீஸ் காட்சி ஒன்றிற்கும், க்ளைமேக்ஸ் படகு காட்சி ஒன்றிற்கும் தியேட்டரில் இடைவிடாத சிரிப்பு மழை. என்னவொன்று... குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து ரசிக்கும்படி இந்த காட்சிகள் அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கதையும், காட்சியமைப்புகளும் அரதப்பழசாக இருப்பது, முக்கிய கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை வடிவமைப்பதில் குழம்பியிருப்பது போன்றவை படத்திற்கு பலவீனங்களாக அமைந்துவிட்டன. அதோடு, சிரிக்க வைப்பது மட்டுமே குறிக்கோள் என்ற தொணியில் படம் நகர்வதால், படத்தின் சில முக்கிய சென்டிமென்ட் காட்சிகளும் அழுத்தமில்லாமல் கடந்து போகின்றன. முழுக்க முழுக்க மலைப்பிரதேச பின்னணியில் நகரும் படத்தை தனது கேமரா கண்கள் மூலம் கலர்ஃபுல்லாக காட்டி அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார் லியோன் ஜேம்ஸ்.

நடிகர்களின் பங்களிப்பு

இதுபோன்ற கேரக்டர்களை ஏற்கெனவே ‘ஜஸ்ட் லைக் தட்’ செய்திருப்பதால் ‘கவலை வேண்டாம்’ அர்விந்த் கேரக்டரிலும் அற்புதமாகப் பொருந்தியிருக்கிறார் ஜீவா. நக்கல், நய்யாண்டி, ரொமான்ஸ் என தனது வழக்கமான எனர்ஜிடிக் இளைஞனை இந்தமுறையும் ரசிகர்கள் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஜீவா. காஜலுக்கு வழக்கம்போல் கண்ணை உருட்டி, மிரட்டி காதலனிடம் சண்டைபோடும் கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார். வயதைக் குறைப்பதற்காக கொஞ்சம் உடல் மெலிந்திருக்கிறார் காஜல். ஆனால், பழைய ‘பப்ளினஸ்’ மிஸ்ஸிங். பாபி சிம்ஹா, சுனைனா இருவரும் கதைக்குள் எதற்காகவோ வந்து, ஒன்றுமே செய்யாமல் காட்சிகளில் ஒரு கேரக்டராக நின்றுவிட்டு செல்கிறார்கள். அதனால், ரசிகர்களின் மனதில் நிற்கவில்லை. ஆர்.ஜே. பாலாஜி, பால சரவணன், மயில்சாமி ஆகியோரின் காமெடிகள் ‘ஏ’டாகூடாமாக இருந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.

பலம்

1. நட்சத்திரக் கூட்டணி
2. காமெடி காட்சிகள்
3. ஒளிப்பதிவு, இசை

பலவீனம்

1. அரதப்பழசான கதையும் காட்சியமைப்புகளும்
2. கதாபாத்திர வடிவமைப்பு

மொத்தத்தில்...

படம் பார்க்க வரும் ரசிகர்களை ஜாலியாக சிரிக்க வைக்க வேண்டுமென்ற டிகேயின் எண்ணத்தை ஓரளவுக்கு ‘கவலை வேண்டாம்’ படம் பூர்த்தி செய்திருந்தாலும், ஒரு முழுப்படமாக திருப்தியைத் தரவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. கதாபாத்திரங்களுக்கிடையே நிலவும் குணாதிசய குழப்பங்களை சரிசெய்து, திரைக்கதையை சீராக அமைத்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : திரைக்கதையில் ‘கவனம் வேண்டும்’!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;